குறிப்பிட்ட கரிம வேளாண்மை தரத்தின்படி வளர்க்கப்படும் பசுக்களில் இருந்து பெறப்படும் பால் ஆர்கானிக் பால் என்று அழைக்கப்படுகிறது. ஆர்கானிக் பாலின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வழக்கமான பாலை விட ஆர்கானிக் பால் ஏன் மேம்பட்டது?
பொதுவாக, ஆர்கானிக் என்பது செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வளர்ச்சி மாற்றம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றின் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்பதை குறிக்கிறது. ஆர்கானிக் பால் தரும் பசுக்களை இயற்கை விவசாய முறைகளின்படி வளர்க்கிறார்கள். பசுக்களுக்கு ஆன்டி பயாட்டிக் மற்றும் செயற்கை வளர்ச்சி ஹார்மோன்களைப் பயன்படுத்துவது இல்லை. அவற்றுக்கு நல்ல இயற்கைத் தீவனம், மேய்ச்சல் போன்றவற்றை அளிக்கிறார்கள்.
ஆர்கானிக் பாலைத் தரும் பசுக்கள் மனிதாபிமான சூழ்நிலையில் வளர்க்கப்படுகின்றன. அவை அலைந்து மேய்ந்து திரிவதற்கு போதுமான இட வசதி உள்ளது. நிலத்தை பராமரிக்கவும் பாலைப் பதப்படுத்தவும் இயற்கை முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். அதனால் அவை தரும் பாலின் தரமும் சிறப்பாக உள்ளது. இவற்றிலிருந்து பெறப்படும் பாலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை. இதனால் வழக்கமான பால் உண்டாக்கும் உடல்நல பாதிப்புகள் இதில் இல்லை.
ஊட்டச்சத்து நன்மைகள்: ஆர்கானிக் பால், சில ஊட்டச்சத்துக்களின் அதிக செறிவு காரணமாக, வழக்கமான பாலை விட ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையின் செயல்பாடு, பார்வை மற்றும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்கானிக் பாலில் கால்சியம், புரதம், வைட்டமின் பி12, வைட்டமின் பி 2, பாஸ்பரஸ், அயோடின் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆரோக்கியமான எலும்புகள், தசைகள் மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளை பராமரிக்க இந்த ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாதவை.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்: ஆர்கானிக் பாலில் வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. இது நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும். இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. ஆர்கானிக் பாலில் லாக்டோகுளோபுலின் மற்றும் லாக்டோஃபெரின் போன்ற சில நன்மை பயக்கும் மோர் புரதங்களின் அதிக செறிவுகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வழக்கமான பாலுடன் ஒப்பிடும்போது கூடுதல் ஆரோக்கிய நன்மைகளுக்கு பங்களிக்கக்கூடும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்தது: ஆர்கானிக் வேளாண்மை நடைமுறைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கின்றது. மாடுகள் வளர்க்கப்படும் மண்ணின் தரம் மற்றும் நீரின் தரம் போன்றவை சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக இருக்கின்றன. இவற்றில் செயற்கை பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை பயன்படுத்துவதில்லை. இதனால் பல்லுயிர் பெருக்கம் மேம்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கிறது.
நீண்ட நேரம் கெடாது: ஆர்கானிக் பால் விரைவில் கெட்டுப் போவதில்லை. இது அல்ட்ரா-பேஸ்டுரைசேஷனுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மிக மிக அதிக வெப்ப நிலையில் சூடேற்றப்படுகிறது. இந்த செயல்முறை பாக்டீரியாவைக் கொன்று பாலின் ஆயுளை கணிசமாக நீட்டிக்கிறது. இது திறக்கப்படாமல் இருந்தால் இரண்டு மாதங்கள் வரை கெட்டுப் போகாது. இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஏழு முதல் 10 நாட்கள் வரை கெடாமல் சேமிக்கலாம்
ஆர்கானிக் பாலின் பாதிப்புகள்: ஆர்கானிக் பால் வழக்கமான பாலை விட அதிக விலையில் வருகிறது. ஏனெனில் இதைப் பெற மிகவும் கடுமையான விவசாய நடைமுறைகள் தேவைப்படுகின்றன.
தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியமான அயோடின் மற்றும் செலினியம் போன்ற சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் இது குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இயற்கை வேளாண்மையில் நன்மைகள் இருந்தாலும், அது சவால்களையும் அளிக்கிறது. கரிம பால் பண்ணைகளுக்கு அதிக நிலம் தேவைப்படுகிறது. கரிமப் பண்ணைகள் அதிக அளவு நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் அம்மோனியா உமிழ்வை உருவாக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.