
பொதுவாகவே, சில பழக்க வழக்கங்களை வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கிறோம். இதில் வாஸ்து முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதேபோல, கிரஹ அமைப்புகளும் சாதக, பாதகமான பலன்களைத் தருகிறது. அதையும் நம்பாமல் இருக்க முடியாது! சில விஷயங்களில் மூட நம்பிக்கையும் வெகுவாக பரவிக் கிடக்கிறது.
கண் திருஷ்டி, ஏவல், பில்லி சூன்யம், மந்திரம் செய்தல் போன்றவையும் சிலரது வாழ்க்கையில் வந்து போகிறது! சில தேவையில்லாத விஷயங்களில் நாம் அதீத நம்பிக்கையோ, ஈடுபாடோ கொண்டுவிட்டால் அதிலிருந்து மீள்வது கொஞ்சம் சிரமம்தான்.
இப்படிப்பட்ட நிலைகளில் நாம்தான் எது நல்லது? எது கெட்டது? என்பதை சீா்தூக்கி பார்ப்பதோடு, விவேகமுடன் செயல்பட வேண்டியது நமது கையில் மட்டுமல்ல, நமது குடும்பத்தைச் சோ்ந்தவா்களின் பங்களிப்பும் தேவை.
‘ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் விளங்காது’ என்ற சொல் வழக்கு ஒன்று உண்டு. அது என்ன ஆமை, அமீனா? ஆமை என்றால் நாம் நினைப்பது போல் ஆமை அல்ல. அது கல்லாமை, பொறாமை, இல்லாமை, விவேகமில்லாமை, அடங்காமை, நிதானமில்லாமை, பிறரை மதிக்காமை, பாகுபாடு காட்டாமை, அவதூறு பேசாமை, மது அருந்தாமை, புறம் பேசாமை, நாவடக்கமில்லாமை ஆகிய 12 ஆமைகள் ஆகும்.
இந்த ஈறாறு ஆமைகளும் வீட்டில் புகாமையே நல்ல வாழ்க்கையின் அடையாளம். அமைதியாக, ஆரோக்கியமாக, அறிவு சார்ந்த வகையில் வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட வேண்டும். நாம்தான் சக்கரத்தின் அச்சாணி, அது உடையாமல் பார்த்துக்கொள்வதே சிறப்பானது,
கல்லாமை: பொதுவாக, கல்வி என்பது ஒரு மனிதனுக்கு பெரிய சொத்து, காலத்தால் அழியாதது, அள்ள அள்ளக் குறையாதது! எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கல்வியை கற்பதே சாலச்சிறந்தது. கல்லாமை இல்லாத நிலைமை வர வேண்டும்.
பொறாமை: பொறாமை குணம் அறவே இல்லாத நிலைமை வர வேண்டும். நாம் அடுத்தவர் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படவே கூடாது. அது நம்மையே சுற்றிச்சுற்றி வரும். பொதுவாகவே, பொறாமைக் குணம் நமக்கான முதல் எதிரி.
இல்லாமை: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். ‘இல்லை… இல்லை’ என்றே சொல்லக்கூடாது. அது நல்ல செயல்பாடல்ல!
விவேகமில்லாமை: பொதுவாகவே, அனைவருக்கும் விவேகம் வேண்டும். விவேகமில்லா வாழ்க்கை வளமாகவே இருக்காது. வேகமா? விவேகமா? என்றால் விவேகமே முதலிடம் பெற வேண்டும்.
அடங்காமை: மனிதன் வாழ்க்கையில் சில விஷயங்களில் அடங்கிப் போகும் தன்மையை கடைபிடிப்பதே உயர்வான வழிக்கு எடுத்துக்காட்டாகும்.
நிதானமில்லாமை: தானத்தில் சிறந்தது நிதானம். நாம் நமது வாழ்க்கையில் எந்த நிலையிலும் நிதானத்தைக் கடைபிடிப்பதே நல்லது. நிதானம் மனிதனுக்கு ஒரு கவசம் போன்றது.
பிறரை மதிக்காமை: நமது வாழ்க்கையில், ‘நான்’ என்ற அகம்பாவம் அறவே வரக் கூடாது. யாராக இருந்தாலும் பிறறை மதிக்கும் தன்மை நம்மை விட்டுஅகலவே கூடாது.
பாகுபாடு காட்டாமை: குடும்பத்திலும் சரி, வெளியிலும் சரி யாரிடமும் பாகுபாடு காட்டாமல் வாழக் கற்றுக்கொள்வதே நல்லது. பாகுபாடு காட்டுவது வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுமே!
அவதூறு பேசாமை: அடுத்தவர்களைப் பற்றி ஒருபோதும் அவதூறாகப் பேசவே கூடாது. அது நாகரிகமான செயலே அல்ல!
மது அருந்தாமை: குடி குடியைக் கெடுக்கும். அப்படிப்பட்ட மது அரக்கனின் பிடியில் நாம் சிக்கவே கூடாது. அது நல்ல குடும்பத்தை நடு வீதிக்கே கொண்டு வந்து விட்டுவிடும்.
புறம் பேசாமை: ‘பொய் சொல்லல் ஆகாது பாப்பா! புறஞ்சொல்லல் ஆகாது பாப்பா!’ என்ற வரிகளுக்கேற்ப புறம் பேசுதல் நல்ல பழக்கமே அல்ல. அதுவும் ஒருவரை போகவிட்டு அவரது முதுகிற்குப்பின்னால் புறம்பேசுவது நல்லதல்ல.
நாவடக்கமில்லாமை: நாவினாற் சுட்ட வடு ஒருபோதும் ஆறவே ஆறாது என்பது போல எங்கும் எதிலும் நாம் அவசியம் கடைபிடிக்க வேண்டியது நாவடக்கமே. நாவடக்கம் இல்லையென்றால் நம்மைச் சுற்றி யாருமே இருக்க மாட்டார்கள்.
ஆக, மேற்சொன்ன ஆமைகள் வீடுகளில் புகுந்து விட்டாலே அவ்வளவுதான். அனைத்தும் சீட்டுக்கட்டு போல கலைந்துவிடும். குருவிக்கூடு போல சிதைந்துவிடும்.