

மழைக்காலம் துவங்கி விட்டது. அத்துடன் புயல் எச்சரிக்கைகளும் அதற்காக மக்கள் பாதுகாப்பு குறித்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நாமும் முன்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே. மழைக்கால பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து சில எச்சரிக்கை தகவல்களை இப்பதிவில் காண்போம்.
முதலில் மழைக்காலத்தில் நமது வீடுகளின் பாதுகாப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
மின்சார பாதுகாப்பு: மழையின்போது கவனிக்க வேண்டிய முதன்மை விஷயங்களில் ஒன்று மின்சாரப் பாதுகாப்புதான். அதைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை. ஈரமான கைகளால் ஸ்விட்ச் / பிளக்கை தொட வேண்டாம். மின் கசிவு உள்ள பிளக், வயர்கள், மின் பெட்டி போன்றவற்றை உடனே சரிசெய்யவும். மின்னல் அதிகமாக இருந்தால் மின் சாதனங்களை அணைத்து விடுவது சாதனங்களை பழுதாகாமல் பழுதாக்கும்.
குடியிருக்கும் வீட்டுப் பராமரிப்பு: மேல்மாடிகள் கூரை, நீர்வழி குழாய்களை முன்கூட்டியே சுத்தம் செய்தால் நீர் தேங்காது. ஜன்னல்கள், கதவுகளில் இருந்து நீர் சொட்டாமல் இருக்க ரப்பர் சீல் அல்லது டேப் சுற்றி வைக்கவும். வெள்ளம் புக வாய்ப்பு உள்ள வீட்டின் வாசலில் நீரைத் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகள் வைக்கவும்.
குடிநீர் மற்றும் சுகாதாரம் பேணுதல்: மழைக்காலத்தில் ஆரோக்கியம் முக்கியம். அதற்கு அடிப்படையான குடிநீர் சுகாதாரம் குறித்து எச்சரிக்கை அவசியம். குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது சிறந்தது. வீட்டில் சேரும் குப்பைகளை உடனே அகற்ற வேண்டும். குப்பைகள் மட்டுமல்ல, மழை நீர் தேங்கும் பொருட்களையும் அகற்ற வேண்டும். இதனால் கொசு பெருகுவது குறையும். குறிப்பாக எந்த உணவாக இருந்தாலும் அதை மூடிவைத்து பாதுகாக்கவும்.
மழையில் தேவையான அவசர வசதிகள்: எதிர்பாராத நேரத்தில் மின்சாரம் தடைபடுவது மழைக்காலத்தில் சகஜம். அந்நேரத்தில் இருளை அகற்ற டார்ச் லைட்டுகள், மெழுகு, விளக்கு, தீப்பெட்டி போன்றவற்றை எடுக்க வசதியாக வையுங்கள். மேலும், பேட்டரி, முதல் உதவி பெட்டி, அவசர எண்களை குறித்து வைத்திருக்கவும். தற்போது செல்போன் அவசியம் என்பதால் பவர் பேங்க் போன்றவற்றை சார்ஜ் செய்து வைத்திருக்கவும்.
வெள்ளப்பெருக்கு நேரத்தில் அவசர நடவடிக்கைகள்: நீங்கள் வசிக்கும் பகுதியில் வெள்ளம் வரும் அபாயம் பற்றிய செய்திகள் இருந்தால் உடனடி முன்னெச்சரிக்கையாக தேவையான அத்தியாவசிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு உயரமான இடங்களுக்குச் செல்லவும். வீட்டில் உள்ள மின் இணைப்புகளை மெயினிலிருந்து ஆஃப் செய்யவும். நீரில் மின்கம்பிகள் விழுந்திருக்கும் அபாயமுண்டு என்பதால் மழைக் காலங்களில் மழை நீரில் இறங்க வேண்டாம்.
மழைப் போக்குவரத்து தேர்வு: மழை என்றாலும் அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள் நீர் தேங்கும் சாலைகளைத் தவிர்த்து வேறு பாதையை தேர்வு செய்யலாம். முடிந்த வரை அரசுப் போக்குவரத்து அல்லது தனியார் வாகன வசதி பயன்படுத்துவது தனியாக ஓட்டுவதை விட பாதுகாப்பானது.
வாகனம் ஓட்டும்போது: வேகம் குறைத்து, ஹெட்லைட்கள் ஆன் வைத்து செல்லவும். நீர் தேங்கிய சாலைகளைத் தவிர்க்கவும். வாகனம் தண்ணீரில் அணைந்தால் மீண்டும் ஸ்டார்ட் செய்ய வேண்டாம், வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பின் மீண்டும் இயக்கவும். நடந்து செல்ல வேண்டியிருந்தால் இன்னும் கவனம் தேவை. சறுக்கி விடாத காலணிகள், குடை, ரெயின்கோட் ஆகியவை நிச்சயம் தேவை. சாலைகளில் குழி, மான் ஹோல் போன்றவை நீரில் தெரியாது என்பதால் நீர் நிறைந்த பகுதிகளில் துணிச்சலாக காலடி வைக்காதீர்கள். மழையின்போது போக்குவரத்து தாமதம் அதிகம் ஆகும் என்பதால் சற்று முன்னதாக வீட்டிலிருந்து புறப்பட்டு விடுங்கள்.
மழை பெய்யும்போது செய்யக் கூடாதவை: வேகமாக ஓடும் நீர் உள்ள இடங்களில் நடக்காதீர்கள். ஏனெனில் இழுத்துச் செல்லும் வாய்ப்பு உண்டு. ஓடும் நீரில் வாகனம் செலுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தண்ணீர் கரைபுரண்டு ஓடும் கிணறு, வடிகால் போன்றவை அருகில் செல்வது தவறு. இவற்றுடன் அவசரநிலைக்கு ஒரு சிறிய பையில் முக்கியமான அடையாள ஆவணங்கள், பணம், மொபைல் & பவர் பேங்க், உயிர் காக்கும் மருந்துகள், தண்ணீர் பாட்டில், தேவையான உணவுப் பொருட்கள் (பிஸ்கட், டிரை ஃப்ரூட்ஸ்), டார்ச், ரெயின்கோட் இவற்றை தயாராக வைத்திருக்கவும்.
வெள்ள ஆபத்து நேரத்தில் தொலைக்காட்சியில் வரும் மழை பற்றிய அரசு அறிவிப்புகளை கவனித்து நெருக்கடி மேலாண்மை குழு தரும் எச்சரிக்கைகளைப் பின்பற்றவும். மீட்பு குழு கூறும் வழிமுறைகளை தவறாமல் கேட்கவும்.