
மாரியின்றி நாடு இல்லை! மழைதான் உயிர்களை வாழ வைப்பது; உணவுப் பொருட்களைத் தருவது; நாகரிக வாழ்வுக்கு அடித்தளமாக அமைவது. ’நீரின்றி அமையாது உலகு!’ என்பது வேத வாக்கு! வடகிழக்குப் பருவ மழையால் அதிக மழை பெறும் நாம், விரைவிலேயே அதை எதிர்கொள்ள இருக்கிறோம். இதற்கு சரியான முறையில் ஆயத்தமாகி விட்டோமென்றால், மழையை ரசிக்கலாம்; மழைக் காலத்தை அமைதியுடன் கழிக்கலாம்.
முதலில் வீட்டுப் பராமரிப்பு. கூரை வீட்டுவாசிகள் ஒழுகாத அளவுக்குக் கூரையை வேய்ந்து விட வேண்டும். மண் சுவர் வீடுகள் என்றால், அவை கரையாத அளவுக்குப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் ஷீட்டுகள் அவசரத்துக்குக் கை கொடுப்பவை. இன்வெர்டர்கள் வைத்திருப்பவர்கள், அவை ஒழுங்காக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை இருந்தாலும்கூட, பல மணி நேரத்திற்கு எரியக்கூடிய பெரிய கேண்டில்களையும், அவற்றை ஏற்றுவதற்கு வேண்டிய தீப்பெட்டியையும், வீட்டின் பிரதான இடத்தில், எளிதாக எடுக்க வசதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பள்ளமான பகுதிகளில் வீடுள்ளவர்கள், நீர் வீட்டின் உள்ளே புகாத அளவுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். அதிக மழை பெய்தால், உடனடியாக வீட்டை காலி செய்யும் உபாயங்களையும், எங்கு சென்று தங்குவது என்பதையும் தீர்மானித்து, அந்நேரச் செலவுக்கான பணத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.
டூ வீலர்கள் வைத்திருப்பவர்கள், நன்கு சர்வீஸ் செய்து குட் கண்டிஷனில் அதை வைத்துக்கொள்வது நல்லது. வண்டியில் செல்லும்போது போட்டுக்கொள்ள நல்ல ரெயின் கோட்டும் அவசியம். அடிக்கடி செல்லும் சாலைகளிலுள்ள மேடு, பள்ளங்களைக் கவனித்து வைத்துக்கொள்வது நல்லது. மழை நீர் காரணமாக சாலைகள் மூழ்க நேர்ந்தால், அப்பொழுது இந்த கவனிப்பு கை கொடுக்கும்.
வீட்டில் உள்ள அனைவருக்கும் மழை நேரத்தில் வெளியில் செல்ல, ஆளுக்கொரு குடை அவசியம். பழைய குடைகளாயின், அதை சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். நம்மில் பலர், மழை பெய்கின்றபொழுதுதான் குடையையே தேடி எடுப்போம். அது கம்பி ஒடிந்து, துணி கிழிந்து, பரிதாபமாகக் கிடக்கும். குடையை விட ரெயின் கோட்டுகள் நலம் பயப்பவை. மழையுடன் காற்றும் அதிகமாக இருக்கையில், குடைகள் தாக்குப் பிடிக்காது. கோட்டுகள் பயனளிக்கும்.
வீட்டில் வயதான நோயாளிகள் இருந்தால், அவர்களுக்கு வேண்டிய மருந்து, மாத்திரைகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வது புத்திசாலித்தனமாக அமையும். அவசரத்திற்கு உதவும் விதமாக, டாக்டரின் போன் நம்பரை, வீட்டின் முக்கிய இடத்தில் குறித்து வைக்க வேண்டும். அனைவரும் எளிதில் பார்க்குமாறு அது இருக்க வேண்டும். கைக்குழந்தைகள் வைத்திருப்பவர்கள் சளி மற்றும் ஜுரத்திற்கான பொது மருந்துகளை, மருத்துவரின் ஆலோசனை பெற்று,வாங்கி வைத்துக் கொள்வது நலம்.
மழை நேரங்களில் செல் போன்களை சிறு பிளாஸ்டிக் கவர்களில், நீர் புகாமல் பாதுகாப்பது உத்தமம். எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் நீருக்கும் ஆகாது. போனில் பயன்பாட்டில் இல்லாத எண்களையும், குவிந்து கிடக்கும் மெசேஜ்களையும் டெலிட் செய்து விடுவது நல்லது. ஹூக்களின் அளவுக்கேற்றவாறு, பழைய துணிகளை நன்கு சுருட்டி, அவற்றுக்குள் திணித்து வைத்து விட்டால், பாம்பு, பூரான் போன்றவை அவற்றுக்குள் அடைக்கலம் தேடுவதைத் தடுத்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெள்ள நேரங்களில் நிவாரண முகாம்களுக்கு அழைத்தால், வீட்டைப் பூட்டி விட்டு அங்கு சென்று தங்கி விடுதலே முறையாகும். சிலர் பிரஸ்டீஜ் கருதி அதனைத் தவிர்ப்பதுண்டு. அப்பொழுது பிரஸ்டீஜ் முக்கியமல்ல; உயிரே முக்கியம்! இவையெல்லாம் சாதாரணமானவர்களாகிய நாம் செய்ய வேண்டுபவை!
முக்கியமாக, சாலைகளில் நீர் தேங்காமலும்; மழை நேரங்களில் பவர்கட் இல்லாமலும்; மழையைக் காரணம் காட்டிப் பொருட்களின் விலையை உயர்த்தாமலும்; மழை நேரத்திலும் ரேஷன் கடைகளில் அனைத்துப் பொருட்களை வழங்கிடவும்; ஆம்புலன்சுகள் சீராக இயங்கிடவும்; தேவையெனில் அதிக எண்ணிக்கையில் இயக்கவும்; பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை முன்னரே கண்டறிந்து அங்கு அனைத்துத் துறையினரும் ஆயத்தமாக இருத்தல் போன்ற மக்கள் நலப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் கவனித்துக் கொள்ள அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்புறமென்ன? வாங்க! மழையை மகிழ்வாக அனுபவிப்போம்!