
தயிர் வடை செய்யும்போது, வடையின் மேல் ஆங்காங்கே கத்தியால் ஆழமாக கீறிவிட்டு தயிரில் ஊறவைத்தால், தயிர் எளிதாக வடையினுள் சென்று ருசியைக்கூட்டும்.
மசால் வடை, ஆமை வடை செய்யும்போது கடலைப் பருப்பின் அளவைக் குறைத்துவிட்டு, ஊறவைத்த காபூல் சன்னாவைச் சேர்த்து வடை செய்தால் ருசியாக இருக்கும்.
வடைக்கு மாவு அரைக்கும்போது சிறிது தயிர் விட்டு அரைத்தால் வடை மிருதுவாக இருக்கும்.
பருப்பு வடை மீந்துவிட்டால் மறுநாள் வடை கறி செய்யலாம்.
உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறு வென்று இருக்கும்.
மசால் வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகம் போல் தோன்றினால், சிறிது பொட்டுக்கடலையை கரகர வென்று பொடி செய்து மாவில் கலக்கினால் மாவு இறுகிவிடும்.
பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊறவைத்த பருப்பு மற்றும் பொருட்களுடன் ஒரு டேபிள் ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். பிறகு மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கர கரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும்.
தயிர் வடை செய்யும்போது, வடைகளை வெந்நீரில் முக்கி எடுக்காமல், சூடான பாலில் தோய்த்து எடுத்து, தயிரில் ஊற வையுங்கள். தயிர் வடை ருசி மாறாமல், புளிப்பு வாடை வராமல் நீண்ட நேரம் நன்றாக இருக்கும்.
வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒன்றிரண்டு டீஸ்பூன் கார்ன் ஃப்ளேக்ஸை பொடித்துச்சேர்த்தால் போதும். உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் வடையின் சுவையும் அபாரமாக இருக்கும்.
வடைக்கு உளுந்தை ரொம்ப நேரம் ஊறவிடாமல், அரை மணி நேரம் ஊறவைத்து, கெட்டியாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்து உடனே வடை தட்டினால் எண்ணெய் குடிக்காமல் மிருதுவாக இருக்கும்.
உளுந்து வடை தட்டும்போது கொஞ்சம் அரிசி மாவை லேசாகத்தொட்டுத் தட்டினால் வடை மொறு மொறுப்பாக இருக்கும்.
உளுந்து வடைக்கு பருப்பு ஊறவைக்கும்போது ஒரு பிடி துவரம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்தால் வடை அதிகம் எண்ணெய் குடிக்காது. அதிக நேரம் ருசி மாறாமலும் இருக்கும்.