

உலகத் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இதோ 2026-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தை மாதம் பிறந்துவிட்டாலே மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும், உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். பழையன கழித்து, புதியன புகுந்து, இயற்கைக்கு நன்றி செலுத்தும் இந்த நான்கு நாள் திருவிழாவைக் கொண்டாடுவதற்காகத் தயாராகி வருகிறோம்.
புத்தாடை வாங்குவது, கரும்பு சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும், பொங்கல் பண்டிகையின் உண்மையான களை என்பது நம் வீட்டை நாம் எப்படி அலங்கரிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகரத்தின் நவீன வீடுகளிலும் பாரம்பரியம் மாறாமல் வீட்டை எப்படி அழகுபடுத்தலாம் என்பதற்கான எளிய வழிகளைப் பார்ப்போம்.
பொங்கல் கிட்ட வந்தாச்சு... பொங்கல் வைக்க பானையை தேடி அலைய வேண்டாம்! வீட்டில் இருந்தே வாங்க...
வரவேற்பறை, வால்ச!
வீட்டின் அழகு வாசலில்தான் தொடங்குகிறது. பொங்கல் நாளன்று உங்கள் வீட்டு வாசலை வண்ணமயமாக்க, அரிசி மாவு கோலம் இடுவது மிகச் சிறந்தது. இது வெறும் அலங்காரம் மட்டுமல்ல; எறும்புகளுக்கும், பூச்சிகளுக்கும் உணவளிக்கும் ஒரு உன்னதச் செயல். பச்சை, சிவப்பு, காவி போன்ற வண்ணங்களைப் பயன்படுத்தி ரங்கோலி வரைவது பண்டிகைக் கால உணர்வை இரட்டிப்பாக்கும். அதேபோல், நிலைவாசல் கதவுகளுக்கு மாவிலை தோரணம் கட்டுவது மங்களகரமானது. இது நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதுடன், கிருமி நாசினியாகவும் செயல்பட்டு வீட்டிற்குப் பாதுகாப்பைத் தரும்.
பொங்கல் பானை அலங்காரம்!
பொங்கல் பண்டிகையின் கதாநாயகனே அந்தப் பொங்கல் பானைதான். சில்வர் அல்லது பித்தளைப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதை விட, பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைப்பதே தனிச் சிறப்பு. ஒரு புதிய மண் பானையை வாங்கி, அதன் மீது வண்ணங்கள் தீட்டி அழகுபடுத்தலாம்.
பானையின் கழுத்துப் பகுதியில் இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்தைச் சுற்றிக்கட்டும்போது, அது பார்க்கவே அவ்வளவு லட்சணமாக இருக்கும். உங்கள் படைப்பாற்றலுக்கு ஏற்றவாறு பானையில் பூக்களையோ அல்லது கரும்பு ஓவியங்களையோ வரையலாம்.
சமையலறை!
இன்று பலரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பதால், முற்றத்தில் பொங்கல் வைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம். அதற்காகக் கவலைப்பட வேண்டாம். உங்கள் சமையலறையையே பாரம்பரிய இடமாக மாற்றலாம். கேஸ் ஸ்டவ் அல்லது இண்டக்ஷன் அடுப்பு இருக்கும் இடத்தை நன்கு சுத்தம் செய்து, சுற்றிலும் கோலமிட்டு, பூக்களால் அலங்கரிக்கலாம். இடப்பற்றாக்குறை இருந்தாலும், சமையலறை வாசலிலும் மாவிலைகளைக் கட்டி 'இன்டோர் பொங்கல்' கொண்டாட்டத்தைச் சிறப்பாக நடத்தலாம்.
கரும்பு பந்தல்!
பொங்கல் என்றாலே கரும்பு இல்லாமல் இருக்காது. மூன்று முழுக் கரும்புகளை எடுத்து, அதன் இலைகளோடு சேர்த்து முக்கோண வடிவில் ஒரு பந்தல் போல அமைத்து, அதற்கு நடுவே பொங்கல் பானையை வைப்பது ஒரு தனி அழகு. இது விவசாயத்தின் செழிப்பை உணர்த்தும் அடையாளமாகும். முழு கரும்பு கிடைக்காதவர்கள், துண்டு கரும்புகளைப் பூஜை அறையில் வைத்தும் வழிபடலாம்.
கோமாதா வழிபாடு!
விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளைத் தெய்வமாக மதிக்கும் நாள் இது. மாட்டுப் பொங்கல் அன்று, உங்கள் வீட்டுச் சுவர்களிலோ அல்லது பூஜை அறையிலோ பசுவின் படத்தை வரைந்து வழிபடலாம். கிராமங்களில் இருப்பவர்கள் நிஜமான பசுக்களுக்கு வர்ணம் தீட்டி அழகுபடுத்துவார்கள். நகரத்தில் இருப்பவர்கள், சிறிய பசுவின் சிலைகளை வைத்துப் பூக்களால் அலங்கரித்து நன்றி செலுத்தலாம்.
இந்த 2026-ம் ஆண்டுப் பொங்கலில், உங்கள் வீடு மகிழ்ச்சியாலும், செழிப்பாலும் நிறையட்டும்.
பொங்கல் கிட்ட வந்தாச்சு... பொங்கல் வைக்க பானையை தேடி அலைய வேண்டாம்! வீட்டில் இருந்தே வாங்க...