

நம் இந்தியச் சமையலில் இஞ்சி, பூண்டுக்கு எப்போதுமே தனி இடமுண்டு. பிரியாணி தொடங்கி காரக் குழம்பு வரை பூண்டு சேர்க்காமல் சமைத்தால் அந்த ருசியே முழுமையடையாது. ருசி என்னவோ பிரமாதமாகத் தான் இருக்கும், ஆனால் அதற்காகப் பூண்டு உரிப்பது தான் பலருக்கும் பிடிக்காத விஷயம். குறிப்பாக, அசைவ சமையலின் போது கிலோ கணக்கில் பூண்டு உரிக்கும்போது, கைகளில் ஒருவித பிசுபிசுப்புத் தன்மையும், கடுமையான நெடி வீசுவதும் சகஜம்.
என்னதான் வாசனை சோப்பு போட்டு கை கழுவினாலும், நகக்கண்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பூண்டு வாசனை அவ்வளவு சீக்கிரம் போகாது. இனி அந்தக்கவலை வேண்டாம். உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே, அந்தக் கடுமையான வாசனையை மாயமாக மறைய வைக்கலாம்.
1. வருமுன் காப்பதே சிறந்தது: பூண்டு உரித்த பிறகு வாசனையைப் போக்குவதை விட, வாசனையே கையில் ஒட்டாமல் பார்த்துக்கொள்வது புத்திசாலித்தனம். பூண்டு உரிக்க உட்காரும் முன்பே, உங்கள் உள்ளங்கைகள் மற்றும் விரல்களில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் எதையாவது தடவிக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்வதால், உங்கள் தோலுக்கும் பூண்டுக்கும் நடுவில் எண்ணெய் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும். இதனால் பூண்டின் பிசுபிசுப்புத் தன்மை உங்கள் தோலில் நேரடியாக ஒட்டாது. வேலை முடிந்ததும் சோப்பு போட்டு கழுவினால், எண்ணெய் பிசுக்குடன் பூண்டு வாசனையும் காணாமல் போய்விடும்.
2. எலுமிச்சையும் உப்பும்: ஏற்கனவே பூண்டு உரித்துவிட்டீர்கள், கையில் நாற்றம் எடுக்கிறது என்றால், இந்த முறையைக் கையாளுங்கள். ஒரு கிண்ணத்தில் சிறிது தூள் உப்பை எடுத்துக்கொண்டு, அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடுங்கள்.
இந்த கலவையை கைகளில் தடவி, ஸ்க்ரப் செய்வது போல நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் வாசனையை முறிக்கும் வல்லமை கொண்டது; உப்பு அழுக்கை நீக்கும். இது நகங்களில் உள்ள கறையையும் நீக்கி கைகளை சுத்தமாக்கும்.
3. காபி பொடி: பூண்டின் துர்நாற்றத்தை விரட்ட காபி பொடி ஒரு சிறந்த ஆயுதம். வீட்டில் இருக்கும் இன்ஸ்டன்ட் காபி தூள் அல்லது ஃபில்டர் காபித் தூள் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சிறிது காபி பொடியுடன் தண்ணீர் சேர்த்து, அதை ஒரு பேஸ்ட் போலக் குழைத்துக்கொள்ளுங்கள். இதை கைகளில் தடவி இரண்டு நிமிடம் தேய்த்துக் கழுவினால், பூண்டு வாசனை இருந்த இடம் தெரியாமல் போய்விடும். கைகளில் நல்ல காபி நறுமணம் வீசும்.
4. டூத் பேஸ்ட்: இது கேட்பதற்குச் சற்று விசித்திரமாக இருக்கலாம். ஆனால், வாய் துர்நாற்றத்தைப் போக்கும் டூத் பேஸ்ட், கை துர்நாற்றத்தையும் போக்கும் என்பது தான் உண்மை. பூண்டு உரித்த பின் கைகளை நீரில் கழுவிவிட்டு, சிறிது டூத் பேஸ்ட்டை எடுத்து கைகளில் தடவி நுரை வரத் தேய்க்கவும்.
இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தும் தேய்க்கலாம். டூத் பேஸ்ட்டில் உள்ள புத்துணர்ச்சித் தன்மை, பூண்டின் நெடியை முழுமையாக நீக்கிவிடும்.
மேலே சொன்ன நான்கு குறிப்புகளுமே மிக எளிமையானவை மற்றும் நம் வீட்டிலேயே இருப்பவை. அடுத்த முறை நீங்கள் அசைவ விருந்து சமைக்கும் போதோ அல்லது பூண்டு ஊறுகாய் போடும் போதோ, இந்த டிப்ஸை முயற்சி செய்து பாருங்கள்.