
நோய் நொடியின்றி மன மகிழ்ச்சியுடன், தினசரி அந்தந்த வேலையை சுறுசுறுப்புடன் செய்து, புன்னகை பூத்த முகத்துடன் இருந்தாலே வீட்டில் அமைதி குடிகொள்ளும். ஆனந்தம் விளையாடும் வீடாக அது மாறிவிடும். அதற்கு நாம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
குளியல்: மழைக்காலம் தொடங்கி விட்டது. ஆதலால், வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்துவிட்டு அமைதியாக சிறிது நேரம் தியானத்தில் ஆழ்ந்து விடலாம். மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளிவிடும் மூச்சுப் பயிற்சியை மேற்கொள்ளுதல், மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் எந்த செயலுக்கும் இந்த தியானம் நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். மனதில் அமைதியை நிலைநாட்டும். மனம் லேசாகும். இதனால் சிடுசிடுப்பு, கோபம், வெறுப்பு அனைத்தும் அகலும். இவையெல்லாம் மனதில் குடிகொண்டாலே வீடு ஆனந்தம் அடையாதா என்ன?
நடை: தினசரி காலை, மாலை அழகாக ஒரு நடை போடலாம். பூங்காக்களில் சென்று நடந்தால் மனதிற்கு அந்த பசுமையே ஒரு உற்சாகத்தைக் கொடுக்கும். பறவைகளின் ஒலியும், சூரிய ஒளியும் நம் மனதிற்கு ஒரு இன்பத்தை அளிக்கும். மனப்பாடம் செய்து வைத்திருக்கும் சுலோகங்களை சொன்னபடியே நடக்கலாம். ஏதாவது மறந்து போயிருந்தால் வீட்டிற்கு வந்து ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இதனால் நினைவுத்திறன் அதிகரிக்கும். அது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஞாபக மறதியே இல்லாமல் இருந்தால், வீட்டில் பல்வேறு குழப்பங்கள் நிகழாமல் தடுக்கலாம். இதனால் அந்த வீட்டில் ஆனந்தம் விளையாடாதா என்ன?
பூச்செண்டு: நடைப்பயிற்சிக்குப் பிறகு வீட்டுக்கு வரும் வழியில் கடைகளில் கிடைக்கும் மலர்களை வாங்கி வந்து அழகாக அடுக்கி மலர்ச் செண்டு ஒன்றைத் தயாரித்து, அதனை ஒரு சொம்பில் சொருகலாம். இது மனதிற்கு நல்ல ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதனால் மன அழுத்தம் நீங்கும். காண்போர் கண்களுக்கும் விருந்தளிக்கும். மனதில் புத்துணர்ச்சி உண்டானாலே வீட்டில் ஆனந்தத்துக்கு பஞ்சமேது?
தேனீர் விருந்து: தினசரி சாயங்கால வேளைகளில் டீ தயாரித்து வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து அருந்தலாம். அப்பொழுது அனைவரும் மற்றவரோடு சற்று நேரம் உரையாடலாம். தேனீர் தயாரிப்பது பெண்களின் வேலை என்று இல்லாமல், ஆண்களும் அதில் பங்கு பெறலாம். இது எல்லோருக்கும் நல்ல ஒரு உற்சாகத்தை அளிக்கும்.
மேற்கண்ட நான்கு விஷயங்கள் தினசரி உங்கள் வீட்டில் தவறாமல் நிகழ்ந்தாலே நிச்சயம் உங்கள் வீட்டில் ஆனந்தத்துக்கு குறைவிருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.