கி.பி. 200க்கு பின் வந்த பிரபலமான காய்கறி கேரட், பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா மகாராணிக்கு மிகவும் பிடித்த உணவு.100 கிராம் கேரட்டில் 85 சதவிகிதம் ஈரப்பதம், 0.9 சதவிகிதம் புரோட்டின், 0.25 சதவிகிதம் கொழுப்பு, 1.1 சதவிகிதம் தாதுப்பொருட்கள், 1.2 சதவிகிதம் நார்ச்சத்து, 10.5 சதவிகிதம் கார்போஹைட்ரேட், .80 மி.கி. கால்சியம், 53 மி.கி. பாஸ்பரஸ், 22 மி.கி. இரும்புச்சத்து, 3 மி.கி. வைட்டமின் சி, 890 மைக்ரோ கிராம் கரோட்டீன், 0.04 மைக்ரோ கிராம் தியாமைன் மற்றும் கலோரி 48 சதவிகிதம் உள்ளது.
கேரட் குளிர் காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியது. தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியமானது. புரதச்சத்து, கொழுப்பு, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாஷியம், ஃபோலிக் அமிலம், கோலின், கால்சியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, வைட்டமின் பி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச் சத்தும் இதில் உண்டு. கண், சருமம் மற்றும் எலும்பு உறுதிபடவும், இரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயோதிகர்கள் எல்லோரும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு இதை சாப்பிட வேண்டும். துருவியும் சாப்பிடலாம். வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்து அப்படியே சாப்பிடலாம்.
வேகவைத்த மசித்த கேரட்டை சிறிதளவு மஞ்சள் பூசணியுடன் கொஞ்சம் வெல்லம் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க அது சிறந்த இணை உணவாகும். சிறு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் பொடிப் பொடியாய்த் துருவப்பட்ட கேரட்டை ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிடக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் சேராது.
கேரட்டை பச்சையாகக் கடித்து உண்பதால் பல் ஈறு உறுதியாகிறது. அதோடு, ஒருவருக்குத் தேவையான கால்சியம் சத்தை எளிதில் பெற முடியும். அது மட்டுமில்லாமல், குறைந்த எடையுடைய குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கவும் கேரட் உதவுகிறது. கேரட் உங்கள் வாய் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். நீங்கள் கேரட்டை பச்சையாக சாப்பிடும்போது அது, உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். இந்த அதிகரித்த உமிழ்நீர் உங்கள் வாயிலிருந்து உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் வெளியே தள்ள உதவுகிறது.
குளிர்காலத்தில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. நோய் தொற்றிற்குக் காரணமாக இருக்கும் வெள்ளை அணுக்கள் குறைபாட்டை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், கேரட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
கேரட் தினமும் பயன்படுத்துபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் வராது. இரைப்பை அல்சர், குடல் நோய்கள், குடல் வால் அழற்சி,பெப்டிக் அல்சர் போன்ற குறைபாடுகளை அறவே நீக்க வல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் கேரட் சாறு தவறாமல் எடுத்துக்கொள்ள நல்ல பலன் தெரியும்.
கேரட்டில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் இதனை தினமும் சாப்பிடும்போது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்படாமல் இருக்கும். மஞ்சள் காமாலை நோயாளிகள் விரைவில் குணமாக, இரத்தப் புற்றுநோயின் தீவிரம் குறைய, கண்களின் விழி லென்ஸ் பவர் கூட, தாய்ப்பால் அதிகம் சுரக்க அவசியம் கேரட் சாறு பருக வேண்டும். அதோடு, இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை கேரட் சாறு கட்டுப்படுத்துகிறது. இதனால் முடக்கு வாதம் குணமாகும்.
கண் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள் தினசரி கேரட்டை எடுத்துக் கொள்ளலாம். கேரட்டில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாலைக்கண் பிரச்னை உள்ளவர்கள், வயது முதிர்வு காரணமாக பார்வைக் குறைபாடு ஏற்படுபவர்கள் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.
உங்களுக்கு அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தல் வேண்டுமென்றால் நீங்கள் கட்டாயம் கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சூரிய ஒளியினால் ஏற்படும் கருமை நிறத்தை போக்குவதற்கும் கேரட் உதவுகிறது. சருமத்திற்கு பளபளப்பு தன்மையைப் பெறுவதற்கு கேரட்டை சாப்பிடுவது நல்லது. தினசரி உங்கள் உணவுகளில் கேரட்டை சேர்த்துக்கொள்வதன் மூலம் முகப்பரு, அரிப்பு, சரும அழற்சி, வறட்சியான சருமம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.