
பொதுவாக, குடும்பம் என்பது அனைத்தும் கலந்த கலவை. அதில் ஏற்றமும் இருக்கும், இறக்கமும் இருக்கும். அதே நேரம் ஒவ்வொரு குடும்பத்தையும் கட்டிக்காக்க வேண்டிய சூட்சுமம் பெண்கள் கையில்தான் உள்ளது. பெண் என்பவள் பல அவதாரம் கொண்டவள். கோபம், குணம், சந்தோஷம், திறமை, அனுசரிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்துப்போகும் தன்மை, உறவுகளை மேம்படுத்துதல், நான் எனது குடும்பம், எனது பந்தம் என்ற ஐக்கிய உணர்வுகளை உள்ளடக்கிய மதியூக மந்திரியே அவள்தான். அவளை ஆதிபராசக்தியின் அவதாரம் என்றுகூட சொல்லலாம்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண்தான் இருப்பாள் என்பதும் நிஜம். சில பெண்களை வளா்க்கும் விதமாக வளர்க்கப்படாமல் தான் தோன்றித்தனமாக வளா்ந்து அடங்காப்பிடாரியாக அமைவதும் உண்டு. பஞ்சாங்கத்தில் படிப்பது போல ஆதாயம் 12, விரயம் 8 எனலாம்.
பொதுவாகவே, ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் தன்மையில் பெண்களுக்கே முதலிடம் என்று சொன்னால் அது மிகையல்ல! பெண்ணே, பெண்ணிற்கு எதிரி என சொல்லும் நிலையில் பல குடும்பங்களில் மாமியார், மருமகள் உறவானது சிக்கலான விஷயமாகவே அமைந்து விடுகிறது. இதில் இரண்டு இடங்களிலும் பெண்களே நாயகிகள்!
ஒரு தாய் தனது குழந்தையை பத்து மாதம் சுமந்து பெற்று, ஆளாக்கி, படிக்க வைத்து வேலைக்குப் போனதும் திருமணம் செய்ய முடிவு செய்கிறாள். ‘பார்த்துப் பார்த்து வளா்த்த என் பையனுக்கு நல்ல பெண் மனைவியாக அமைய வேண்டுமே? நல்ல குணமுள்ள பெண் வாழ்க்கைத் துணையாய் வர வேண்டுமே என ஏறி இறங்காத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. நாங்கள் எதையும் எதிர்க்கவில்லை. பெண் கிடைத்தால் போதும்’ என்றெல்லாம் பேசுவதும் உண்டு!
இப்படிப் பேசி திருமணமும் முடிந்துவிடும். அவ்வளவு தான்! தாயானவள் பார்த்துப் பார்த்து மகனுக்கு திருமணம் முடித்தவுடன் ஒரு இன்கிரிமென்ட் இல்லாத பதவி உயர்வு மாமியார் என்ற போர்வையில் வந்து ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விடுகிறதே என்ன செய்வது? தனது மகனுக்கு ஏற்ற துணையாக வந்தவள், நமது குடும்ப நிலவரத்தைத் தெரிந்துகொள்வதற்குள் வந்தவளை ஆட்டிப்படைக்கவேண்டியது, கொடுமைப்படுத்துவது, அவளது குடும்பத்தை கேவலமாகப் பேசுவது போன்ற போர்வையை போர்த்திக்கொள்ள வேண்டியது. இது என்ன மாமியார் என்றால் இந்த குணமெல்லாம் வரவேண்டுமா என்ன?
மருமகளை முதலில் மகளாக நினையுங்கள்! மருமகளுக்கு நம் வீட்டு குடும்ப விஷயங்களைச் சொல்லிக் கொடுங்கள்! கோப, தாபங்கள் குறைத்து விவேகம் மற்றும் நிதானத்தைக் கடைபிடியுங்கள். வேலைக்குப் போகும் பெண்ணாய் இருந்தால் உங்கள் மகன் விரும்பினால் வேலையைத் தொடரட்டும். இல்லாவிடில் சமையல்கட்டை அவளிடம் ஒப்படைப்பதோடு நீங்கள் உதவி செய்யுங்களேன்.
அவளுக்குத் தெரியாததை பொறுமையாய் சொல்லிக் கொடுங்கள். சமையலில் குற்றம் குறை இருந்தால், தனியே அழைத்து திருத்துங்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மருமகளைப் பற்றி குறை சொல்லாதீா்கள்! உங்கள் பெண் புகுந்த வீட்டிற்குப் போனால் மாமியார் கொடுமை இல்லாமல் வாழ வேண்டுமென நீங்கள் நினைப்பதுபோல நமக்கு வந்த மருமகளின் தாயும் நினைப்பார்கள் அல்லவா?
25 வருடங்களுக்கு தாய், தந்தை சகோதரன், சகோதரி, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி இவர்களோடு வாழ்ந்தவள் அனைத்தையும் மூன்று முடிச்சு விழுந்த கையோடு, ‘நமக்கானவன் இவனே கணவன்’ என்ற நம்பிக்கையோடு கனவுகளை சுமந்து வருகிறாளே, அதற்கு ஏற்றாற்போல நாமும் அவளை நமது குடும்பத்திற்கான குத்துவிளக்கு என நினைத்து, நிர்வாகத்தை அவள் கையில் ஒப்படைத்து, குடும்ப நிர்வாகத்தை அவளிடம் ஒப்படைத்து விடுங்கள்.
அதேபோல, மருமகளாக வரக்கூடிய பெண்களும் புகுந்த வீட்டை தனது வீடாக பாவித்து, மாமனாரை அப்பா போலவும், மாமியாரை அம்மா போலவும் பாவித்து அன்பே பிரதானமாய் நாத்தனார், கொழுந்தனார் இவர்களை உடன்பிறந்தவர்களாக பாவித்து, தெரியாத விஷயங்களை மாமியாரிடம் கேட்டுத்தெரிந்து, அனுசரித்து தனது குடும்பம் என்ற நிலைப்பாடான பக்குவம் கடைக்பிடித்து குடும்ப விளக்கினை ஏற்றுங்கள். புகுந்த வீட்டின் விஷயங்களை பிறந்த வீட்டினர் காதுகளுக்கு விருந்தாக்காதீா்கள். அதேபோல, மாமியாராகிய நீங்கள் மருமகளைப் பற்றி அக்கம் பக்கத்தில் குறை சொல்லாதீா்கள்.
மாமனார், மாமியாரை ‘அத்தை, மாமா’ என அழைக்காமல் வாய் நிறைய அதோடு மனம் நிறைய அன்புடன் ‘அம்மா, அப்பா’ என அழைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே போதுமானது. அதேபோல, கணவன்மார்களும் மனைவியிடம் தனது உறவுகளைப் பற்றி உயர்வாகச் சொல்லுங்கள். மனைவியின் குடும்பத்தினர்களிடமும் பரஸ்பரம் சிநேகமுடன் பழகுங்கள். எந்த நிலையிலும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் தன்மையோடு நம் மருமகள், நம் குடும்பம் நமக்கானவள் என்ற புரிதலோடு மாமியாரும், மருமகளும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்களில் அனுசரித்து வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலே அனைத்திலும் நமக்கு வெற்றியே.
இறுதியாக, மாமியாரும் ஒரு நாள் மருமகளாக வாழ்ந்தவளே. அதேபோல, மருமகளும் எதிர்காலத்தில் மாமியார் ஆகத்தானே வேண்டும். இந்த சூட்சுமக் கயிறுதான் குடும்பத்தின் ஆணிவோ் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.