
சேமிப்பு என்பது நமது எதிர்கால வாழ்விற்கு நிம்மதி சேர்க்கும் ஒரு இன்றியமையாத விஷயமாகக் கருதப்படுகிறது. சேமிப்பற்ற வாழ்வு நடுக்கடலில் தடுமாறிக் கவிழும் துடுப்பற்ற படகு போல பாதிப்புகளுக்கு உள்ளாகும். அந்தக் காலத்தில் பெண்கள் சமையலுக்கு அரிசியை பானையில் இருந்து எடுக்கும்போது அதன் அருகில் இன்னொரு சிறு பானையை வைத்து அதில் ஒரு கைப்பிடி அரிசியைப் போட்டுவிட்டுதான் சமைக்க ஆரம்பிப்பார்களாம். காரணம், மாத இறுதியில் நெருக்கடி வரும்போது இந்த அரிசி அவர்களுக்கு உணவாக உதவும் என்பதால். இது ஒரு சிறு உதாரணம்தான்.
இப்படி சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து பல விஷயங்களைக் கடைபிடித்ததால் அக்கால மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால், இன்று நம்மால் அப்படி சேமிக்க முடியுமா என்றால் கேள்விக்குறிதான் பதிலாக வரும். காரணம், நம்மைச் சுற்றியுள்ள ஆடம்பரப் பொருட்களும் துரித உணவுகளும் நாம் வேண்டாம் என்றாலும் வலிய வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டும் காலமாகி விட்டது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயமாக சேமிக்க முடியும். இனி, எளிதாக சேமிப்பதற்கான சில அனுபவக் குறிப்புகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. தினமும் காலை எழுந்தவுடன் 50 ரூபாய் அல்லது 100 ரூபாய் என இருப்பதில் 10 சதவீதம் மட்டும் எடுக்க முடியாத மூடிய உண்டியலில் போடும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடியுங்கள். தினமும் 100 ரூபாய் என்றாலும் வருடக் கடைசியில் சுமார் 36,500 ரூபாய் உங்களிடம் இருக்கும்.
2. வெளியே அல்லது ஊர்களுக்குச் செல்லும்போது வீட்டில் இருந்தே தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள். முடிந்தால் கிளறிய சோறு போன்ற உணவுகளையும் எடுத்துச் சென்றால் தண்ணீர் மற்றும் உணவுகளை வாங்கும் காசு மிச்சம். உடல் ஆரோக்கியமும் காக்கப்படும்.
3. தற்போது கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் செலவு என்பது கானல் நீர் போல் கண்ணுக்கு தெரியாமலே போய்விடுகிறது. ஆகவே, இருவரில் ஒருவராவது தினம் என்ன செலவு ஆகிறது என்பதை ஒரு நோட்டில் எழுதி வைப்பது அனாவசியமான செலவுகளைக் குறைக்க உதவும்.
4. அதேபோல், தினம் இவ்வளவுதான் செலவு ஆகும் என்பதை ஒரு கணக்கு போட்டு அதன்படி, அதற்குள்ளாகவே செலவு செய்து விடுவது மிகவும் நல்லது. அதாவது, நமது செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இது உதவும். அதை மீறும்போது நமக்குள்ளேயே ஒருவித எச்சரிக்கை உணர்வும் வந்துவிடும்.
5. தற்போதைய பணி சூழலில் வார இறுதி நாட்களில் வெளியே சென்று சாப்பிடுவது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது. ஆனால், நினைத்தபோதெல்லாம் வெளியில் ஆர்டர் செய்வதையும் திடீரென்று நினைத்த உணவகங்களுக்குச் செல்வதையும் குறைத்துக் கொண்டாலே நிறைய நேரத்துடன் பணமும் மிச்சம் ஆகும்.
6. மாதத்திற்குத் தேவையான மளிகை மற்றும் இதர பொருட்களை அவ்வப்போது 100 கிராம் 200 கிராம் என்று வாங்காமல் மொத்தமாக வாங்கி வைப்பதனால் ஒரு சிறு தொகை நிச்சயம் மீதமாகலாம். அதிலும் அந்த மாதிரி பொருட்களை சலுகைகள் இருக்கும்போது வாங்கி வைத்துக்கொள்வது நல்லதுதான். நேரம் கிடைத்தால் மொத்த விலைக் கடைகளுக்குச் சென்று வாங்கலாம்.
7. நாம் அதிக பணம் செலவழிப்பது போக்குவரத்துக்கே. மிகவும் அத்தியாவசியம் என்றால் மட்டுமே கார் போன்ற வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், இருக்கவே இருக்கிறது அரசு பேருந்து மற்றும் தனியார் வாகன சேவைகள். அத்துடன் அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வதால் பெட்ரோல் செலவுடன் மருத்துவ செலவுகளையும் மீதப்படுத்தலாம். ஏனெனில் நடப்பது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
8. தற்போது ஆன்லைன் வணிகங்கள் அதிகம் பெருகிவிட்டன. நாம் எதை நினைக்கிறோமோ அதை அப்படியே அலைபேசியில் கொண்டு வருவது தகவல் தொழில்நுட்பத்தின் பணி. ஆனால், அதற்காக பார்க்கும் அனைத்தையும் வாங்கி விடாமல் எச்சரிக்கையுடன், அது எவ்வளவு அவசியம் எனப் பார்த்து வாங்குவது நமது கடமை. இல்லையெனில் நாம் எவ்வளவு சேமித்தாலும் ஆன்லைன் வணிகத்தில் இழந்து விடும் அபாயம் உள்ளது.
9. மாதம்தோறும் நாம் கட்டும் தவணைகளில் மிக முக்கியமானது மின்சாரக் கட்டணம். தங்கம் விலை எப்படி உயர்கிறதோ, அதேபோல் மின்சாரக் கட்டணமும் உயர்ந்து வருவதை அறிவோம். தேவையற்ற இடங்களில் எரிக்கப்படும் மின் விளக்குகளை அணைத்து வைப்பதும், வெளியில் செல்லும்போது வீட்டில் உள்ள அனைத்து முக்கியமான மெயின் விளக்குகளை அனைத்து விட்டுச் செல்வதும், ஏசி, டிவி உள்ளிட்டவற்றை தேவைக்கு மட்டும் உபயோகிப்பதும், குண்டு பல்புகளுக்கு பதில் எல்இடி பல்புகளை பொருத்துவதும் மின் கட்டணத்தை குறைக்க உதவும்.
10. வருமானம் வருகிறதோ இல்லையோ… ஆனால், அனைவரிடமும் கிரெடிட் கார்டுகள் நிச்சயம் இருக்கும். இதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் இருக்கிறது என்பதை அறிவோம். அதனால் எதற்கெடுத்தாலும் கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல், கையில் இருப்பதைக் கொண்டு செலவு செய்யுங்கள். 'சிறுதுளி பெருவெள்ளம்' போல் இதுபோன்ற வழிமுறைகளை கடைபிடித்தால் சம்பாதிக்கும் வருமானத்தில் கடன் வாங்காமல் சந்தோஷமாக வாழ முடியும்.