அனைவருக்கும் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கடந்த கால வாழ்வில் நிறைய எதிர்மறையான அனுபவங்கள், நோய் நொடிகள், காயங்கள், மனக்கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கும். அதனுடைய விளைவுகள் நீண்ட காலத்திற்கு மனதில் தங்கி தொல்லை கொடுக்கும். சிலர் தங்களது கசப்பான கடந்த காலத்தை நினைத்து மனத்தை வருத்தி நிகழ்கால சந்தோஷங்களையும் கெடுத்துக் கொள்வார்கள். அவற்றிலிருந்து மீண்டு வர உளவியலாளர்கள் கூறும் இரண்டு புதிய டெக்னிக்குகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கடந்த காலத்தை மறுமதிப்பீடு செய்தல்: இந்த டெக்னிக் மூலம் கடந்துபோன கசப்பான, எதிர்மறையான நிகழ்வுகளை மாற்றி, நேர்மறையான விஷயங்களை மட்டும் நினைவுகூர்வது. இது பழைய நிகழ்வுகளை திரும்ப எழுதுவது போல. இதில் ஒருவர் தன்னுடைய கற்பனையையும் சேர்த்து புகுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, தன்னுடைய பார்ட்னர் உடன் ஒருவருக்கு ப்ரேக்கப் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்.
அவர்கள் மனமொத்த காதலர்களாக இருந்த காலகட்டத்தில் நடந்த இன்பமான, நேர்மறையான நிகழ்வுகளை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். பார்ட்னரிடம் பிடிக்காத எதிர்மறையான விஷயங்களை நேர்மறையாக மாற்றி விடலாம். உங்களுக்குப் பிடித்த மாதிரி அவரை கற்பனையில் மாற்றி விடலாம். இப்போது பழைய நினைவுகளை நினைக்கும்போது கடந்த காலம் ஒரு சுமையாக இல்லாமல், இனிப்பான நினைவுகள் மட்டும் உங்கள் நினைவில் இருக்கும். ஒருவேளை உங்களது பார்ட்னர் மனம் மாறி உங்களை மீண்டும் வந்து சேரலாம். கடந்த கால கசப்பான நினைவுகள் தரும் அழுத்தத்திலிருந்து ஒருவருக்கு விடுதலையும் கிடைக்கும்.
2. தன்னுடைய கடந்த காலத்தை ஒரு கதை போல பிறருக்குச் சொல்லலாம்: தங்களது கதையை சொல்லும்போது அதில் கசப்பான நிகழ்வுகளை குறைத்துக் கொண்டு, இனிப்பான நினைவுகளை பற்றி அதிகம் சொல்ல வேண்டும். ஏனென்றால், கதை என்றாலே அதில் இன்பம் மட்டும் கலந்து இருக்காது. துன்பங்களும் வலிகளும் சங்கடங்களும் நிறைந்திருக்கும். ஆனாலும், அந்தக் கதைக்கு ஒரு நல்ல பொருளும் அர்த்தமும் இருக்கும்.
ஒரு நல்ல கதை படித்தாலோ, கேட்டாலோ ஒருவருடைய டென்ஷனை நன்றாக விடுவிக்கும். சில கதைகளைக் கேட்டால் அவர்களுக்கு அதிலிருந்து சில அறிவுரைகள் கிடைக்கும். அதற்கான மதிப்பும் இருக்கும். மேலும், ஒரு மூன்றாம் நபரைப் போல தனக்கு நேர்ந்த அனுபவங்களை கதை போல சொல்வதால் அதை ஏற்கும் பக்குவமும் ஒருவருக்கு வாய்க்கும்.
இந்த இரண்டு உத்திகளும் ஒருவரின் கடந்த கால கசப்பான நினைவுகளைப் பற்றிய மன அழுத்தத்தில் இருந்து விடுவித்து ஆறுதல் அளிக்கும். இதனால் மனம் லேசானது போல அவர் உணர்வார்.