இயற்கை மருத்துவத்தின் மீது தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு அதிகம் பெருகி வரும் நிலையில், தினமும் சமைக்கும் உணவான சாதம் வடித்து வரும் கஞ்சியில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் அதிகளவில் இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.
நம் உடலை சமநிலையில் இயங்க வைக்கும் வாதம், பித்தம், கபம் ஆகியவை அதிகமானாலும் பாதிப்பு, குறைந்தாலும் பாதிப்பு என்பதை அறிவோம். இந்த மூன்றையும் மருந்து இல்லாமலே சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது அரிசிக்கஞ்சி.
இரு முறை வடித்த கஞ்சி: 35 கிராம் அரிசியை 700 மி.லி. தண்ணீரில் 20 நிமிடங்கள் வேகவைத்து 20 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரை வடித்தெடுத்துக்கொள்ளுங்கள். சாதம் ஓரளவிற்குத்தான் வெந்திருக்கும். இப்போது மீண்டும் 700 மி.லி. அளவில் இருக்கும்படி அந்த வடிகஞ்சியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் சாதத்தில் ஊற்றி வேக வையுங்கள். பின்னர் மீண்டும் 20 நிமிடங்கள் கழித்து அந்த சாதத்தை வடித்தெடுத்தால் அதுவே ‘இருமுறை வடித்த கஞ்சி’ ஆகும்.
இதோடு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, வாத, பித்த, கபம் ஆகியவை உடலில் சமநிலைப் பெறும். உடலுக்கு ஊட்டமும் தரும். குறிப்பாக, அம்மை நோய் பாதிப்பு மற்றும் சிறுநீர் எரிச்சல் மற்றும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கஞ்சி நல்ல மருந்தாக இருக்கும் என்கிறது மருத்துவக் குறிப்பு.
மேலும், மூலம் அல்லது மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் அரிசி கஞ்சியை குடித்து நிவாரணம் பெறலாம். சாதம் வடித்த கஞ்சி செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.
காய்ச்சல் போன்ற பாதிப்புக்கு அரிசி கஞ்சி குடித்தால் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்பதோடு, ஊட்டச்சத்து குறைபாடும் ஈடு செய்யப்படுகிறது. இதன் காரணமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் இருக்கும்.
அந்தக் காலத்தில் சாதம் வடித்த கஞ்சியை சீயக்காயில் கலந்து முடிக்குப் பயன்படுத்துவார்கள். இந்தக் கஞ்சியில் பலன்கள் தரும் பெப்டைட்ஸ் (Peptides) எனும் புரதம் அதிக அளவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே, இதை வெளிப்பூச்சாகப் பயன்படுத்தும்போது சருமத்தின் இளமைக்கும் எலாஸ்டிக் தன்மைக்கும் காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து சருமப் பொலிவு கிடைக்கும்.
குறிப்பாக, மாதவிடாய் வலிகளை அனுபவிக்கும் பெண்களுக்கு அரிசி கஞ்சி இயற்கையான தீர்வாக இருக்கும் என்று தேசிய சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. வெதுவெதுப்பான அரிசி கஞ்சி, தசைச் சுருக்கங்களை சீராக்கவும், மாதவிடாயின்போது வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
உடல் நல பாதிப்பால் ஏற்படும் சோர்வு அல்லது உடல் பயிற்சிக்கு பிறகு ஏற்படும் நீர்சத்து இழப்பை ஈடுசெய்யவும் உதவும். முக்கியமாக, விடாத வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று உபாதைகள் ஏற்பட்டால், அரிசி கஞ்சியை குடிப்பது நல்ல பலன் கிடைக்கும்.
வடிகஞ்சியை அப்படியே விட்டால் அது உறைந்ததுபோல் கெட்டியாகி மேலே ஆடை மிதக்க ஆரம்பிக்கும். இதனை ‘உறை கஞ்சி’ என்பார்கள். குடிக்கும்போது அது வாதத்தையும் கபத்தையும் உடலில் அதிகரிப்பதால் அதைத் தவிர்க்க வேண்டும்.
அழகு முதல் ஆரோக்கியம் வரை பல வகைகளில் உதவும் அரிசிக் கஞ்சியை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியப் பலன்களைப் பெறுவோம்.