
எல்லோருக்கும் பிறர் தன்னை மதிக்க வேண்டும், மரியாதையுடன் நடத்த வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் இருக்கும். தங்களுடைய சில செயல்கள் மூலம் பிறரின் மரியாதையை எப்படிப் பெறுவது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
1. நேரம் தவறாமை: ஓரிடத்திற்கு இந்த நேரத்திற்கு வருவேன் என்று சொன்னால் சரியான நேரத்தில் அல்லது சற்று முன்னதாகவே அந்த இடத்தில் இருக்க வேண்டும். விசேஷங்கள், கூட்டங்கள் மட்டுமல்லாமல், சாதாரணமாக நண்பர்கள் சந்திப்பிலும் கூட சரியான நேரத்தில் நீங்கள் இருந்தால் பிறருடைய நேரத்தை நீங்கள் மிகவும் மதிக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால் உங்கள் மீது பிறருக்கு மரியாதை கூடும்.
2. குறைவாகப் பேசி நிறையக் கேட்பது: தான் மட்டும் பேச வேண்டும் என்று நினைப்பதற்குப் பதில், பிறர் பேசுவதை பொறுமையோடு கேட்க வேண்டும். சிலர் மற்றவர் பேச இடமளிக்காமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்களை யாருக்கும் பிடிக்காது. மற்றவர்கள் சொல்ல வருவதை உன்னிப்பாகக் கேட்டால் அவர்கள் உங்களை மிகவும் மதிப்பார்கள்.
3. சொன்னதைச் செய்தல்: ஒரு விஷயத்தை செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டிருந்தால் அதை செய்து முடித்து விட வேண்டும். அப்போதுதான் பிறர் உங்களை நம்புவார்கள். மரியாதையும் தருவார்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் விடும்போது மரியாதை கிடைக்காது.
4. பணிவாக இருத்தல்: எப்போதுமே பணிவாக இருந்தால் எல்லோருக்குமே பிடிக்கும். தனக்குதான் எல்லாம் தெரியும் என்று நடந்துகொள்ளக் கூடாது. பிறரை மனதார பாராட்ட வேண்டும். நான் சொல்வதுதான் சரி என்ற எண்ணத்தில் இருக்க கூடாது. எத்தனைப் பெரிய பதவியில் இருந்தாலும் பணிவோடு நடந்து கொள்கிறவர்களை இந்த உலகம் மிகவும் மதித்து மரியாதை செய்யும். பணிவு பிறர் மனதில் ஒரு உயர்ந்த இடத்தை பெற்றுத் தரும்.
5. தெளிவாகப் பேசுதல்: பேசும்போது மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் பேச வேண்டும். குழப்பமாகப் பேசுவது, வீணாக அதிக நேரம் பேசுவது, தேவையில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுவது போன்றவற்றை செய்யக் கூடாது. சுருக்கமாக, அதேசமயம் தெளிவாக பேச வேண்டும்.
6. அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல்: எல்லோரையும் பாரபட்சம் பார்க்காமல் மரியாதையுடன் நடத்த வேண்டும். அவர்களுடைய பதவி மற்றும் பணம், அந்தஸ்து இவற்றைப் பார்க்காமல் யாராக இருந்தாலும் மரியாதையுடன் நடத்த வேண்டும். பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் பணக்காரர்கள் மட்டுமல்லாமல் சாதாரண தூய்மை பணியாளர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் முதற்கொண்டு அனைவரிடமும் பணிவோடு நடந்து கொண்டால் அனைவரின் மரியாதையும் கிடைக்கும்.
7. உதவி செய்தல்: பிரதி பலனை எதிர்பாராமல் உதவுவது ஒரு சிறந்த பண்பு. பிறர் கேட்கும்போது மட்டுமல்லாமல் கேட்காமலே புரிந்து கொண்டு உதவி செய்ய வேண்டும். இதனால் உங்களுக்கு சமூகத்தில் மரியாதை கூடும்.
8. நேர்மையாக நடத்தல்: எப்போதுமே நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். யாரும் பார்க்காத நேரத்தில் கூட மனசாட்சியின்படி நேர்மையாக செயல்பட வேண்டும். நேர்மையான மனிதர்கள் எப்போதும் சமுதாயத்தால் மரியாதையாக நடத்தப்படுவார்கள்.
9. நேர்த்தியாக உடை அணிதல்: பிறரின் மதிப்பையும் மரியாதையையும் பெற நல்ல நேர்த்தியாக உடை அணிதல் மிகவும் முக்கியம். நேர்த்தியான உடைகள் அணியும்போது தனக்கு தன்னம்பிக்கை தருவதுடன் பிறரின் பார்வையில் அழகாக தோற்றமளிக்கவும் உதவும்.
10. எளிமையாக இருத்தல்: பணிவைப் போலவே எளிமையாக இருப்பதும் மிகச்சிறந்த குணமாகும். பிறர் எளிதில் அணுகி பேசுமாறு எளிமையாக இருத்தல் மரியாதையும் மதிப்பையும் பெற்றுத் தரும்.