

குழந்தைகளுக்கு டீனேஜ் என்பது ஒரு திருப்புமுனை. ஆண் பிள்ளைகள், திடீரென தோளுக்கு மேல் வளர்ந்து, சுயமாக சிந்திக்கவும், எல்லைக்கோட்டைத் தாண்டவும் விரும்பும் பருவம் அது. இருந்தாலும் தங்களின் சுயமதிப்பு, நன்னடத்தை, அறிவாற்றல், தன்னம்பிக்கை போன்ற விஷயங்களை பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்ளவே விரும்புவர். பெற்றோர் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டிய பத்து விஷயங்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. மரியாதை: பெண்கள், வயதில் மூத்தவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் அறிமுகம் இல்லாதவர்களிடமும் எவ்வாறு மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை பெற்றோர் அவர்களுக்குக் கற்றுத் தருவது எதிர்காலத்தில் அவர்கள் சமூக விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சிப் பக்குவம் அடைந்து சிறந்ததொரு ஆண் மகனாக உருவாக உதவும்.
2. நேர்மை: கலப்படமில்லாத நேர்மை, வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். தனது தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், தனக்குத் தெரியாத விஷயத்தை, 'தெரியாது' என்று தைரியமாக வெளிப்படுத்துவது, பொய் பேச அஞ்சுதல் போன்ற நற்குணங்களைக் கற்றுத் தருவது அவர்களை தைரியசாலியாகவும், குற்ற உணர்வு இல்லாத மனிதனாகவும் எப்பொழுதும் விளங்க உதவும்.
3. கடுமையற்ற வார்த்தைப் பிரயோகம்: அழும் குணமுடையை ஆண் பிள்ளைகளை சமூகம் பலவீனமான குழந்தையென கேலி செய்யும். அதற்காக பெற்றோர் குழந்தையை கடிந்துகொள்ளாமல், அழுவது உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அதை அடக்குவது கோபம் மற்றும் வருத்தங்களை உண்டுபண்ணும் என்று மென்மையான குரலில் கூற வேண்டும். இதனால் எந்த பிரச்னையையும் தயங்காமல் தனது பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள தயாராகும் அந்தக் குழந்தை.
4. தோல்வியை வெற்றிப் படியாக்கக் கற்றுக் கொடுத்தல்: ஏதாவதொரு சூழலில் உங்கள் பையன் தோல்வியை சந்திக்க நேர்ந்தால், ‘தோல்வி என்பது உனது திறமையை அளவிடும் அளவுகோல் அல்ல. அதிலிருந்து நீ பாடம் கற்று மீண்டும் முயற்சிக்க வேண்டும்’ எனக் கூற வேண்டும். இதனால் அவன் பொறுமையுடன், பிரச்னையோடு ஒத்திசைந்து, மீண்டும் முயன்று வெற்றி பெறுவான்.
5. சோசியல் மீடியாவின் பயன்பாடு: ‘சோஷியல் மீடியா உனது அறிவு வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் மிக கவனமுடன் கையாண்டால் மட்டுமே உதவும். அதில் தேவை இல்லாமல் செலவழிக்கும் நேரத்தை மற்ற ஆஃப் லைன் பொழுதுபோக்கு அம்சங்களிலும் நல்ல நண்பர்களுடனும் கழித்தால் தன்னம்பிக்கையும், திறமையின் சுய வெளிப்பாடும் கொண்டு சிறந்த மனிதனாக வாழலாம்’ என்று அறிவுறுத்துதல் அவசியம்.
6. உண்மையான நட்புறவை உணரச் செய்வது: வேடிக்கைக்காக நம்மைச் சுற்றிவரும் பல நண்பர்களை விட கஷ்டமான நேரங்களில் நம்முடன் இருந்து உதவி புரியும் சிலரை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள நம் பையனுக்கு சொல்லித் தர வேண்டும்.
7. பணப் பரிவர்த்தனை அறிவை ஊட்டுதல்: பணத்தை பட்ஜெட் போட்டு செலவு பண்ணவும், பாக்கெட் மனியிலிருந்து சிறிது சேமிக்கவும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது பின்னாளில் வருவாயை பொறுப்புடனும் கட்டுப்பாடோடும் கையாள உதவும்.
8. பிறரிடம் அன்பு செலுத்த அறிவுறுத்துதல்: பிறரிடம் அன்பு செலுத்தவும் இரக்கம் காட்டவும் கற்றுக்கொடுப்பது, அவனை ஒரு நல்ல கணவனாகவும் முதிர்ச்சியுற்ற மனிதனாகவும் அடையாளம் காட்ட உதவும்.
9. சுய கவனிப்பு: உடலை சுத்தமாக வைக்கவும், குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடவும், தூங்கவும், உடற்பயிற்சி செய்யவும் கற்றுக் கொடுத்து, உடல் நலத்திற்கு எப்பொழுதும் முன்னுரிமை கொடுக்க அறிவுறுத்துதல் மிகவும் அவசியம்.
10. குடும்ப உறவின் மேன்மையறியச் செய்தல்: நட்பு வட்டம் எந்த நேரத்திலும் மாறக் கூடியது. ஆனால், வீடு மற்றும் வீட்டிலுள்ள உறவுகள் அனைத்தும் எந்த நேரத்திலும் உடனிருந்து உதவியும் பாதுகாப்பும் தரக்கூடியவை. டீனேஜ் பருவத்திலேயே பையன்கள் இந்த இணைப்பின் உன்னதத்தைப் புரிந்து கொண்டால் அது அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க இரக்கம், விசுவாசம் மற்றும் வலிமையான மனோபாவம் கொண்டு வாழ்க்கை நடத்த உதவி புரியும்.