பொங்கல் வைக்கும் நேரத்தில் தேடப்படும் பொருட்களில் ஒன்று மண்டை வெல்லம். இதனை பொதுவாக மக்கள் நல்ல மஞ்சள் நிறத்தில் இருந்தால்தான் நல்ல மண்டை வெல்லம் என நினைத்து வாங்குகிறார்கள். ஆனால், அது நல்ல வெல்லம் அல்ல. அது சல்பர் எனும் இரசாயனம் கலந்த வெல்லம். மஞ்சள் நிறம் வருவதற்கு சேர்க்கப்படும் பொருள் அது. அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல் நலக்குறைவு ஏற்படும் என்கிறார்கள்.
நல்ல பழுப்பு நிறத்தில் இருக்கும் வெல்லம்தான் நல்ல மண்டை வெல்லம். அந்த வெல்லத்தை சுத்தமான நீர் உள்ள கிண்ணத்தில் போட்டால், கொஞ்ச நேரத்தில் நீரின் அடியில் சுண்ணாம்பு படிவம் ஏற்படும். அது நல்ல வெல்லம். இல்லையென்றால் அது கலப்பட வெல்லம். மண்டை வெல்லம் சாப்பிடும்போது உப்பு கரித்தால் அது பழைய நாள்பட்ட வெல்லம் என்று தெரிந்து கொள்ளலாம். மண்டை வெல்லம் சாப்பிட உடைக்கும்போது அது சில்லு சில்லாக உடைந்தால் அது கலப்பட மற்றும் வேறு இனிப்பு கலந்த வெல்லம் என தெரிந்து கொள்ளலாம். மண்டை வெல்லம் சாப்பிடும்போது கசந்தால் அது கலர் வருவதற்காக அதிக நேரம் கொதிக்க வைக்கப்பட்ட தீய்ந்துபோன வெல்லம் என்று தெரிந்து கொள்ளலாம்.
வெல்லம் இனிப்பு சுவை கொண்ட உணவு மட்டுமல்ல, அது சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டதும் கூட. கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்ற உடல் ஆரோக்கியம் காக்கும் அனைத்து சத்துக்களையும் கொண்டது. வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் ஆற்றல் கொண்டது. அதனால்தான் பலர் உணவுக்குப்பின் ஒரு துண்டு வெல்லம் சாப்பிடுகிறார்கள். செரிமான திரவங்களைத் தூண்டி விட்டு ஜீரணத்தை சரிசெய்யும் ஆற்றல் வெல்லத்திற்கு உண்டு. வெல்லம் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் உடையது. அத்துடன் அசிடிட்டி எனும் அமில சுரப்பு பிரச்னைகளையும் சரி செய்யும். உடலில் சோடியம் சேரும் அளவையும் சமன் செய்யும்.
மேலும், வெல்லம் ஒரு குளிர் கால சூப்பர் உணவு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், குளிர்காலத்தில் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு வெல்லம் கலந்து சாப்பிட்டால் அது உடல் கதகதப்பாக இருக்க உதவும். அதோடு, உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றி உடல் உள்ளுறுப்புகளின் நோய் எதிர்பாற்றல் அதிகரிக்க உதவும்.
வெல்லம் எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். அதோடு. குளிர் காலத்தில் எலும்பு மூட்டுகளில் ஏற்படும் விறைப்புத் தன்மை காரணமாக ஏற்படும் மூட்டு வலிக்கு நிவாரணம் தரும். குளிர்காலத்தில் சூடான பாலுடன் இஞ்சி மற்றும் வெல்லம் கலந்து சாப்பிட்டால் மூட்டு வீக்கம் குறைந்து மூட்டு வலி வராமல் தடுக்கும். காரணம் வெல்லத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள். இவை இரண்டும் எலும்புகளை வலுப்படுத்தும்.
வெல்லம் குளிர் காலத்தில் ஓர் ஆன்டி அலர்ஜிக்காக செயல்பட்டு சுவாசக் கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது. அதோடு, தொண்டை கரகரப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் உதவுகிறது. குளிர் காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் உடல் சோர்வு அதிகரித்து அதனால் எரிச்சலும் வலியும் அதிகரிக்கும் அந்த நேரத்தில் கொஞ்சம் வெல்லம் சாப்பிட வலியும், எரிச்சலும் குறையும். இரவில் படுக்கும் முன் வெல்லம் சாப்பிடுவது தூக்கமின்மை பிரச்னையை தவிர்க்க உதவுகிறது.
இரவில் பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது நல்ல தூக்கம் வர உதவுகிறது. தூங்கும் முன் வெல்லம் சாப்பிடுவது சரும மாசுக்களை அகற்றி சரும ஆரோக்கியம் காக்கிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கவும் உதவுகிறது. காரணம் வெல்லத்தில் உள்ள வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் தாமிர சத்தும்தான்.
மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற பொடித்த வெல்லத்தை நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். பொடித்த வெல்லம் மற்றும் தனியா இந்தக் கலவையானது பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகின்றன.
சளி, இருமல் போன்ற பருவ கால பிரச்னைகளைத் தவிர்க்க பொடித்த வெல்லத்துடன் எள் கலந்து சாப்பிடலாம். வாய் துர்நாற்றம் மற்றும் பற்களில் படிந்துள்ள கரையை நீக்க பொடித்த வெல்லத்துடன் சோம்பு கலந்து சாப்பிடலாம். வெல்லம் மற்றும் வெந்தயம் கலவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இளநரையை தடுக்கவும், நல்ல ஆரோக்கியமான பளபளப்பான கூந்தலைப் பெறவும் உதவும். பொடித்த வெல்லம் மற்றும் பாதாம் பிசின் இவை எலும்புகளின் அடர்த்தி மற்றும் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவுகின்றன.
பொடித்த வெல்லத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதனுடன் பசியையும் கட்டுப்படுத்தலாம். வெல்லத்தை மஞ்சளுடன் கலந்து சாப்பிடும்பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வீக்கத்தை குறைக்கவும், காய்ச்சலுக்குப் பிறகு விரைவில் மீண்டு வரவும் வெல்லத்துடன் சுக்கு பொடியை கலந்து சாப்பிடலாம்.