1. நிகழ்காலத்தில் வாழ்தல்
குழந்தைகள் கடந்தகாலத்தை எண்ணி வருந்தாமல் எதிர் காலம் பற்றி பயம் கொள்ளாமல் நிகழ்காலத்தில் மட்டும் காலூன்றி வாழ்கிறார்கள். இதற்கு அவர்கள் முயற்சி ஒன்றும் செய்வதில்லை. இது இயல்பாகவே அவர்களுக்கு அமைகிறது. வளர்ந்த பின் மெனக்கெட்டுத் தான் நிகழ்காலத்துக்கு நம்மை நாமே இழுத்துக்கொண்டு வர வேண்டியுள்ளது. Past regrets – Future fears இடையில் தள்ளாடிக்கொண்டு தானே நேரம் கழிக்கிறோம் !
2. மன்னித்து மறத்தல்
நாள் முழுக்கத் திட்டிக்கொண்டே இருந்திருந்தாலும் மறுநாள் மீண்டும் அதே புன்னகையோடு எதிர்கொள்ள நம்மால் முடிகிறதா? ஆனால் குழந்தைகளால் முடிகிறதே! எதையும் மன்னித்து மறக்கத் தேவைப்படும் அந்தப் பரந்த மனம் குட்டிக் குழந்தைகளிடம் தான் இருக்கிறதல்லவா!
3. சட்டென திசை திரும்பிவிடுதல்
வருத்தம், கோபம், சோகம் என்று ஏதேனும் ஓர் உணர்வில் இருக்கும் போது, ஒரு சிறு பொருள், சிறு அழைப்பு, சின்ன செயல் குழந்தைகளைத் திசை திருப்பிவடப் போதுமானதாய் இருக்கிறது. நமக்கு அப்படியா?
4. பிடித்த ஒன்றுக்காக அடம் பிடித்தல்
‘இது பிடித்திருக்கிறது, இதுதான் வேண்டும்’ என்று குழந்தைகளால் அடம் பிடிக்க முடிகிறது. வளர்ந்த பிறகு சமரசங்களே வாழ்க்கையாகி விடுகிறதல்லவா!
5. நிபந்தனை இன்றி நேசித்தல்
‘இதைச் செய்தால் தான் உன்னை நேசிப்பேன்’ என்று எந்தக் குழந்தையும் நிபந்தனைகள் விதிப்பதில்லை. ஆனால், அன்புக்கு என்ன பிரதிபலன் என்று கணக்கிடாமல் பெரியவர்களின் உலகம் இயங்குவதில்லை.
6. கிடைத்ததில் திருப்தி அடைதல்
“இன்னும் செஞ்சிருக்கலாம்” என்று குழந்தைகளுக்குத் தோன்றுவதே இல்லை.. சின்னப் பரிசு போதும் அவர்களின் கண்களைச் சிரிக்க வைக்க. ஒப்பிட்டுப் பார்த்துப் பொறாமைப்படுவதோ பெருமைப்படுவதோ பிள்ளைகள் செய்வதில்லை.
7. குறை காணத் தெரியாமல் இருத்தல்
குறை காணும் சிறுமைத்தனம் சின்னக் குழந்தைகளிடம் கிடையாதல்லவா.. குறைகளை மட்டும் பெரிதாக்கிக் காட்டும் பூதக்கண்ணாடிக்குக் குழந்தைகளின் உலகத்தில் இடமில்லை. வெறுக்கவும் பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை அல்லவா!
8. காயப்படுத்தாமல் பேசுதல்
புண்படுத்திவிடும் ஒருவார்த்தை கூட இல்லாத ஒரே மொழி மழலைகளின் மொழி தானே.. நம்மைக் காயப்படுத்தும் எந்த வார்த்தையும் ஒரு குழந்தையின் வாயிலிருந்து வந்ததாக இருக்காது. குத்திப் பேசுவதும் சொல்லிக் காட்டுவதும் குழந்தைகள் செய்வதில்லை.
9. சந்தேகிக்காமல் நம்புதல்
வளர்ந்துவிட்ட பிறகு சந்தேகங்களுக்கிடையில் தான் வாழ்க்கை என்றாகிவிடுகிறது. ஆனால் குழந்தைகளாய் இருந்தவரை எதையும் எவரையும் சந்தேகித்ததே இல்லை அல்லவா!
10. வடிகட்டாமல் வெளிப்படுத்துதல்
கோபமோ, அழுகையோ, அன்போ, மகிழ்ச்சியோ.. எந்த உணர்வையும் வடிகட்டாமல் அப்படியே கொட்டிய பருவம் பிள்ளைப்பருவம். வளர்ந்து விட்ட பிறகு தூக்கிக்கொண்டு அலையும் வடிகட்டிகள் தான் எத்தனை எத்தனை..
குழந்தைகளாய் இருந்த நாட்களில் ‘எப்போது வளர்ந்து பெரியவர்கள் ஆவோம்?’ என்று எதிர்பார்த்திருந்தோம். பெரியவர்கள் ஆகிவிட்ட பிறகு ‘குழந்தைகளாகவே இருந்திருக்கலாம்’ என்ற ஏக்கத்தில் வந்து சேர்ந்துவிடுகிறோம்.
குழந்தைகளை அழகாக்குவது ‘குழந்தைத்தனம்’ தான். வளர்ந்துவிட்ட பிறகு அதை முற்றிலுமாய்த் தொலைத்தடித்துவிடாமல் அவ்வப்போதாவது கைக்கொண்டு வாழ்ந்தால், பெரியவர்களுக்கும் வாழ்க்கை அழகாகும் அல்லவா..
இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்...