உங்களிடம் அடிக்கடி உங்கள் உறவினர்களோ அல்லது நண்பர்களோ கடனாக பணம் கேட்டு வருவது சகஜமான ஒன்று. அவர்களிடம் நீங்கள் பரிதாபப்படுவதும் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். நாளடைவில் இது இருவருக்கிடையேயுள்ள உறவைக் கொண்டு செல்வதில் சிரமத்தை உண்டுபண்ணச் செய்யும். உங்கள் நிதி நிலைமையை சீராக வைத்துக்கொள்ளவும், மன அமைதிக்காகவும் உங்களுக்கு நீங்களே ஓர் எல்லைக் கோட்டை உருவாக்கிக் கொண்டு கடன் கேட்பவர்களிடம் ‘நோ’ சொல்லப் பழகிக்கொள்வது நலம். அதற்கான 10 வகை ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. முதலில் கவனிக்கணும்: கடன் கேட்பவர்களுக்கு பதில் கூறும் முன் அவர்கள் கூறுவதைக் கவனித்துக் கேளுங்கள். அவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர்களைக் காயப்படுத்தாமல் ‘நோ’ சொல்வதற்கு இது உதவும்.
2. சிறிது டைம் கேளுங்கள்: அவர்கள் கேட்பது உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடியதாக நீங்கள் உணர்ந்தால் அவர்களிடம் ஒரு நாள் அவகாசம் தரும்படி கேளுங்கள். இந்த இடைவெளி உங்களுக்கும் அவர்களுக்கும் சூழ்நிலையை மறுபரிசீலனை செய்து ஒரு வலுவான முடிவுக்கு வர உதவும்.
3. விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளல்: எவருக்கும் கடன் கொடுப்பதில்லை என்ற பாலிஸியை உருவாக்கிக் கொண்டு, அதை கடன் கேட்பவரிடம் புரியும்படி கூறிவிடுவது உங்கள் மன பாரத்தைக் குறைக்கவும், நீங்கள் உருவாக்கிய எல்லைக் கோட்டைத் தாண்டாதிருக்கவும் உதவும்.
4. உறுதியான நிலைப்பாட்டை கடைபிடித்தல்: கடன் கேட்பவரிடம் தயக்கத்தோடு மழுப்பலான பதில் தருவதையும், பிறகு தருவதாக நம்பிக்கையூட்டுவதையும் தவிர்த்து ‘நோ’ என்ற பதிலை உறுதியாகக் கூறிவிடுவது இருவருக்கும் நன்மை பயக்கும்.
5. காரணத்தை விளக்குதல்: வீட்டுத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலை இருப்பதால் கடன் தர இயலாது என்ற காரணத்தை அவர்களிடம் சுருக்கமாகக் கூறி விடுங்கள். மேற்கொண்டு அவர்கள் வலியுறுத்த இடம் தராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
6. ‘நோ’ சொல்ல பயிற்சி எடுங்க: வீட்டில் ஓய்வாக இருக்கும்போது கடன் கேட்டு வருபவரிடம் பிசிறில்லாத குரலில் எவ்வாறு ‘நோ’ சொல்வது என்பதற்கு ஒத்திகை பாருங்கள். இது உங்களுக்கு சூழ்நிலை வரும்போது தயக்கமின்றி பதிலளிக்க நல்ல முறையில் உதவும்.
7. நிதி நிலைமையை வெளிப்படையாக விளக்குவது: உங்களின் நிதி நிலைமையை ஓரளவுக்கு வெளிப்படையாக கடன் கேட்பவரிடம் விளக்கிக் கூறுவதன் மூலம் அவருக்கு நீங்கள் உதவ முடியாத நிலையில் இருப்பதைப் புரிய வைக்க முடியும்.
8. விரிசலை சந்திக்கத் தயாராயிருங்கள்: உறவினர் ஒருவர் உங்களிடம் கடன் கேட்டு வரும்போது நீங்கள் ‘நோ’ சொல்லி திருப்பி அனுப்பினால் அவருக்கு உங்கள் மீது வெறுப்பு ஏற்படும். உங்கள் உறவையே அவர் முறித்துக் கொள்ளவும் கூடும். இதை சிறிதும் கண்டுகொள்ளாமல் 'லெட் கோ' (let go) மன நிலையில் இருந்துவிட்டால் நாளடைவில் அவரே வந்து உங்களுடன் மீண்டும் இணைந்து கொள்வார்.
9. குற்ற உணர்ச்சியைக் கைவிடுங்கள்: ஒருவர் கடன் கேட்டு, அதை நீங்கள் மறுத்து விட்ட பிறகு உங்கள் மனதிற்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். 'பரவாயில்லை... பண உதவி செய்வதெல்லாம் இயலாத செயல்தான். விட்டுத் தள்ளு’ என உங்க மனதை நீங்களே சமாதானம் செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.
10. மாற்று வழியைக் கற்பிக்கலாம்: பண உதவியைத் தவிர்த்து, அவர்களின் வருமானத்திற்குள் எப்படி பட்ஜெட் போட்டு குடும்பத்தை கொண்டு செல்லலாம், அதிகப்படி வருமானம் பெற வேறென்ன வழிகளை அவர்கள் கையாளலாம் என்ற வகையில் ஆலோசனை சொல்லி உதவலாம்.