உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நாடு முழுவதும் 2011ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதை அறிவோம். இந்த சட்டத்தை மதிக்காமல் தயாரிப்பாளர்கள் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதும் அதை தெரிந்தே வாங்கி கடைகளில் விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
உணவுப் பொருட்களில் கலப்படம் உள்ளதை எப்படிக் கண்டுபிடிப்பது? உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தந்த சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. பாலில் சலவைத்தூள் கலப்படம் கண்டறிய ஐந்து அல்லது பத்து மில்லி பால் மற்றும் அதே அளவுள்ள நீர் எடுத்து அதில் பாலைக் கலந்து நன்றாக குலுக்கும் பொழுது அதில் கடினமான படலம் உருவாகினால் அதில் சலவை தூள் கலந்து இருப்பதை அறியலாம். தூய பால் என்றால் மெலிதான படலம் உருவாகும்.
2. நெய் மற்றும் வெண்ணையில் கலப்படத்தை கண்டறிவதற்கு கண்ணாடி கிண்ணத்தில் அரை டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் டிங்சர் அயோடினை இரண்டு, மூன்று சொட்டுக்கள் சேர்த்து நீல வண்ணம் தோன்றினால் மசித்த உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் ஸ்டார்ச் கலப்படம் உள்ளது என்று அறியலாம்.
3. தேனில் சர்க்கரை கரைசல் கலந்துள்ளதை கண்டறிய டம்ளரில் நீரில் ஒரு சொட்டு தேன் விடவும். தூய்மையான தேன் தண்ணீரில் கலக்காது தேன் நீரில் கரைந்தால் அதில் சர்க்கரை கலப்படம் உள்ளது என்று பொருள்.
4. சர்க்கரை, வெல்லம் போன்றவற்றில் சாக்பீஸ் தூள் கலப்படம் உள்ளதா என்பதை அறிய கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்துக்கொண்டு அதில் சர்க்கரை, வெல்லத்தை கரைக்கும்போது அடியில் மாவு போன்ற பொருள் படிந்தால் அதில் கலப்படம் உள்ளது.
5. சமையலுக்கு உகந்த பருப்பில் கேடு விளைவிக்கக்கூடிய கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருந்தால் பருப்பின் அடிப்பகுதி சரிவாகவும் சதுர வடிவிலும் காணப்படும். நன்கு உற்று நோக்கினால் இதைக் கண்டறியலாம்.
6. ராகு கேழ்வரகில் ரோடமைன்-பி என்ற ரசாயனப் பொருள் வண்ணத்துக்காக சேர்க்கப்படுகிறது. இதைக் கண்டறிய பருத்தி பஞ்சை வைத்து தேய்த்தால் கேழ்வரகில் உள்ள செயற்கை நிறம் அதில் ஒட்டிக் கொள்ளும்.
7. மிளகில் பப்பாளி விதைகள் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை அறிய கடையில் வாங்கிய மிளகில் சிறிதளவு எடுத்து கண்ணாடி டம்ளர் நீரில் போட்டால் தூய மிளகு என்றால் அடியில் தேங்கும். பப்பாளி விதை என்றால் தண்ணீரில் மிதக்கும்.
8. மிளகு போல் கடுகு விதையில் பிரம்ம தண்டு விதைகள் கலப்படம் செய்திருந்தால் கடுகின் மேற்பரப்பு சொரசொரப்பாக இருப்பதுடன் உட்புறம் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதேநேரத்தில் ஒரிஜினல் கடுகு என்றால் தோல் நீக்கி பார்த்தால் பளபளப்பான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
9. மிளகாய் பொடியில் செயற்கை வண்ணம் உள்ளதா என்பதை அறிய கண்ணாடி டம்ளரில் நீர் எடுத்து அதன் மேல் பரப்பில் சிறிது மிளகாய் பொடியை தூவும்போது பொடியில் உள்ள செயற்கை வண்ணம் கோடுகளாக கீழே இறங்கும். மேலும், அதில் மரத்தூள் கலந்து இருந்தால் நீரின் மேற்பரப்பில் மிதந்து காட்டி கொடுத்து விடும்.
10. காபி தூளில் தேவைக்கு அதிகமாக சிக்கரித்தூள் கலக்கப்பட்டு இருந்தால் பாலில் கலக்கும்போது ஒரிஜினல் காபி தூள் பாலில் மிதக்கும். சிக்கரித்தூள் மூழ்கும்.