வீட்டு மனை வாங்குபவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

10 things home buyers need to know!
Lifestyle articles
Published on

ற்காலத்தில் ஃப்ளாட்களை (Flats) விட தனி வீடுகளையே (Independent House) மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதில் பல சௌகரியங்களும் நன்மைகளும் உள்ளன. வீட்டுமனையானது நாளாக நாளாக வீட்டு மனையின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்லும் என்பது முக்கியமான ஒரு விஷயம். வீட்டு மனை வாங்குவதற்கு முன்னால் சில முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிந்து அவற்றை நீங்கள் உறுதிசெய்து கொள்ளுவது நல்லது. அதைப் பற்றி நாம் இந்த பதிவில் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுவோம்.

பொதுவாக DTCP (Directorate of Town and Country Planning) எனப்படும் நகர ஊரமைப்பு இயக்ககத் துறையால் அங்கீகரம் பெற்ற லே-அவுட்களில் வீட்டுமனை வாங்குவது மிகவும் சிறந்தது. பிற்காலத்தில் வீடுகட்டி வசிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அந்த மனைப்பிரிவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும். விலை சற்று கூடுதலாக இருந்தாலும் கூட இத்தகைய DTCP அங்கீகாரம் பெற்ற மனைகளை வாங்கினால் பட்டா பெயர் மாற்றம், வீடுகட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளிடமிருந்து அப்ரூவல் பெறுவது, வங்கிக்கடன் பெறுதல் முதலான விஷயங்களை சிரமம் இல்லாமல் சுலபமாக செய்யலாம். இது மிகவும் பாதுகாப்பானதும் கூட. மேலும் RERA (Real Estate Regulatory Authority) அப்ரூவலும் மிகவும் அவசியம். இந்த இரண்டையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

ஒரு தனிநபரிடமிருந்து வீட்டுமனையினை வாங்கும்போது கீழ்காணும் விஷயங்களை சரி பார்ப்பது சிறந்தது.

1. ஒரு நபர் கிரையம் செய்ய இருக்கும் வீட்டு மனைக்கான கணினி பட்டா (Computer Patta) விற்பனை செய்யும் அந்த நபரின் பெயரில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். இது வீட்டுமனை அந்த நபருக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த உதவும் ஒரு முக்கியமான சான்றாகும். பட்டா இல்லாத வீட்டுமனையினை வாங்குவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

2. வீட்டுமனையின் அசல் பத்திரத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்து விடுங்கள். வீட்டுமனை அடமானத்தில் இல்லை என்பதை இது உறுதிபடுத்திக்கொள்ள உதவும்.

3. பத்திரப்பதிவு அலுவலகத்தில் அந்த வீட்டு மனைக்கான வில்லங்கச் சான்றிதழை Encumbrance Certificate (EC) குறைந்தபட்டம் 13 ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக 33 ஆண்டுகளுக்கு வாங்கிப் பார்ப்பது சிறந்தது. இது ஒரு சொத்துக்கு யார் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம். மேலும் கடந்த 33 ஆண்டுகளில் அந்த சொத்து யார் யாருக்கெல்லாம் விற்கப்பட்டு கைமாறியிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

4. வீட்டுமனைக்கான காலி மனை வரி கட்டியிருக்கிறாரா (Vacant Land Tax) என்பதையும் விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இதுவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

5. குறிப்பிட்ட வீட்டுமனைக்கான நான்கு எல்லைக்கற்கள் உரிய இடத்தில் சரியாக இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இரண்டொரு கற்கள் இல்லையென்றால் விற்பனை செய்யும் நபரிடம் கூறி உரிய கற்களை முறைப்படி அளந்து எல்லைக் கற்களை பொருத்திக் கொடுக்கச்சொல்லுங்கள். இது பிற்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைத் தவிர்க்கும்.

இதையும் படியுங்கள்:
பிறர் உங்கள் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையா? இவைதான் காரணம்!
10 things home buyers need to know!

6. வீட்டுமனையானது குறைந்தபட்சம் 23 அடி பாதையில் (23 Feet Road Access) அமைந்திருந்தால் நல்லது. இதை உறுதிசெய்து கொள்ளுங்கள். DTCP அங்கீகாரம் பெற்ற மனையாக இருந்தால் 23 அடி பாதை இருக்கும்.

7. நீங்கள் மனை வாங்கும் பகுதியில் குடிநீர் எவ்வளவு ஆழத்தில் கிடைக்கிறது என்பதையும் அது உப்புநீரா அல்லது நல்ல நீரா என்பதையும் அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.

8. பெரும்பாலும் மனையின் முகப்பானது 30 அடி அகலம் மற்றும் 40 அடி நீளம் என்ற அளவில் இருந்தால் நல்லது. பிற்காலத்தில் வீடு கட்டும் போது இந்த மனை அளவில் ஓரளவிற்கு நாம் நினைத்தபடி வசதியாக வீடு கட்டிக் கொள்ளலாம். 20 அடி அகலம் 60 அடி நீளம் உள்ள மனையாக இருந்தால் வீடு கட்டும்போது உங்கள் விருப்பத்திற்கு வீடு கட்ட முடியாது. குறைந்தபட்சம் மனையின் முகப்பானது 22 அடி அகலமாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

9. வீட்டுமனையின் பத்திர நகல், அவற்றின் தாய்ப்பத்திர நகல், வில்லங்கச் சான்றிதழ், கணினிபட்டா நகல் முதலான அனைத்து ஆவணங்களையும் ஒரு வழக்கறிஞரிடம் கொடுத்து சரிபார்த்துக் கொள்ளுவது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

10. நீங்கள் பதிவு செய்ய இருக்கும் வீட்டு மனைக்கான கிரையப் பத்திரத்தை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்து பிழைகள் ஏதும் இல்லை என்பதையும் எல்லா தகவல்களும் சரியாக இருக்கிறது என்பதையும் பத்திரப் பதிவிற்கு முன்னால் உறுதி செய்து கொள்ளுங்கள். இதுவும் மிக முக்கியமான விஷயமாகும்.

இப்படி பல விஷயங்களை கவனிக்காமல் வேக வேகமாக வீட்டுமனையினை வாங்கிவிட்டு பிற்காலத்தில் சிக்கலில் தவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பாடுபட்டு சேர்த்த பணமல்லவா? ஒருமுறைக்கு இரண்டு முறை ஆவணங்களை பொறுமையாக சரி பார்த்து வீட்டுமனையினை வாங்கி அதில் வீடு கட்டி ஆனந்தமாக வாழுங்கள்.

இதையும் படியுங்கள்:
சின்ன சின்ன விஷயங்களில்தான் ஜீவன் இருக்கிறது!
10 things home buyers need to know!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com