வீட்டின் இதயமாக இருக்கும் சமையலறை மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் வரவழைக்கும் முக்கிய இடமாகும். சமையலறையின் சுத்தமும் சுகாதாரமும்தான் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் ஆரோக்கியமாக இருக்கிறது. இவ்வளவு சிறப்புமிக்க சமையலறையில் தப்பித்தவறி கூட வைக்க கூடாத 5 பொருட்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. காலியான ஜாடிகள் அல்லது கொள்கலன்கள்: சமையலறையில் காலியான கொள்கலன்கள், உணவு ஜாடிகள் மற்றும் பொட்டலங்கள் இருப்பது வாழ்க்கையில் ஏற்படும் துரதிர்ஷ்டம் போன்றது. ஆகவே, வீட்டில் பணப் பற்றாக்குறையைப் போக்கி, செல்வ உணர்வை தக்கவைக்க இந்த ஜாடிகளில் எப்போதும் அத்தியாவசியமான பொருட்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. பழைய உணவு: பழைய உணவுகள் மற்றும் காலாவதி தேதி கடந்த உணவுகள் நிதி தேக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சமையலறையில் ஒருபோதும் காலாவதியான கெட்டுப்போன உணவுப் பொருட்களை வைக்கக் கூடாது என வாஸ்து கூறுகிறது.
3. திறந்தவெளியில் பொருட்களை வைப்பது: கூர்மையான பொருட்களான கத்தரிக்கோல், கத்திகள் போன்றவற்றை சரியான இடங்களில் சேமிக்க வேண்டும். இவற்றை திறந்த இடத்தில் வைத்தால் நிதி உறுதியற்ற தன்மை ஏற்படுத்தும் என நம்பப்படுவதால், பணப் பற்றாக்குறையை தவிர்க்க இந்த கூர்மையான கருவிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
4. உடைந்த பாத்திரங்கள்: விரிசல் மற்றும் உடைந்த பாத்திரங்கள் சமையல் அறையில் இருப்பது பண வரவில் உறுதியற்ற தன்மையை குறிக்கும் என வாஸ்து கூறுகிறது. மேலும், இத்தகைய உடைந்த பாத்திரங்கள் சமையலறையின் ஒட்டுமொத்த தோற்றத்தைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் முன்னேற்றத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது.
5. பயன்படுத்தப்படாத சமையலறை உபகரணங்கள்: பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சமையலறையில் இருந்து அப்புறப்படுத்துவது வாழ்க்கையில் புதிய ஆற்றலையும் வாய்ப்புகளையும் பெற உதவும் என வாஸ்து ரீதியாக நம்பப்படுவதால் இவற்றை அப்புறப்படுத்துவது சிறந்தது.
சமையலறையில் தேவையற்ற பாத்திரங்களை அகற்றி, அத்தியாவசிய பொருட்களை ஜாடிகளில் நிரப்பி, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாத்தாலே வீட்டில் அமைதியும் ஆரோக்கியமும் நிலைக்கும்.