

மழைக்காலங்களில் வீட்டையும், மளிகைப் பொருட்களையும் பாதுகாப்பது சற்று கூடுதலான வேலைதான். அந்த வகையில் மளிகைப் பொருட்களைப் பாதுகாக்கும் எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. மழைக்காலங்களில் காற்று புகாத உலர்ந்த கொள்கலனில் மளிகைப் பொருட்களை சேமித்து வைப்பதோடு, புழுக்கள் மற்றும் பூச்சிகள் வராமல் தடுக்க, வேப்பிலையை போட்டு வைக்க வேண்டும்.
2. உயரமான இடத்தில் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாதபடி பருப்பு மற்றும் பொருட்களை வைப்பதோடு, நல்ல வெயிலில் உலர்த்திய பின்பு சேமிப்பது மிகவும் அவசியமாகும்.
3. மழைக்காலங்களில் காய்கறிகள் மற்றும் கீரைகள் சீக்கிரமாக அழுகிவிடும் என்பதால் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது.
4. சமையலறை குப்பைகளை தினமும் அப்புறப்படுத்துவதோடு, சமையலறை அலமாரிகளை சுத்தப்படுத்தி ஈரப்பதம் இல்லாமல் வறண்ட நிலையில் பார்த்துக் கொள்வதால் மளிகைப் பொருட்களின் ஆயுள் நீட்டிக்கப்படும்.
5. கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பர் பைகளில் மளிகைப் பொருட்களை சேமித்து வைப்பதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து காணப்படும்.
6. மழைக்காலங்களில் மசாலாப் பொருட்கள் கட்டியாகவோ அல்லது பூஞ்சை பிடிக்கும் என்பதால் சேமிப்பதற்கு முன்பாக வாணலியில் வறுத்து ஆற வைத்து கண்ணாடி கொள்கலனில் சேமித்து வைப்பதனால் நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கப்படும்.
7. சர்க்கரை வைத்திருக்கும் அலமாரிகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை வினிகர் மற்றும் தண்ணீரின் கலவையால் சுத்தப்படுத்தி உலர வைக்க வேண்டும். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்காக செயல்படுத்தப்பட்ட கரி, பேக்கிங் சோடா மற்றும் வேப்ப இலைகளைப் போட்டு வைப்பது ஈரப்பதத்தை உறிஞ்ச உதவி செய்யும்.
8. மழைக்காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் அதிக சுமைகளை ஏற்றாமல் இடைவெளி விட்டு காற்றோட்டமாக வைப்பதோடு காய்கறிகளை வைக்கும்போது உலர வைத்து சேமிப்பது மிகவும் நல்லது.
9. வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊறுகாயை உலர்ந்த கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடிகளில் சேமித்து வைப்பதோடு, அதனை எடுக்கும்போது உலர்ந்த கரண்டிகளை பயன்படுத்துவது நல்லது.
10. மழைக்காலங்களில் அரிசி, பருப்பு, தானியங்கள், மாவு, ரவை போன்ற மளிகைப் பொருட்களை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் தேவைப்படும் அளவிற்கு வாங்கிப் பயன்படுத்துவதால் பராமரிக்கும் டென்ஷன் குறையும்.
மழைக்காலம் முடியும் வரை மேற்கூறிய வழிமுறைகளை கையாள்வதன் மூலம் மளிகை பொருட்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு, பணமும் விரயமாகாது.