சகாதேவனின் கர்வத்தை அடக்கிய ஸ்ரீ கிருஷ்ணன்!

Sahadeva's pride
Sahadeva's pride
Published on

ஞ்சபாண்டவர்களில் சகாதேவனுக்கு மட்டும் மற்ற நால்வருக்கும் இல்லாத ஒரு சிறப்பான திறமை இருந்தது. அது, முக்காலத்தையும் அறிந்து கூறும் அளவிற்கு திறமை பெற்று இருந்ததுதான். அத்தோடு ஜோதிட சாஸ்திரத்திலும் சிறந்தவனாக விளங்கினான். அவனுக்கு இந்தத் திறமை எப்படி வந்தது?

இறக்கும் தருவாயில் இருந்த பாண்டு மன்னன், தனது புத்திரர்களை அருகில் அழைத்து, "என்னுடைய காலம் முடிவடையப்போகிறது. நான் உங்களுக்கு ஒரு சிறந்த வரத்தினைத் தர நினைக்கிறேன். அது என்னவென்றால், நான் இறந்த பிறகு எனது உடல் அங்கத்தை நீங்கள் புசித்தால் உங்களுக்கு முக்காலத்தையும் அறியும் திறன் வந்துவிடும். உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்"என்றான். அதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் அவனது உயிர் பிரிந்தது.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணன், "இறந்து போனவனின் உடல் அங்கத்தை யாராவது புசிப்பார்களா? இது என்ன அர்த்தம் இல்லாத பேச்சாக இருக்கிறது. எழுந்து வாருங்கள். பாண்டுவுக்கு ஈமக் கிரியைகள் செய்ய விறகுக் கட்டைகள் தேவைப்படும். நாம் காட்டிற்குச் சென்று எடுத்து வந்துவிடலாம்" என்றான்.

எல்லோரும் ஒருமனதாக சகாதேவனை பாண்டுவின் உடலைப் பாதுகாக்கும் பொருட்டு விட்டுவிட்டு, மற்ற நால்வரும் கிருஷ்ணனுடன் காட்டிற்குச் சென்றார்கள். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்ட சகாதேவன், அவர்கள் சென்றவுடன் தந்தையான பாண்டுவின்  ஒரு விரலை எடுத்துப் புசித்து விட்டான்.

இதையும் படியுங்கள்:
தலைமுறை கடந்தும் இளமை குன்றா இசையரசியாக வலம் வரும் எல்.ஆர்.ஈஸ்வரி!
Sahadeva's pride

சிறிது நேரத்தில் அனைவரும் விறகுக் கட்டைகளை தலையில் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார்கள். தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் ஆகிய நால்வரின் தலைகளில் விறகுக் கட்டையில் சுமை பதிந்து அழுத்தம் கொடுத்தது தெரிந்தது. ஆனால், கிருஷ்ணனுடைய தலையில் மட்டும் விறகு கட்டைகள் பதியாமல், தலையிலிருந்து அரை அடிக்கு மேல் காற்றில் மிதந்தது போல் அவருடன் வந்ததை சகாதேவன் கவனித்தான். எல்லோரும் பெருமூச்சு விட்டபடி மிகுந்த களைப்போடு விறகுச் சுமைகளை கீழே இறக்கி வைத்தார்கள்.

அப்பொழுது சகாதேவன், கண்ணனிடம் "கண்ணா, அவர்கள் நால்வரும் தலையில் விறகுக் கட்டைகளை சுமந்து வந்தது தெரிந்தது. ஆனால், உனது தலையில் விறகுக் கட்டைகள் பதியவே இல்லை. தலைக்கு மேலாக காற்றில் மிதந்து அல்லவா வந்தது. நீயும் அவர்களைப் போல் மிகவும் சிரமப்பட்டது போல் நடிக்கிறாயே ஏன்?" என்று கேட்டான்.

"ஓ… உனக்கு எல்லாவற்றையுமே தெரிந்துகொள்ளும் அளவிற்கு திறமை வந்து விட்டதா என்ன?" என்று கேட்டுவிட்டு, சகாதேவனை தனியாக அழைத்துச் சென்றான். பாண்டுவின் சுண்டுவிரலை தின்றதை சகாதேவன் ஒப்புக் கொண்டான்.

"எதிர்காலத்தைக் கூறுவது தேவ ரகசியம் ஆகும். அதை நீ அறிந்து கொண்டு விட்டாய். ஆனால், பிறருக்கு இதைக் கூற மாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடு" என்று சகாதேவனிடம் சத்தியத்தை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

இதையும் படியுங்கள்:
ரிடையர்மென்ட் காலத்தில் ரிலாக்ஸாக இருக்க சில ஆலோசனைகள்!
Sahadeva's pride

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் குருக்ஷேத்திரப் போருக்கும், அதற்கு முன்பாக கள பலிக்கும் சகாதேவனால் நாள் குறிக்கப்பட்டது. தனக்கு நிகர் யாருமில்லை என்கிற கர்வம் அவனிடத்தில் சிறிது தலைதூக்கியது. போரில் கர்ணன் மாண்டான். அன்றைய தினம்தான் கர்ணன் குந்தி தேவியின் மகன் என்பது எல்லோருக்கும் தெரிந்தது.

ஒருவழியாக குருக்ஷேத்திரப் போர்  முடிந்தது. சகாதேவன், கிருஷ்ணனைப் பார்த்து, "எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கையே போய் விட்டது கண்ணா" என்றான்.

"என்ன சகாதேவா? ஜோதிடத்தில் வல்லவன் நீயே இந்த வார்த்தையைக் கூறலாமா?"

"இல்லை கண்ணா, முக்காலமும் தெரிந்த எனக்கு கர்ணன் குந்திதேவியின் மகன் என்பது தெரியாமல் போய்விட்டதே?"

"எல்லாவற்றையுமே உன்னால் கூற முடியும் என்று நினைத்தால் பிறகு நான் எதற்கு சகாதேவா?” என்று சிரித்தபடி கண்ணன் கேட்டான்.

சகாதேவன், கண்ணனை ஏறெடுத்துப் பார்த்தான். ‘தனக்கு  எல்லாம் தெரியும்’ என்கிற கர்வம் அவனை விட்டு அழிந்தது.

"ஆமாம் கண்ணா, நீ சொல்வது வாஸ்தவம்தான். மனிதன் என்பவன் எல்லாவற்றையும் அறிந்து, தெளிந்துவிட முடியாது. தெய்வத்தின் பங்கு நிச்சயமாக அதில் உண்டு என்பதை இப்போது புரிந்து கொண்டேன்" என்றான் சகாதேவன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com