
சில குழந்தைகள் எப்பொழுதும் விளையாடுவது, நடனம் ஆடுவது, கைகளை வித்தியாசமாகத் தட்டுவது போன்றவற்றை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்களை பெரியவர்கள் எப்படிக் கையாள்வது என்பதை இந்தப் பகுதியில் காண்போம்.
உடல் முழுவதும் அல்லது உடலின் சில பாகங்களை பிரயோகிக்கும் ஆற்றல் இந்த நுண்ணறிவுக்கு ஏற்றதாக இருக்கும். அமெரிக்காவின் கென்ரக்கியிலுள்ள லூயிஸ் வில்லில் பிறந்த இவரது இயற்பெயர் கசியஸ் கிளே. பின்னர் முகமது அலியாகப் பெயர் மாற்றம் செய்தார். பெற்றோர் இவருக்கு 12வது வயதில் ஒரு வண்டி வாங்கிக் கொடுத்தனர். அது களவு போய்விட்டது. போலீசில் புகார் செய்யும்போது, ‘கள்வனைக் கண்டால் குத்தி வீழ்த்துவேன்’ என அதிவேகமாக கை அசைவால் காட்டினார். இதை கவனித்த வெள்ளை இன ஜோ மாட்டின் போலீஸ் தனது குத்துச்சண்டை (Boxing) பயிற்சி வகுப்பில் இவரை இணைத்து விட்டார். காலப்போக்கில் இவர் ஒலிம்பிக் சாம்பியன், உலகச் சாம்பியன் ஆனார். அத்துடன் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரனாக அமெரிக்கா இவரை அறிவித்தது.
உடல் அசைவுகள் மூளையின் இடம் மற்றும் வலது பக்கத்தை இயக்குகிறது. குழந்தைகளின் உடல் அசைவுகள் வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும். விளம்பரதாரர்கள், நடிகர்கள், நடனக் கலைஞர்கள் உடலின் முழு அசைவினால் தங்களது கருத்தை, எண்ணத்தை, கருப்பொருளை, உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். நடிகர் சிவாஜிகணேசன் ஒரு பாடலில் கைத்தட்டலில் அசத்தியிருப்பார். அவர் இதற்கு ஒரு சிறந்த உதாரணமானவர்.
நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், நடனக் கலைஞர்கள் தமது ஆற்றலை உடலினால் வெளிப்படுத்துகிறார்கள். சிற்பி, கைவினைஞர், தைத்தல், நெய்தல், மரவேலை, மெக்கானிக், சர்ஜன் போன்றோர்கள் தங்கள் கைகளினால் அறிவை பிரயோகிக்கிறார்கள். இந்த புத்திக் கூர்மை Coordination, balance, Dexterity, strength, Flexibility, speed, physical skills போன்றவற்றை மையப்படுத்துகிறது. இந்த ஆற்றலை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட்டபடியே இருப்பார்கள். அவர்களுக்கு விளையாடும்போதும், நடக்கும்போதும், உடற்பயிற்சி செய்யும்போதும், உடல் ஆரோக்கியத்துக்கு தரையில் ஓடும்போதும் புதிய சிந்தனை, ஆக்கம் தோன்றும். இவர்கள் வீட்டுக்கு வெளியேதான் பெரும்பான்மையான நேரத்தைக் கழிப்பார்கள்.
இவர்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவார்கள். சிறு பிள்ளையாக இருக்கும்போது இவர்களின் வயதுக்கு மேலாக உடல் வலிமை வெளிப்படும். இவர்கள் ஒரு இடத்தில் சும்மா இருக்க மாட்டார்கள். அவர்கள் கையை பிசைந்து கொண்டு, நெளிந்து கொண்டு, காலால் தட்டிக் கொண்டு, ஆடிக்கொண்டு அல்லது அசைந்து கொண்டே இருப்பார்கள். இவர்களை இனம் கண்டு விளையாட்டுக்களில் சேர்த்து விட்டால் நன்றாக ஜொலிப்பார்கள்.
மற்றவர்கள் போல குரலை மாற்றிக் கதைப்பது, பாவனை செய்வது போன்ற திறன் உள்ளவர்கள். குழந்தைகள் பெரும்பாலும், பொருட்களை எடுத்துப் பிரிப்பது மீண்டும் சேர்த்து வைப்பது, ஓடல், துள்ளல், குதித்தல், நாற்காலிக்கு மேல் பாய்தல், குஸ்தி போடல் போன்றவற்றில் விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். சில குழந்தைகள் யாராவது சிறுகதைகள் கூறினால் அதற்கு இவர்கள் நடித்துக் காட்டுவார்கள். வீணை என்றால் கையால் வாசித்துக் காட்டுவார்கள். இத்திறன் உள்ள சிறு குழந்தைகள் சமிக்ஞையையும், உடல் அசைவையும், நோக்கத்தையும் சுலபமாகப் புரிந்து கொண்டு செவ்வனே செய்வார்கள்.
ஆதலால் பெற்றோர்களும் உடன் இருப்பவர்களும் செய்ய வேண்டியது, அவர்களின் விருப்பமான தொழில் வழிக்கு அவர்களை ஊக்கப்படுத்துவதுதான். இதனால் அவர்கள் விரும்பும் பாடத்தை சுலபமாக படிப்பதோடு, செய்யும் செயலை எப்பொழுதுமே விருப்பமுடனும் மன நிறைவுடனும், தனது முழுத் திறமையையும் காட்டி அசத்துவார்கள் என்பது உண்மை.