உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கும் பொருள்களில் ஒன்று குங்குமப் பூ. அத்தனை விலை உயர்ந்த பொருளை வாங்கும்போது அது கலப்படம் ஏதுமின்றி சுத்தமானதாக உள்ளதா என்று உறுதிப்படுத்திக்கொண்டு வாங்குவது அவசியம். அதற்கு நாம் செய்துபார்க்க வேண்டிய 10 வகை டெஸ்ட் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. வாட்டர் டெஸ்ட்: நூலிழை போன்ற குங்குமப்பூ (Saffron) இழைகளை தண்ணீரில் சிறிது போடவும். அப்போது மெதுவாக அப்பூவிலிருந்து தங்கம் போன்ற மஞ்சள் நிறம் வெளிவரும். அதுதான் கலப்படமற்ற பூ. அதுவே போலியாயிருந்தால் அதிலிருந்து உடனடியாக நிறம் வெளியேறி வரும் அல்லது தண்ணீர் சிவப்பு நிறமாக மாறிவிடும்.
2. விரல்களில் தேய்த்துப் பார்க்கும் டெஸ்ட்: சஃப்ரான் இழைகளை இரண்டு விரல்களுக்கு இடையில் வைத்து தேய்த்துப் பாருங்கள். அவை சுலபமாக உடைந்து விடாமல், அதிலிருந்து வெளியான ஒரு மாதிரியான மஞ்சள் நிற கறை விரல்களில் படியும். இதுவே கலப்படமில்லாத சஃப்ரான் என்பதற்கான அறிகுறி. மாறாக, அந்த இழைகள் உடைந்தாலோ அல்லது சிவப்பு நிறக் கறை விரல்களில் படிந்தாலோ அது போலியானது என்பது உறுதி.
3. வாசனை டெஸ்ட்: குங்குமப்பூவை முகர்ந்து பார்த்தால் அதிலிருந்து ஓர் எர்த்தி (earthy)யான வாசனையை உணர முடியும். போலியான பூவாக இருந்தால் ஒரு வாசனையும் வராது அல்லது செயற்கையான ஏதாவதொரு வாசம் வரும்.
4. சுவைத்துப் பார்க்கும் டெஸ்ட்: நிஜமான குங்குமப் பூவை சுவைத்துப் பார்த்தால் அது லேசான கசப்பு சுவை தரும். அதிலிருந்து இனிப்பு சுவையை உணர்ந்தோமானால் அது கலப்படமானது எனத் தெரிந்து கொள்ளலாம்.
5. நீரில் மிதக்கும் டெஸ்ட்: சிறிது சஃப்ரான் இழைகளை தண்ணீரில் போட்டால் முதலில் சிறிது நேரம் அது நீரின் மீது மிதந்து, பின் மெதுவாக நீருக்குள் முழுக ஆரம்பிக்கும். அதுவே நிஜமான சஃப்ரான். கலப்படம் செய்த பூவை நீரில் போட்டால், அதனுடன் சேர்ந்த கலப்படப் பொருள்களின் கூடுதல் எடை காரணமாக உடனடியாக அது நீருக்குள் மூழ்கிவிடும்.
6. கரையும் தன்மைக்கான டெஸ்ட்: உண்மையான குங்குமப் பூவை மணிக்கணக்கில் தண்ணீரில் போட்டு வைத்திருந்தாலும் அதன் நூலிழை போன்ற அமைப்பு அப்படியே நீருக்குள் நிலைத்திருக்கும். போலியான பூ அப்படியே நீரில் கரைந்து போய்விடும் அல்லது துண்டு துண்டாக உடைந்து பிரிந்து விடும்.
7. வினிகர் டெஸ்ட்: சஃப்ரான் இழைகளை வினிகரில் சோதனைக்காக சேர்க்கும்போது அதிலிருந்து குமிழ்கள் தோன்றினால் அதில் சாக் (chalk) பவுடர் போன்ற கலப்படப் பொருட்கள் சேர்ந்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
8. இழைகளை சோதித்தல்: ஒரு சஃப்ரான் இழையை எடுத்து மிக அருகில் வைத்துப் பார்த்தோமானால் அந்த இழை சமமான அமைப்பு கொண்டிராமல் இடையிடையே சிறு சிறு சுருள்களுடனும் முடிவில் மெல்லியதாகவும் காணப்படும். போலியான சஃப்ரான் ஒரே மாதிரியான அமைப்புடன் செயற்கை சாயம் பூசப்பட்டதுபோல் தோற்றமளிக்கும்.
9. மில்க் டெஸ்ட்: சிறிதளவு குங்குமப் பூவை எடுத்து வெதுவெதுப்பான பாலில் சேர்க்கும்போது அது நிஜமான குங்குமப் பூவாக இருப்பின் அதன் நிறம் கோல்டன் எல்லோவாக மாறி, மிச்சமின்றி பாலில் கரைந்து விடும். அது போலியானது என்றால் அதிலிருந்த செயற்கையான சாயம் திட்டுத் திட்டாக அடியில் படிந்திருப்பது கண்ணுக்குப் புலப்படும்.
10. பேப்பர் டவல் டெஸ்ட்: சிறிதளவு குங்குமப் பூவின் இழைகளை எடுத்து ஒரு வெள்ளை நிற பேப்பர் டவலில் வைத்து தேய்த்துப் பாருங்க. கலப்படமற்ற பூவானால் அதிலிருந்து மஞ்சள் நிறம் வெளியேறி கறை போல் டவலில் படியும். அதுவே கலப்படமான பூவாக இருந்தால் பேப்பர் டவலில் சிவப்பு நிற கறை அல்லது வேறு ஏதாவதொரு சாயத்தின் பிரதிபலிப்பு டவலில் தோன்றும்.