
பசிக்கு அறுசுவை உணவுகள் எத்தனை இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஏதேனும் ஊறுகாய் வகைகளை தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அந்த உணவு எளிதில் ஜீரணம் ஆகும். விதவிதமான ஊறுகாய் வகைகள் இருந்தால் பழைய சோறு கூட தேவாமிர்தமாக இனிக்கும் என்பார்கள் அப்படி இங்கு சில ஊறுகாய் வகைகளை காண்போம்.
பச்சை மிளகாய் ஊறுகாய்
தேவை:
பச்சை மிளகாய் -1/2 கிலோ
உப்பு - 100 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
மஞ்சள் தூள் - 5 கிராம்
புளி - தேவையான அளவு
எள்ளு - 50 கிராம்
கடுகு - 25 கிராம்
நல்லெண்ணெய் - 1/4 லிட்டர்
செய்முறை:
நல்ல தரமான பச்சை மிளகாய்களை வாங்கி காம்புகளை நீக்கி கழுவிக்கொள்ளவும். தேவையான புளியை ஊறவைத்து கெட்டியான புளிக்கரைசல் எடுத்து வைக்கவும். அடுப்பில் அடிகனமான கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மிளகாய்களை லேசாக கீறிக்கொண்டு எண்ணெயில் நன்கு வதக்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி பச்சை புளி வாசனை போகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இப்போது வெந்தயம், எள், கடுகு ஆகியவற்றை பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியையும் கலவையில் கலந்து புளி வாசனை போய் கெட்டியான பதத்தில் எண்ணெய் மிதங்கும்போது அடுப்பில் இருந்து இறக்கி சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.
தக்காளி ஊறுகாய்
தேவை:
சிவப்பான நாட்டுத் தக்காளிகள் - 1 கிலோ, மிளகாய் தூள் - 100 கிராம்
சோம்பு - 15 கிராம்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
வினிகர் - 20 மில்லி அல்லது
எலுமிச்சை சாறு
நல்லெண்ணெய் - தேவையான அளவு உப்பு- தேவைக்கு
புளி- 100 கிராம்
பெருங்காயம் - 1 டீஸ்பூன்
சிட்ரிக் அமிலம் (தேவைப்பட்டால்) - சிறிது
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
எண்ணையை சுடவைத்து கடுகு சோம்பு தாளித்து நன்றாக நறுக்கிய தக்காளி பழங்களை சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து ஊற்றி பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும். மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு மற்ற மசாலா சாமான்களை கலந்து ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். பெருங்காயம் வெந்தயத்தை எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்து இறக்கும்போது சேர்க்கவும். வினிகர் அல்லது எலுமிச்சைசாறு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
பாகற்காய் ஊறுகாய்
தேவை:
சிறிய பாகற்காய் - 1/2 கிலோ
மிளகாய்த்தூள்- 50 கிராம்
பெருங்காயம் - 5 கிராம்
வெந்தயம் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
கடுகு - 1
வினிகர் அல்லது எலுமிச்சை பழச்சாறு - சிறிது
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
பாகற்காய்களை நன்றாக கழுவி கீறிக்கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் இவற்றை கலந்து உள் பக்கத்தில் தடவிக்கொள்ளவும். இந்த பாகற்காய்களை சுத்தமான புட்டியில் போட்டு அதில் கடுகு, பெருங்காயம், வெந்தயத்தை தாளித்துக்கொட்டவும். எலுமிச்சம் பழச்சாறு அல்லது வினிகரை ஊற்றி மேலே மிதக்கும் அளவுக்கு எண்ணெய் ஊற்றவும். இந்த கலவை ஊற ஊற பாகற்காயின் கசப்புகள் நீங்கி ருசியாக இருக்கும்.
குறிப்பு - பொதுவாக ஊறுகாய் வகைகளுக்கு நல்லெண்ணெய் சேர்ப்பதும் கடுகு வெந்தயம் பெருங்காயம் வறுத்து பொடித்து சேர்ப்பதும் ருசி கூட்டும்.