
குழந்தைகளுக்கு பெரும்பாலான விபத்துக்கள், சாலைகளைத் தவிர பெரும்பாலும் வீடுகளிலேயே ஏற்படுகின்றன. குழந்தைகள் பிறந்தது முதல் பள்ளிக்குச் செல்லும் வரை அதிக நேரம் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்பதால் வீட்டை நாம் அவர்களுக்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், குழந்தைகள் இருக்கும் வீட்டை பாதுகாப்பாகவும் நன்றாகவும் வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. கைக்குழந்தைகள் இருக்கும் வீட்டைச் சுற்றி புதர் மற்றும் செடிகள் அதிகமாக இருந்தால் அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் மற்றும் பூச்சித் தொல்லையில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கலாம்.
2. வீட்டில் ஜன்னல் மற்றும் கதவுகளில் கொசு வலை அமைத்து, கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, கழிவறை போன்ற தண்ணீர் வாளிகள் இருக்கும் இடங்களில் குழந்தைகளைத் தனியாக விடக் கூடாது.
3. தண்ணீர் வாளிகளை குழந்தைகள் இருக்கும் வீட்டில் காலியாக வைப்பதோடு, அவர்களுக்கு எட்டாத உயரத்தில் அவற்றை வைக்க வேண்டும்.
4. தற்போதைய சூழ்நிலையில் சிறு பொருட்கள் தொண்டையை அடைத்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகளுக்கு உயிரிழப்பை அதிகமாக ஏற்படுவதால் சிறிய பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைப்பதே சிறந்தது.
5. குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் செல்போனுக்கு சார்ஜர் செய்வதோடு அவர்கள் தொட முடியாத உயரத்தில் ஸ்விட்ச் பாக்ஸை வைக்க வேண்டும். ஏனெனில், மின்சாரம் தாக்கி குழந்தைகள் உயிரிழந்து வருவது தற்போது அதிகரித்துள்ளது.
6. குழந்தைகள் இருக்கும் வீட்டில் மின்சார ஒயர்கள் தொங்கிக்கொண்டு இருக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
7. சமையலறை கதவை மூடி வைப்பது அல்லது அறையின் தொடக்க இடத்தில் தடுப்புகள் வைப்பதோடு, குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
8. கத்தி, அரிவாள்மனை போன்ற கூர்மையான ஆயுதங்களை சமையலறையில் கீழே வைக்காமல் இருப்பதோடு, பால், குழம்பு, வெந்நீர் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.
9. வீட்டில் தடுப்பு சுவர் உயரம் குறைவாக இருந்தால் அதிகரிக்க இரும்பு கேட் வைக்க ஏற்பாடு செய்வது நல்லது.
10. குழந்தைகள் படிக்கட்டு பக்கம் போகாமல் இருக்க ஜன்னல் கதவுகளை எப்போதுமே மூடி வைக்க வேண்டும்.
குழந்தைகள் புத்தி தெரிந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களை கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதே மகிழ்ச்சிக்கான வழியாகும்.