வீட்டு மளிகைப் பொருட்களில் வண்டு, புழுக்கள் வராமலிருக்க 10 எளிய ஆலோசனைகள்!
நம் அனைவர் வீடுகளிலும் தினசரி தேவைகளுக்கான சமையல் பொருட்களை கொஞ்சம் அதிகமாகவே வாங்கி சேமித்து வைத்துக்கொள்வது வழக்கமாக உள்ளது. அவற்றில் சில நேரம் வண்டு மற்றும் புழுக்கள் உற்பத்தியாவதும் வழக்கம். இவற்றைத் தவிர்க்க 10 எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. காற்று புகாத, ஈரப்பதம் இல்லாத கொள்கலன் (Container)களில் தானியங்களை சேமிப்பது நலம். குறிப்பாக, இறுக்கமான மூடிகளையுடைய கண்ணாடி ஜாடிகள் பொருட்களை சுகாதாரத்துடன் புதிதாகவும் (Fresh) வைத்திருக்க உதவும்.
2. உணவுப் பொருட்களை கொள்கலன்களில் நிரப்புவதற்கு முன் குளிர்சாதனப் பெட்டிக்குள் உள்ள உறைய வைப்பானின் (Freezer) உள்ளே இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தெடுத்து பிறகு சேமிப்பது நன்மை தரும். இம்முறையில், தானியங்களில் மறைந்திருக்கும் நோய்க் கிருமிகளின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் இறந்துவிட வாய்ப்புண்டாகும். மேலும், உணவுப் பொருள்கள் நீண்ட நாட்கள் பூச்சிகளின் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கவும் முடியும்.
3. வேப்பிலைகள் இயற்கையாகவே ஆன்டி பாக்டீரியல் குணம் கொண்டவை. இவை, பூச்சிகள் உணவுப் பொருள்களை நெருங்க விடாமல் பாதுகாத்து, அவற்றை விரட்டியடிக்கவும் உதவும். நன்கு காய்ந்த வேப்பிலைகளை உணவுப்பொருள்களுடன் கலந்து ஜாடிகளில் போட்டு இறுக மூடி வைத்தால், எவ்வித இரசாயனக் கலப்புமின்றி அவை பாதுகாப்போடு இருந்து பயன்பாட்டிற்கு உதவும்.
4. நான்கைந்து இலவங்கங்களை உணவுப் பொருட் களுடன் கலந்து வைப்பதும் பூச்சிகளை விரட்ட உதவும். இலவங்கத்திலிருந்து வரும் கடுமையான வாசனை பூச்சிகளை விரட்டி, உணவுப் பொருளை புதிதாக வைக்க உதவும்.
5. சில வாரங்களுக்கு ஒரு முறை உணவுப் பொருட்களை கொள்கலனிலிருந்து எடுத்து வெயிலில் காய வைத்தெடுப்பது அவசியம். இதனால் பொருட்களிலுள்ள ஈரப்பதம் நீங்கும். பூச்சிகள் விரட்டியடிக்கப்படும் அல்லது செத்து மடியும்.
6. உணவுப் பொருள்கள் நிரம்பிய கொள்கலன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரி போன்ற இடங்களை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். ஜாடிகளுக்கிடையே சிதறிக் கிடக்கும் உணவுப் பொருள்களை உடனுக்குடன் நீக்கி, அந்த இடத்தை வினிகர் அல்லது சோப்பு கலந்த நீரால் சுத்தப்படுத்திவிட்டால் அந்த இடம் முழுவதும் பூச்சிகள் உற்பத்தியாகும் கூடாரமாக மாற வாய்ப்பில்லாமல் போய்விடும்.
7. காம்புடன் கூடிய, காய்ந்த முழு சிவப்பு மிளகாய் சிலவற்றை உணவுப் பொருட்களுடன் கலந்து சேமித்து வைக்கலாம். இதிலிருந்து வரும் கடுமையான கார வாசனை பூச்சிகள் உற்பத்தியாவதை தடுக்கும். அதேநேரம் உணவுப் பொருள்களின் சுவையும் குன்றாது. சமைக்கும் முன் மிளகாய்களை பொறுக்கி எடுப்பதும் சுலபம்.
8. உணவுப் பொருட்களை தரமான கடைகளிலிருந்து, பாக்கெட்களை நன்கு பரிசோதித்த பின் வாங்குவது நலம். பாக்கெட்டில் கிழிசலோ, தூசியோ, ஒட்டடை போன்ற, பூச்சிகள் கட்டிய கூடுகள் இருந்தாலோ அதை வாங்காமல் தவிர்த்துவிடுதல் நலம் தரும்.
9. கொள்கலன்களில் சேமித்த பொருட்களை அவ்வப்போது மேலும் கீழும் போகுமாறு குலுக்கி விடுதல் அவசியம். அப்படி செய்வதால் முன்கூட்டியே வாங்கி, பழசாகிவிட்ட பொருள் மேல்பக்கம் வந்து சீக்கிரம் உபயோகித்துவிட முடியும். எப்பவும் Fifo கொள்கையை பின்பற்றுவது சிறப்பு. (அதாவது, First in, first out). இதற்கு பதில் குறிப்பிட்ட காலத்திற்கு தேவைப்படுவதை மட்டும் வாங்கி, அதை முழுவதும் உபயோகித்த பின் மறுபடியும் புதிதாக வாங்கிக்கொள்வது நன்மை தரும்.
10. பிரிஞ்சி இலை (Bay Leaf) ஓர் இயற்கையான பூச்சி விரட்டி. அரிசி, கோதுமை மற்றும் கடலை மாவு, மைதா போன்றவற்றை சேமித்து வைத்திருக்கும் கொள்கலன்களில் சில பிரிஞ்சி இலைகளைப் போட்டு வைத்தால், பூச்சிகள் வராது. உணவின் சுவையும் குறையாது.

