நமது நாக்கு ஒரு நோய் காட்டும் கண்ணாடி. சுவை அறிதல், பற்களால் உணவு மெல்லப்படுவதற்கு இலகுவாக தள்ளிக்கொடுத்தல், மென்ற உணவை விழுங்குதல் மற்றும் பேசுதல் போன்ற செயல்களுக்கு நாக்கு பயன்படுகிறது. நாக்கின் மேற்பரப்பில் சுவை உணரும் அரும்புகள் உள்ளன. இவற்றின் உதவியால்தான் இனிப்பு, கசப்பு, உப்பு, புளிப்பு, காரம் துவர்ப்பு முதலான பல சுவைகளை உணர முடிகின்றது. பேசுவதற்குக் காரணமாக விளங்குவதும் நாக்குதான்.
நாக்கில் குறைபாடுகள் இருப்பின் பேச்சு சரியாக இருக்காது. நாவின் அடியில் ‘பிரெனெலம்’ எனப்படும் ஒரு தசை நாண் இருக்கிறது. இது சற்று சிறியதாக இருந்துவிட்டால் கூட பேச முடியாது. பேச்சில் காணப்படும் குழறல்களுக்கு இதுவே காரணமாக அமைந்திருக்கும். இலகுவான வளைதிறன் அற்ற நாக்கும் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
பொதுவாக, நாக்கு இளஞ்சிவப்பு நிறம் உடையது. இதன் நிறம் அல்லது தோற்றம் இவற்றில் ஏதேனும் மாறுதல் ஏற்பட்டால் அது உடலில் தாக்கப்பட்டிருக்கும் நோயை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் நாக்கை நீட்டச் சொல்லி பார்ப்பதை ஒரு வழக்கமாகக் கையாளுகிறார்கள்.
நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அர்த்தம் ஆகும். அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளதைக் குறிக்கும். நாக்கு நீல நிறத்தில் இருந்தால் சிறுநீரகத்தில் பாதிப்பு இருப்பதை உணர்த்தும். நாக்கு வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தால் நோய்த் தொற்று இருப்பதைக் குறிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதையும் இது சுட்டிக்காட்டும். நாக்கு சாம்பல் நிறத்தில் இருந்தால் செரிமானம் மற்றும் மூலநோய் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். நாக்கு காபி நிறத்தில் இருந்தால் நுரையீரல் பாதிப்பை குறிக்கும்.
நாக்கில் ஆங்காங்கே வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் நாக்கின் உராய்வுத் தன்மை குறைவதையும் எரிச்சல் தன்மை இருந்தால் பயன்படுத்தும் பற்பசை நாக்கில் அலர்ஜியை ஏற்படுத்துவதையும் உணர்த்தும். நாக்கு வழவழப்பாகவும் இரத்த சிவப்பாகவும் காணப்பட்டால் ஈரல்களில் பாதிப்பு ஏற்பட்டதைக் குறிக்கும். நாக்கு வெளிறிப் போயிருந்தால் மஞ்சள் காமாலை நோயைக் குறிக்கும்.
நாக்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அது மஞ்சள் காமாலை நோயைக் குறிக்கும். நாக்கில் ஆங்காங்கே கருப்பு திட்டுகள் காணப்பட்டால் வைட்டமின் பி12 சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை அறிவிப்பதாக அர்த்தம். நாக்கு இரத்த சிவப்பாக இருந்தால் இரத்த சோகையினால் ஏற்படும் சரும வெடிப்பு நோயைக் குறிக்கும்.
சிலர் நாக்கைப் பற்றி கவலைப்படுவதில்லை. நாக்கை சுத்தம் செய்யும் வகையில் தற்போது பிரஷ்கள் வருகின்றன. தினமும் நாக்கை சுத்தம் செய்வதால் சுவைக்கும் திறன் மேம்படும். நாக்கில் தங்கி இருக்கும் பாக்டீரியாக்களை நீக்கிவிடலாம் வாய் துர்நாற்றம் நீங்கும். ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.
காலை, மாலை இரு வேளையும் பற்களைச் சுத்தம் செய்வது போல் நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இது வாயில் உள்ள நுண் கிருமிகள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் உருவாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
அவ்வப்போது இளம் சூடான நீரில் கல்லுப்பு சேர்த்து வாயை கொப்பளிக்கலாம். சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தால் தினமும் நல்லெண்ணையில் ஆயில் புல்லிங் செய்வது நல்ல பலனைத் தரும். பற்களைப் பராமரிப்பது போல் நாக்கையும் நன்றாகப் பராமரித்தால் நோயின்றி வாழலாம்.