மனித இனத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான பழக்க வழக்கங்களைப் பின்பற்றி வாழ்பவராக இருப்பர். அவர்கள் வளர்ந்து வந்த சூழ்நிலை, கற்றுக்கொண்ட விதம் போன்றவற்றை இதற்கான காரணங்களாகக் கூறலாம். தனது பழக்கங்களின் அடிப்படையில் சிலர் வாழ்க்கையில் வெற்றி பெற்று நிமிர்ந்து நிற்பர். சிலர் தோல்வியைத் தழுவி துவண்டு போய்க் கிடப்பர். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது. கடினமாக உழைத்து, இந்தப் பதிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வகைப் பழக்கங்களையும் பின்பற்றினால் வெற்றி நிச்சயம்.
1. காலம் தாழ்த்துதல்: வேலையை ஆரம்பிக்காமல் தள்ளிப்போடுதல் (Procrastination) ஒரு நாளும் முன்னேற்றத்திற்கு உதவாது. ஒரு செயலைச் செய்ய நினைத்தால் உடனடியாக அதை காலம் கடத்தாமல் ஆரம்பித்து, முழு முனைப்புடன் செயல்படும்போது சுலபமாக இலக்கை அடைய முடியும்.
2. தோல்வி பயம்: ஒரு செயலைச் செய்ய நினைக்கும்போது, எங்கே அதில் தோற்று விடுவோமா என்ற பயத்தில் ரிஸ்க் எடுக்க மறுத்தால் ஒருபோதும் அது வெற்றிக்கு வழி வகுக்காது. தோல்வியைத் தழுவுதல் சில வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், அனுபவம் பெறவும் உதவும். பின்னாளில் அவை பெரிய சாதனைகளைப் புரிய உதவும்.
3. ஒழுக்கமின்மை: கட்டுப்பாட்டுடன்கூடிய ஒழுக்கம் இல்லை என்றால் கொள்கையில் உறுதி இருக்காது. தொடர்ந்து நிலை மாறாத நல்லொழுக்கப் பண்புகளை கடைப்பிடித்து வருதல் வெற்றிக்கு மிகவும் முக்கியம்.
4. எதிர்மறை எண்ணங்கள்: தொடர்ந்து எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுதல் நம்மை நின்ற இடத்திலேயே நிற்க வைத்து நம் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாய் அமையும். மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் அது நமக்கு புதுப்புது வாய்ப்புகளைக் காட்டவும், தடைகளைத் தகர்த்து வாழ்வில் வளர்ச்சியடைவதற்கான வாசலைத் திறந்துவிடவும் செய்யும்.
5. நேர மேலாண்மையின்மை: முக்கியமில்லாத வேலைகளுக்காக நேரத்தை செலவிடுதல் வெற்றிக்கு வித்திடும் செயலாகாது. திட்டமிட்டு, வேலைகளின் முக்கியத்துவத்திற்கேற்ப அவற்றை வரிசைப்படுத்தி நேரத்தை ஒதுக்கி செய்து முடிப்பது வெற்றிப்படிக்கு அழைத்துச் செல்லும்.
6. முயற்சியை கைவிடுதல்: குறிப்பிட்ட ஒருசில வேலைகளைக் கையில் எடுத்து செய்து முடிக்க சிறிது கால தாமதம் ஆகலாம். அந்த மாதிரியான வேலைகளுக்கு இடைவிடாமல் முழு உழைப்பையும் கொடுத்து விடாமுயற்சியுடன் செயலாற்றுவதே வெற்றியைத் தேடித் தரும். இடையில் விட்டு விலக நினைப்பது எந்தப் பலனும் தராது.
7. சவால்களை ஏற்க மறுத்தல்: சவால்களை சந்திக்க மறுத்து, சுலபமான வழிகளிலேயே பயணிக்க விரும்புவது ஒருவரின் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு தடையாகவே அமையும். சவால்களை சந்தித்து திறம்பட சமாளித்து வெற்றியடைவது நம்மை வேறு லெவலுக்கு அழைத்துச் செல்லும்.
8. இலக்கில்லாமல் பயணித்தல்: தெளிவான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளாமல் பயணத்தைத் தொடங்குவது நம்மை வேறு திசையில் திருப்பிவிடக்கூடும். எனவே, செய்ய வேண்டிய வேலையின் அளவையும் நேரத்தையும் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி வேலையை முடித்துக்கொண்டே சென்றால் அது நிச்சயம் நம்மை வெற்றிப்படியை நோக்கி அழைத்துச் செல்லும்.
9. புதுமையை ஏற்றுக்கொள்ள மறுத்தல்: புதுப்புது உத்திகளை ஏற்றுக்கொள்ளாமல் பழைமைவாதியாகவே இருப்பது முன்னேற்றத்திற்கு வேகமூட்டாது. போட்டி நிறைந்த உலகில் புதுமையை வரவேற்க மனதைத் தயார்படுத்திக்கொள்ளுதல் வெற்றியை நோக்கி நடை போட உதவும்.
10. தன்னம்பிக்கையின்மை: ஒரு வேலையில் ஈடுபடும்போது தனது அணுகுமுறை தவறோ என தன் மீதே சந்தேகம் கொள்வது, தனது திறமையை குறையச் செய்யும் எண்ணமே ஆகும். இதைத் தவிர்த்து சுயமாக, திடமான முடிவுகளை எடுப்பதும், தன்னம்பிக்கையோடு செயலாற்ற முனைவதும் திறமையை அதிகரிக்கச் செய்து வெற்றிக்கனி கையில் விழ சிறந்த முறையில் வழிகாட்டும் என்பதில் சந்தேகமில்லை.