பெண்களாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் மணமுடித்து பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு செல்வது இயற்கை. புகுந்த வீடு செல்லும் பெண்கள் அங்கு செய்யும் ஒவ்வொரு செயலிலும் மாமியார், நாத்தனார், ஓர்ப்படி ஆகிய கணவன் வீட்டைச் சார்ந்த பெண்மணிகள் தலையிட்டு குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பதும் இயற்கை. அவற்றையெல்லாம் முகம் சுழிக்காமல் புன்னகையுடன் எதிர்கொண்டு சமாளிக்கையில்தான் இல்வாழ்கை இனிதே தொடரும். அதில்தான் பெண்களின் வெற்றி அடங்கியுள்ளது. அதற்கு அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 வகையான பழக்கங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. கணவன், மனைவியின் ஒத்த நிலைப்பாடு: உங்கள் கருத்துக்கள் உங்கள் துணையின் கருத்துக்களோடு ஒத்திருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஒரு நிலையான அணுகுமுறையை உங்கள் இன்-லாஸுடன் ஏற்படுத்திக்கொள்ள முடியும். உதாரணமாக நீங்கள் உங்கள் குழந்தையை வளர்க்கும் விதத்தில் உங்கள் இன்-லா குறை கூறும்போது பெற்றோர் இருவரும் ஒரேவிதமான பதிலைக் கூறுகையில் உங்கள் நிலைப்பாடு மேலும் வலுவுள்ளதாகும்.
2. பிரச்னைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள்: பிரச்னை வரும்போது அதைத் தவிர்க்க நினைக்காமல், கண்ணியத்துடன் நேருக்கு நேர் நின்று பதிலளியுங்கள். உதாரணமாக, உங்கள் மாமியார் உங்கள் வீட்டாரைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களைக் கூறும்போது, நீங்கள் அவர் மீது குற்றம் சுமத்துவது போல் பேசாமல் மாமியார் பேசியது எவ்வளவு தூரம் உங்களை வருத்தப்பட வைக்கிறது என்பதை நேராகவே கூறி விடுங்கள்.
3. தேவையற்ற இடத்தில் துணையை இணைக்க முயற்சி செய்யாதீர்கள்: இன்-லாஸுடன் பிரச்னை வெடிக்கும்போது துணையை மத்யஸ்தம் பண்ண அழைக்காதீர்கள். குடும்ப சந்திப்பு நிகழ்வுகளின்போது இன்-லாஸ் எல்லை மீறினால் அதை நீங்களே மெதுவான குரலில், உறுதியாக அவர்களிடம் கூறிவிடுவது நல்லது. இது தவறான தகவலைப் பரப்புவதற்கு வாய்ப்பளிக்காது.
4. இடைவெளி எடுத்துக்கொண்டு யோசித்த பின் பதிலளியுங்கள்: இன்-லா உங்கள் மீது அவமதிப்பான சொற்களை வீசும்போது உணர்ச்சி வசப்பட்டு உடனே எதிர் வினையாற்ற வேண்டாம். அமைதியாக ஒரு நாள் டைம் எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மறுநாள் அதைப்பற்றி அவர்களிடம் தெளிவாகப் பேசலாம்.
5. இன்-லாஸ் வருகையின் அளவை முறைப்படுத்துங்கள்: இன்-லாஸ் வெளியிடங்களில் இருந்து வாரம் ஒருமுறை வருபவராயின், அதில் உங்களுக்கு சிரமமிருப்பின் அவர்கள் வருகையை இரண்டு வாரத்தில் ஒருமுறை என்று முறைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களிடம் உறுதியாகக் கூறி விடுங்கள். அதைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் வாழ்க்கை சமநிலைப்படும்.
6. எதிர்பார்ப்புகளை நிராகரியுங்கள்: இன்-லாஸ் நம்மிடம் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டுமென முன்கூட்டியே நாம் கணித்து வைத்திருப்போம். அதற்கு நேர்மாறாக அவர்கள் நடந்துகொள்ளும்போது எதிர்பார்ப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு நிதர்சனத்தை ஏற்றுக்கொள்வதும் அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பிப்பதும் புத்திசாலித் தனமாகும்.
7. இறுக்கமான சூழ்நிலையில் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க கற்றுகொள்ளுங்கள்: இறுக்கமான சூழ்நிலையில் இன்-லாஸுடன் பேச வேண்டியிருக்கும்போது டென்ஷன் ஆகாமல் சுய கட்டுப்பாடோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் சமைத்திருக்கும் டின்னரில் ஏதாவது குறை கண்டுபிடித்து மாமியார் பேசினால் நீங்களும் 'பழிக்குப் பழி' இரத்தத்துக்கு இரத்தம்' என்கிற பாணியில் பதிலடி கொடுக்காமல் இதமான தொனியில் பதிலளித்தால் நிலைமை நேர்மறையாகும்.
8. மாமியாரின் உள் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்: தேவையில்லாமல் சில நேரங்களில் மாமியார் நம் உறவுகளையும் குழந்தைகளையும் பற்றி விமர்சனம் செய்யும்போது அது நம் மீதுள்ள அன்பினாலும் அக்கறையினாலுமே கூறப்படுகிறது என்பதை கருணையோடு புரிந்துகொள்ள முயற்சிக்கணும்.
9. பொதுவாகப் பகிரப்படும் விஷயங்களைப் புரிந்துகொள்ளுதல்: அவர்களுடனான உறவை மேம்படுத்த பொதுவாக பகிரப்படும் விஷயங்களைக் கண்டுபிடித்து அதில் நாம் அக்கறை காட்டினால் அவர்களும் நம்மைப் புரிந்துகொண்டு நமக்குப் பிடித்த விஷயங்களை நமக்காக செய்யத் தயங்க மாட்டார்கள். உதாரணமாக, தியேட்டரில் போய் படம் பார்ப்பது அனைவருக்கும் பிடிக்குமென்றால் எல்லோரும் சேர்ந்துபோய் பார்த்துவிட்டு வந்தால் உறவு வலுப்படும்.
10. உங்கள் மண வாழ்க்கைக்கு முதல் மரியாதை செலுத்துங்கள்: அனைத்துக்கும் மேலாக, பல குடும்பப் பிரச்னைகளுக்கும் இடையே, கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மதிக்கவும், ஒருவருக்கொருவர் உதவியாயிருக்கவும் கற்றுக்கொண்டால் இன்-லாஸ் மூலம் வரும் சவால்கள் எல்லாம் பனித்துளி போல் காணாமல் போய்விடும்.