சின்ன சின்ன விஷயங்களில்தான் ஜீவன் இருக்கிறது!

Family
Family
Published on

வீடு, குடும்பம் என்று வந்துவிட்டால் சில நேரங்களில் பேசுவதற்கு நேரம் கூட கிடைக்காமல் உழைப்பவர்கள் அதிகமாகி வருகிறார்கள். வீட்டில் எப்பொழுதும் அன்பும், அமைதியும் நிலவ வேண்டும் என்றால் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அன்பு வட்டம், உற்றார், உறவினர் சொந்த, பந்தம் , அக்கம் பக்கம் என்று அனைவரிடமும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண நாள் வாழ்த்துக்கள், பண்டிகை நாள் வாழ்த்துக்கள் போன்றவற்றை பரிமாறி அன்பு செலுத்த வேண்டும். இதனால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைந்து ஆரோக்கியமும் மன அமைதியும் அன்பும் அதிகரித்து சந்தோஷமாக வாழ வழிவகுக்கும்.

எவ்வளவு தான் வேலை இருந்தாலும் குடும்பத்தினருடன் தினமும் சிறிது நேரமாவது ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசுவதும், உணவு உண்பதும், உள் விஷயங்களை வெளியில் சொல்லாமலும், ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொள்ளாமல், நிறையை போற்றி, பாராட்டி பேசிக்கொள்வதிலும் வாழ்வில் நிம்மதியை காண முடியும். இதனால் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வழிவகுக்கும்.

சில குடும்பங்களில் மகன் அவரின் சொந்த வேலையாக பெற்றோரிடம் தான் பேசாமல் இருந்தால் கூட அதை மனைவிதான் சொல்லிக் கொடுத்து பேசாமல் இருக்க வைத்து விட்டார் போலும் என்று தவறாக சந்தேகமாக நினைத்துக் கொள்பவர்கள் உண்டு. அதற்கு இப்படி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி விட்டால் பிரச்சனை தீர்ந்தது. யாரும் யாரையும் தப்பாக நினைக்க வேண்டிய சந்தர்ப்பமும் அமையாது.

எப்பொழுதும் அதிகமாக சிந்தித்து குறைவாக பேசும் பொழுது நிறைய தவறுகள் ஏற்படாமலும், எதையும் மிகைப்படுத்தி பேசாமலும், தேவையானதை பேசாமல் விடாமலும் இருக்கலாம். ஆதலால் வீட்டாரே ஆயினும் சிந்தித்து திறம்பட பேசுங்கள்.

கூட்டுக் குடும்பம் என்றால் வெவ்வேறு வகையான சிந்தனைகள் எல்லோருக்கும் இருக்கும். ஆதலால் நிறைகுறைகளை நன்றாக ஆலோசித்து ,சிந்தித்து எதையும் எப்பொழுதும் எல்லா நேரமும் நேர்மறையாகவும் நல்ல சிந்தனையுடனும் பேசுவதை மனதில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

பயணம் செல்வதாக இருந்தால் நீண்ட நாட்களுக்கு முன்பே நன்றாக திட்டமிட்டு, முதியோர் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதாக இருந்தால் அதற்கான மருந்து உணவுகளை தக்க படி ஏற்பாடு செய்து எடுத்துச் செல்வது அவசியம். முதியோர்களை வீட்டில் விட்டு விட்டு செல்பவராக இருந்தால் அவர்கள் எளிமையாக சமைத்து சாப்பிடும் படியான ஐட்டங்கள் தயார்படுத்தி வைத்து விட்டு செல்வது நல்லது.

எந்த வேலையை செய்தாலும் குறிப்பாக சமையலை ஒரே மாதிரியாக செய்யாமல் வித்தியாசமாக, புதுமையாக செய்ய ஆரம்பித்தால் அதுவே ஒரு நல்ல சாதனையாக மாறிவிடும். மற்றவர்களும் பாராட்டுவார்கள். இதனால் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தனது தனித்திறமையைக் காட்ட ஆரம்பிப்பார்கள் . அப்பொழுது பேச்சுக்கு வேலை குறைந்து செய்யும் செயலில் தீவிரம் அதிகமாகும் . கருத்து பரிமாற்றம் நல்ல ஆனந்தத்தை கொடுக்கும். இதனால் அன்பு மலரும்.

இதையும் படியுங்கள்:
'கிரெடிட் கார்டு' தெரியும்... 'கிரெடிட் லைன்' தெரியுமா?
Family

அவரவர் தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் தவறாமல் பங்கு பெறுவது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நல்ல அனுசரணையான நட்பையும் அன்பையும் அதிகரிக்க வைக்கும். இதனால் குடும்பத்தில் மட்டுமின்றி தெருவிலும் ஒற்றுமை மலரும்.

நல்ல நூல்களை தேடிப் படிப்பதில் ஆர்வம் காட்டினால் வீட்டில் உள்ள குழந்தைகளும் அதை பின்பற்றுவார்கள். இதனால் வாசிப்பை நேசிக்க ஆரம்பிப்பார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக தினமும் சில நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். நிறுத்தி நிதானமாக முதுகை நேராக வைத்து சீராக மூச்சுப் பயிற்சி செய்யும் பொழுது மனம் அமைதி அடையும். இதனால் நம்மை நாமே அறிந்து கொண்டு நல்ல விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சியை அடைய முடியும். தீயவற்றை மறப்பதும், தவறுகளை மன்னிப்பதும், எல்லோருடனும் இன்முகத்துடன் பேசுவதும் இந்த மூர்ச்சி பயிற்சியால் கிடைக்கும் நன்மைகள் என்பதை அனுபவபூர்வமாக அறியலாம்.

இதுபோல் சின்ன சின்ன விஷயங்களில் தான் ஜீவன் இருக்கிறது என்பது அனுபவபூர்வமாக அறிந்து அமைதியாகவும், அன்பாகவும் நேசமுடனும் வாழ்வோமாக! அதுதான் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டி.

இதையும் படியுங்கள்:
10-ம்தேதி ரிலீஸ்: அஜித்தின் 'குட் பேட் அக்லி' சறுக்குமா? சாதனை படைக்குமா?
Family

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com