நீரிழிவைத் தடுக்கும் கொள்ளு!

Sarkarai Noyai Thadukkum Kollu!
Sarkarai Noyai Thadukkum Kollu!https://www.herzindagi.com

'கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதன் பொருள் உடல் பருமன் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு நீரிழிவு பிரச்னை இருக்கும். நீரிழிவு பிரச்னைக்கு நல்ல நிவாரணம் தருவதாக கொள்ளு விளங்குகிறது. மற்ற தானியங்களில் செய்யப்படும் ரசம், தால், பொடி என்று அத்தனையையும் கொள்ளிலும் செய்யலாம். இது மிகவும் ருசியாக இருக்கும்.

முளைகட்டிய கொள்ளை லேசாக வறுத்து விட்டு, அதனுடன்  பொடியாக நறுக்கிய வெங்காயம், வெள்ளரிக்காய், மல்லித்தழை, முட்டை, பொரி கலந்து சிறிதளவு எலுமிச்சை சாறு விருப்பப்பட்டால் சேர்த்து சாப்பிடலாம். நன்றாக இருக்கும். நீரிழிவுக்காரர்களுக்கும் இது பசியைப் போக்கி நிறைவான ஸ்நாக்ஸ் சாப்பிட்ட திருப்தியைக் கொடுக்கும். நீரிழிவுக்காரர்கள் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை தீர்க்கும். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு.

ஒரு உழக்கு கொள்ளுடன் கைப்பிடி துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வர மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு இட்லிப்பொடியாக பயன்படுத்தலாம். ரசப்பொடி அரைக்கும்போது இதர பருப்பு, சாமான்களுடன் கொள்ளுவையும் கைப்பிடி அளவு வறுத்து சேர்த்து அரைத்து ரசம் வைக்கலாம். சளி இருந்தால் அகற்றும்.

கொள்ளை வறுக்கும்பொழுதே கமகம என்று வாசம் வரும். அதை அப்படியே சாப்பிட நல்ல ருசியாக இருக்கும். என்றாலும் வறுத்தக் கொள்ளுடன் வெல்லத் துருவலோ நாட்டு சர்க்கரையோ சேர்த்து அரைத்து அப்படியே லட்டு பிடித்து சாப்பிடலாம். இல்லை என்றால் சத்து மாவு போல் செய்து அப்படியே வைத்தும் சாப்பிடலாம். அந்த மாவில் கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். நல்ல இரும்பு சத்து கிடைக்கும். இரத்த சோகையை விரட்டும். மாதவிடாய் காலத்தில் இதுபோல் பெண்கள் செய்து சாப்பிட்டால் சோர்வை போக்கி புத்துணர்வை கொடுக்கும். இரத்தப் போக்கையும் இது கட்டுப்படுத்தும்.

அரிசியுடன் கொள்ளை ஊற வைத்து அரைத்து இதர சாமான்கள் கலந்து அடை செய்து சாப்பிடலாம். மற்ற பருப்புகளை சேர்த்து அரைத்து அடை,  தோசை செய்யும் பொழுது கொள்ளு பருப்பையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்து அடை, தோசை வார்க்கலாம். நல்லா ருசியாக இருக்கும். இதனால் தேவையற்ற கொழுப்பு கரையும். உடம்பும் உறுதிப்படும். கொள்ளை நன்றாக வறுத்து தனியாக பொடியாக்கி வைத்துக் கொண்டால், தண்ணியாகிவிட்ட இட்லி தோசை மாவுகளில் கலந்து கெட்டியாக்கி பயன்படுத்தலாம்.

கொள்ளை நன்கு வறுத்து மாவாக்கி அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, புளி, தக்காளி கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தாளித்து ரசமாக, சூப்பாக செய்து சாப்பிடலாம். நாள்பட்ட சளியையும் கரைக்கும் தன்மை இந்த ரசத்திற்கு உண்டு. அதனால்தான் எப்பொழுதும் சளி இருந்தால் கொள்ளு ரசம் வை என்று கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
உண்டிகோல் உணர்த்தும் வாழ்க்கை தத்துவம் தெரியுமா?
Sarkarai Noyai Thadukkum Kollu!

உடல் இளைக்க விரும்புபவர்கள் முதல் நாள் இரவே கொள்ளை ஊறவைத்து, மறுநாள் காலையில் அதன் தண்ணீரை வடித்து விட்டு சாப்பிட வேண்டும். உடலில் சேர்ந்து இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடையை குறைப்பதுடன், உடல் உறுப்புகளையும் பலமாக்கும். இதனால்தான் 'கொழுத்தவனுக்கு கொள்ளு' என்ற பழமொழி வந்தது போலும்.

கொள்ளை நன்றாக ஊற வைத்து ஊறியவுடன் காயவைத்து அதை எண்ணெயில் வறுத்து உப்பு, காரப்பொடி கலந்து ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். மிக்சர்களிலும் இதை கலந்து கொடுக்கலாம். நல்ல ருசியாக கிரிஸ்பியாக இருக்கும். கொள்ளில் அதிக புரதம் இருக்கிறது. நம் உடலில் சிதைவுறும் செல்களை மீட்டு திடமாக்கும் சக்தி கொள்ளுக்கு இருக்கிறது. ஆதலால் கொள்ளை நன்றாக வறுத்து அதனுடன் வர மிளகாய், தேங்காய், பூண்டு, புளி வைத்து அரைத்து துவையலாக செய்து சாப்பிடலாம். கிராமப்புறங்களில் இன்றும் கோடைக் காலங்களில் பழையது சாப்பிடுபவர்கள், கூழ் சாப்பிடுபவர்கள் இந்தத் துவையலை அதனுடன் சேர்த்து சாப்பிடுவதைக் காணலாம்.

இதுபோல் பல்வேறு நன்மைகள் கொண்ட கொள்ளு பருப்பை மற்ற பருப்புகளை போல உணவில் பயன்படுத்தி ஆரோக்கியம் காப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com