சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மக்களின் வாழ்வோடு ஒன்றியிருந்த ஒரு விளக்குதான், ‘அரிக்கேன் விளக்கு’ (Hurricane Lamp). இந்த விளக்கைப் பற்றிய சில சுவாரசியத் தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அரிக்கேன் விளக்குகள் பயன்பாட்டில் இருக்கும். அதேபோல, சிம்னி விளக்குகளும் ஒவ்வொரு வீட்டிலும் காணப்படும். சிம்னி விளக்கு என்பது ஒரு சிறிய வகை விளக்கு. இதை ‘காடா விளக்கு’ என்றும் அழைத்தார்கள். கெரோசின் ஊற்ற ஒரு சிறிய குடுவை போன்ற அமைப்பு. அதன் மீது திரி பொருத்த ஒரு அமைப்பும் அதை ஏற்றி இறக்க ஒரு திருகும் காணப்படும். இதன் மீது ஒரு சிறிய கண்ணாடிக் குடுவை காணப்படும். இதுவே சிம்னி விளக்கு.
மின்சாரம் தடைபடும் இரவு நேரங்களில் மக்களுக்கு வெளிச்சத்தை வழங்கி உதவியது இந்த சிம்னி விளக்குதான். ஆனால், இதிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும். மேலும், காற்றடித்தால் இந்த விளக்கு அணைந்து விடும். மீண்டும் மீண்டும் ஏற்றி உபயோகிக்க வேண்டும். இந்தக் குறைகளைப் போக்க வந்ததுதான் அரிக்கேன் விளக்குகள்.
ஒரு பிரிட்டன் நிறுவனம் மண்ணெண்ணெயில் எரியும் அரிக்கேன் விளக்கை நமது நாட்டில் அறிமுகப்படுத்தியது. அந்த நிறுவனத்தினர் ‘இந்த விளக்கு சாதாரணக் காற்றில் மட்டுமில்லாமல், புயல் காற்றிலும் அணையாது எரியக் கூடியது’ என்று விளம்பரம் செய்தார்கள். அவர்கள் விளம்பரம் செய்தது போலவே இந்த விளக்கு எத்தகைய காற்றடித்தாலும் அணையாமல் நின்று எரிந்தது. இதனால் அந்தக்கால மக்கள் அரிக்கேன் விளக்கை வாங்கி பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
கடுமையான காற்று வீசினாலும் அணைந்து விடாமலும், சிம்னி விளக்கினைப் போல் அடிக்கடி அணைந்து போகாமலும் அரிக்கேன் விளக்கு தொடர்ந்து எரிந்து மக்களுக்கு வெளிச்சத்தைத் தந்தது. சிம்னி விளக்கைப் போல அல்லாமல் குறைவான வெளிச்சம் இல்லாத வகையில் அதிக வெளிச்சத்தையும் தந்தது. இதை ‘லாந்தர் விளக்கு’ என்றும் அழைத்தார்கள்.
இந்த விளக்கின் திரியானது சிம்னி விளக்கைப் போல சிறியதாக உருட்டையாக இல்லாமல் அகலமாகவும் பட்டையாகவும் இருந்ததால் இதிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் அதிகமாக இருந்தது. மண்ணெண்ணெய் ஊற்றும் பகுதியும் (Kerosene Tank) சற்று பெரிய அளவில் இருந்ததால் இரவு நேரம் முழுவதும் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கும் ஆற்றல் அரிக்கேன் விளக்கிற்கு இருந்தது. புயல் காற்று அடித்தாலும் அணையாமல் எரியக்கூடிய சக்தி அரிக்கேன் விளக்கிற்கு உண்டு.
மின்சார வசதி இல்லாத பகுதிகளில் இரவு நேரப் பயணங்களுக்கும் இந்த விளக்கு பெரிதும் துணை நின்றது. அக்காலத்தில் இரவு நேரங்களில் மாட்டு வண்டியின் கீழ்ப்புறத்தில் பயண வெளிச்சத்திற்காக அரிக்கேன் விளக்கைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். மாட்டு வண்டி எவ்வளவு ஆடி அசைந்து சென்றாலும் அரிக்கேன் விளக்கு அணையாமல் எரிந்து வெளிச்சம் கொடுத்துக்கொண்டே இருக்கும்.
வீடு குடிபுகும்போது அதிகாலை நேரத்தில் பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குச் செல்லும் போது கையில் அரிக்கேன் விளக்கை ஏற்றி எடுத்துக்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லுபவர்கள் இந்த விளக்கை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். கடலில் எத்தகைய காற்றடித்தாலும் இந்த விளக்கு அணையாமல் எரிந்து இரவு நேரங்களில் அவர்களுக்கு மிகவும் பயன்பட்டு வந்தது. தற்காலத்திலும் இந்த அரிக்கேன் விளக்கு விற்பனைக்குக் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.