வீட்டில் செய்யக்கூடாத விஷயங்கள் பல இருக்கின்றன. அவற்றை செய்யாமல் இருந்தாலே நல்ல மனநிலையுடன், ஆரோக்கியமான உடல்நிலையுடன் நிம்மதியாக வாழ்க்கையை நகர்த்தலாம். அப்படி நாம் செய்யும் செயல்களில் எதையெல்லாம் நிலைநிறுத்த வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகள் அழுகிறது என்பதற்காக, அதிகமாக வேலை செய்ய விடாமல் தொந்தரவு செய்கிறார்கள், சாப்பிட மறுக்கிறார்கள் என்பதைக் காரணம் காட்டி நம் கையில் இருக்கும் செல்போனை அவர்கள் கையில் கொடுப்பதை நிறுத்த வேண்டும். குழந்தைகள் அந்த செல்போனை வாயில் வைத்தால் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
அதேபோல், நாம் மிக்ஸியை அரைக்கும்போது பவர் கட் ஆகிவிட்டால் பவர்தான் இல்லையே என்று அதற்குள் சுவிட்ச் ஆப் பண்ணாமல் அதற்குள் நாம் கையை விட்டு தோண்டுவதையோ விரலால் மசாலாக்களை தள்ளி விடுவதையோ செய்வதை நிறுத்த வேண்டும். பவர் வந்துவிட்டால் நம் கை விரல்கள் என்ன ஆகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
நாம் உடுத்தி இருக்கும் துணியின் நுனியைப் பிடித்துக் கொண்டு ஸ்டவ்வில் இருக்கும் எந்த பொருளையும் எடுக்க முயற்சி செய்வதை அடியோடு நிறுத்துங்கள். ஒரே நேரம், சமயம் போல் எப்பொழுதும் இருக்காது. சமயத்தில் கை கால்களிலும் சுட்டுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவது உண்டு. அதற்கு மேல் விபரீதம் நடக்காமல் இருப்பதற்கு அப்படி நுனியைப் பிடித்து இறக்குவதை அடியோடு நிறுத்துங்கள்.
மரக்கிளைகள், வீட்டில் மர உத்திரம் போன்றவற்றில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுபவர்கள் மற்றும் திருமணங்களில் பெண், மாப்பிள்ளைக்காக சடங்கு செய்ய வைத்திருக்கும் நல்ல திடம் இல்லாத ஊஞ்சல் போன்றவற்றில் ஆடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதையும் கூட அடியோடு நிறுத்தினாலே நல்லதுதான். கயிற்றை வேகமாக ஆட்டும்பொழுது பயத்தில் நிலை தடுமாறி கீழே விழும் அபாயம், கயிறு முக்கியமான இடத்தில் அறுந்து விழும் அபாயம் அதிகம்.
சமையல் அறையில் கை துடைப்பதற்கு கொக்கியுடன் உள்ள ரவிக்கைத் துணிகளை பயன்படுத்துவதை அடியோடு நிறுத்த வேண்டும். அவசரத்தில் கை துடைக்கும் பொழுது அந்த கொக்கிகள் நம் கையை பதம் பார்க்க வாய்ப்புகள் அதிகம். ஆதலால் மலிவு விலையில் கிடைக்கும் டவல்களை உபயோகிக்க வாங்கி வைப்பது நல்லது.
வீட்டில் சிறியோர் முதல் பெரியோர் வரை யார் எந்தப் பொருளை எடுத்தாலும் எடுத்த இடத்திலேயே வைக்க பழ(க்)குங்கள். அதை விடுத்து ஆங்காங்கே அப்படியே போட்டு விட்டு வைத்த இடம் தெரியாமல் தேடுவதை அடியோடு நிறுத்துங்கள். இதனால் வீட்டில் அனாவசிய டென்ஷன் ஏற்படாது தவிர்க்கலாம்.
பரணில் வைக்கும் பொருட்களின் டப்பாக்களின் மீது, பொருட்களின் லிஸ்ட்டை ஒரு வெள்ளை தாளில் பெரிய எழுத்தில் எழுதி கீழிருந்தே படிக்கும் அளவுக்கு அந்த பெட்டியில் ஒட்டி வைத்து விட்டால் அவசரத்திற்கு எடுத்துப் புழங்க வசதியாக இருக்கும். அதை விடுத்து அப்படியே போட்டுவிட்டுத் தேடுவதை நிறுத்துங்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்ற ஓடியாடி வேலை செய்யும் இல்லத்தரசிகளே, தங்களுக்காகவும் ஒரு பத்து நிமிடத்தை ஒதுக்கி சரியான நேரத்திற்கு சாப்பிடப் பழகுங்கள். குடும்ப வண்டியை இழுத்துச் செல்லும் அச்சாணியாக இருப்பதில் நீங்களும் ஒருவர் என்பதை மனதில் இருத்துங்கள்.
டிவி, ஃப்ரிட்ஜ், டியூப் லைட் போன்ற எலக்ட்ரிக் சாதனங்களை அனைத்து சில நொடிகளில் மீண்டும் போடுவதை நிறுத்துங்கள். இப்படி போடுவதால் ஃப்ரிட்ஜில் கம்பரசர், டிவியில் ஃபிக்சர்டியூப், லைட்டில் பாலஸ்டும் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதாக வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
வீட்டில் குழந்தைகளுடன் பேசும்போது அவர்களது படிப்பு, ஆசிரியர், நண்பர்களை பற்றி, அன்றன்று வகுப்பில் நடந்ததைப் பற்றி அவர்கள் சொல்ல வருவதை காது கொடுத்துக் கேளுங்கள். அதேபோல், பெரியவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து, சிறிது நேரம் தினசரி அவர்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதை நிறுத்தாதீர்கள்.
இந்தப் பத்து விஷயங்களில் கவனமாக இருந்தால் குடும்பம் நிம்மதியாக செல்ல ஏதுவாகும்.