

எந்தப் பொருள் விலையைக் கேட்டாலும் தலை சுற்றி அதிர்ச்சியாகும் அளவுக்கு விலைவாசி ஏறி இருக்கும் இந்தக் காலத்தில் பணத்தை தேவையில்லாமல் பாழாக்குவதைத் தவிர்த்து, அனாவசிய செலவுகளை குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிக்க மிகவும் எளிதாக யோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. நமக்குத் தேவையான அளவு சமைப்பதுதான் வீட்டில் தேவையில்லாமல் உணவுப் பொருட்கள் பாழாவதை தடுக்கும்.
2. மொபைல் போனில் வீண் அரட்டை அடிக்காமல் ரத்தினச் சுருக்கமாக பேசி முடிப்பதால் பணம் தேவையின்றி விரயமாவதைத் தவிர்க்கலாம்.
3. சமையல் செய்யும்போது குக்கரை அடுப்பில் வைத்தவுடனேயே வெயிட்டைப் போட்டு விடுங்கள். ஸ்டீம் வரும் வரை காத்திருக்க வேண்டாம். இதனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே சாதம் வெந்து விசில் வந்து விடும். கேஸ் செலவும் மிச்சமாகும்.
4. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. வாங்கிய நகைகளை அல்லது பாரம்பரிய நகைகளை அடிக்கடி அழித்து மாற்றாதீர்கள். தரமும் குறையும். பணத்தின் மதிப்பும் குறையும்.
5. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றைக் கொடுத்து பொருட்கள் வாங்காமல் பணம் கொடுத்தே வாங்கலாம். இதன் மூலம் ஒரு மாதத்தில் எவ்வளவு பணம் செலவாகிறது என்ற சரியான கணக்கு இருக்கும்.
6. பெரிய சூப்பர் மார்க்கெட், மால் போன்ற இடங்களை விட உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடைகளில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குங்கள். பெரிய பெரிய கடைகளில், பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம், கடை டெக்கரேஷன், ஏசி சார்ஜ் போன்றவற்றுக்கு ஆகும் செலவை வாடிக்கையாளர்களின் தலையில்தான் கட்டுவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
7. கிரைண்டர் போடும்போது நன்கு ஊற வைத்த பின் மாவு அரைத்தால் கிரைண்டர் அரைக்கும் நேரம் குறைவாகும். இதனால் மின்சாரச் செலவும் குறையும்.
8. சமையலறையில் உள்ள குழாயை அதிகமாக பயன்படுத்தாமல் ஒரு சிறிய பிளாஸ்டிக் வாளியில் தண்ணீரைப் பிடித்து வைத்துக்கொண்டு பயன்படுத்தினால் குழாயின் ஆயுள் நீடிக்கும். தண்ணீரும் தேவையில்லாமல் வீணாகாது. வாட்டர் பில்லையும் கணிசமாக மிச்சப்படுத்தலாம்.
9. வேலைக்குப் போகாத குடும்பப் பெண்கள், வீட்டில் தோட்டம் போட வசதி இருந்தால் தங்கள் ஓய்வு நேரத்தை தோட்டப் பராமரிப்பில் செலவழிக்கலாம். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள், பூக்கள் முதலியவற்றை தோட்டத்திலிருந்தே பெறலாம்.
10. வீட்டில் அனாவசியமாக பயன்பாட்டில் இருக்கும் மின்விசிறி, மின்விளக்கு போன்றவற்றை உடனடியாக அணைக்கும் செயலை, வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடைப்பிடித்தால் மின்சாரச் செலவு கணிசமான அளவில் குறையும்.
11. அதுபோல், காய்கறிகள், மளிகைச் சாமான்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்கி, பணத்தை மிச்சப்படுத்துகிறேன் என்று சொல்லி தேவைக்கு அதிகமாக வாங்காதீர்கள். பிறகு பூச்சி, புழு என்று குப்பையில் கொட்ட வேண்டி வரும். வீட்டுக்குத் தேவையான அளவுக்கு அந்தப் பொருட்களை வாங்கி ஃப்ரெஷ்ஷாக உபயோகிப்பதுதான் நல்லது.
12. அடிக்கடி தியேட்டரில் சென்று படம் பார்ப்பதைத் தவிர்த்து, ஒன்றிரண்டு மாதங்கள் காத்திருந்து ஒடிடி பிளாட்பார்மில் குடும்பத்துடன் படம் பார்த்தால் டிக்கெட், உங்கள் காருக்கு பெட்ரோல், ஹோட்டல் சாப்பாடு போன்றவற்றுக்கு ஆகும் பெரிய தொகையை மிச்சப்படுத்தலாம்.