
ஸ்ரீ கிருஷ்ணரின் கீதோபதேசம் (பகவத்கீதை) தெரியும். கோமாதா உபதேசம்...!! அது என்னவென்று பார்க்கலாமா..?
கோமாதாவை, அதாவது பசுவை, வதை செய்வது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதை செய்ய வேண்டுமென எண்ணுபவர்கள், தவறு பற்றி நினைப்பது கிடையாது.
கோமாதாவாகிய லக்ஷ்மி பசு யோசித்தது. 'தனக்கும் ஒருநாள் இந்த மாதிரி வதைக்குள்ளாகும் நிலைமை ஏற்படலாம். அப்போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கு போர் முனையில் பகவத்கீதையை உபதேசித்ததைப் போல நானும் ஏன் உபதேசிக்கக் கூடாது? குறைந்த பட்சம் ஒருவனுக்காவது உபதேசம் செய்து, அவன் செய்வதை தடுக்கலாமே. முயன்றால் முடியாதது கிடையாது என்று சொல்வதை, நடைமுறைப் படுத்திப் பார்க்கலாம்,' என்று எண்ணி, சகோதரி பார்வதி பசுவிடம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தது.
லக்ஷ்மி பசு நினைத்த மாதிரியே, ஒரு நாள், அதன் சொந்தக்காரன் வதை செய்ய வந்தவுடன், கோமாதா லக்ஷ்மி அவனை பார்த்து சிரித்தது.
சிரித்த லக்ஷ்மியைப் பார்த்து, "உன்னால் இப்போது உபயோகமில்லை. அதனால் உன்னை கொல்வதற்காக ஆயுதத்துடன் நான் வந்திருக்கிறேன். அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கிறாய்?" என்று அவன் கேட்கையில்,
"நான் மாமிசத்தை ஒரு போதும் சாப்பிட்டது கிடையாது. ஆனாலும் உன் கையினால் ஏற்படும் என் மரணம் மிகவும் பயங்கரமாக இருக்கப் போகிறது. ஆனால், எந்த தவறும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடப்போகும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்கும் என்று நினைத்தேன். சிரித்தேன்," என்று கோமாதா கூறியது.
"அது குறித்து எனக்கு கவலையில்லை. என் தொழிலை இப்போது நான் செய்யப் போகிறேன்" என்றான் சொந்தக்காரன்.
"நீ சொல்வது சரி! நான் கூறுவதை கவனமாக கேட்டுவிட்டு என்னைக் கொல்வது பற்றி தீர்மானித்துக்கொள்" என்று கோமாதா சொன்னவுடன்,
"சரி ! சரி ! சீக்கிரம் சொல்லு! கேக்கறேன்!" என்றான்.
"நான் சாப்பிட புல் மற்றும் அழுகிப்போன காய்கறிகள் போன்றவைகளைக் கொடுத்தாய். ஆனால் நானோ, என்னுடைய மடிப் பால் கொடுத்து உன் குடும்பத்தையும், குழந்தைகளையும் வளர்த்தேன். பாலிலிருந்து வெண்ணெய் எடுத்து, அதிலிருந்து நெய் உருக்கி வீட்டிற்கு உபயோகப்படுத்திக் கொண்டாய். மீதியை விற்று, காசும் சேர்த்தாய்.
இது மட்டுமா..? என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கும், எருவினைத் தயாரித்து உனது நில விவசாயத்திற்கு பயன்படுத்தினாய்.
அதன் மூலம் கிடைத்த பணத்தினால், நல்ல வீடு கட்டி உனது குடும்பத்துடன் நீ மகிழ்ச்சியாக வாழ்கிறாய். மேலும், என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறாய்.
என்னைக் கொல்ல ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு எனது பாலினால்தான் கிடைத்தது என்பதை மறந்து விட்டாயா...?
நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்ட நீ என்னை மட்டும் ஒரு மாட்டுக் கொட்டாயில் வைத்திருக்கிறாய். உன்னை பெற்ற தாய்க்கு சமமான நான், ஸ்ரீ கிருஷ்ண பகவானிற்கு பிரியமானவள்.
எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன்னுடைய எதிர்காலத்தை நினைத்து வருத்தப்பட்டு சிரிக்கிறேன்!" என்று 'கீதோபதேசம்' போல 'கோமாதா உபதேசம்' சொல்லி முடிக்கையில், கையிலிருந்த ஆயுதத்தைக் கீழே போட்டு, லக்ஷ்மி பசுவை வணங்கி உள்ளே சென்றான் சொந்தக்காரன். சகோதரி பார்வதி பசு, லக்ஷ்மி பசுவைப் பார்த்து தலையை ஆட்டி புன்னகைத்தாள்.