
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்பது போல, சமுதாயத்தில் உயர்வாக இருப்பவர்களை ஒரு மாதிரியாகவும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களை ஒரு மாதிரியாகவும் நடத்தும் வழக்கம் நாம் நண்பராக நினைக்கும் நபர் கூட நம்மை அட்டாக் செய்ய நேரிடலாம். நம்மைப் புகழ்வது போல் பழித்து கூறும் இவர்களால் நம் மனதிற்குள் ஏதோ ஒரு இடத்தில் உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களை சமாளிக்கும் வழிகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. விளக்கம் கேளுங்கள்: ஒருவர் நம்மை அவரது ஜோக்கின் மூலம் அட்டாக் செய்ய நினைத்தால், நாம் திரும்பப் பேசுவதை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து ‘நீங்கள் கூறியதற்கு விளக்கம் கூற முடியுமா?’ எனக் கேட்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யோசித்து இருக்க மாட்டார்கள். அவர்கள் வேறு அர்த்தத்தில் கூறியதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள வாய்ப்பும் இருப்பதால் அவரிடமே விளக்கம் கேட்டால் உண்மை நிலை தெரியும். உண்மையில் அவர் தவறாகக் கூறியிருந்தாலும் அதை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும்.
2. எல்லைக்கோடு: சில நபர்கள் அவர்களது நகைச்சுவை நம்மைப் புண்படுத்துவதை புரிந்துகொள்ள மாட்டார்கள். இதுபோன்ற நேரங்களில் அவர்களிடம் எல்லைக் கோடுகளைப் போட வேண்டும். மேலும், அவரிடமே நேரடியாக நீங்கள் இப்படி பேசுவது எனக்கு அசௌகரியமாக இருக்கிறது என்பதனை தெளிவாகக் கூற வேண்டும். நீங்கள் அந்த நபருடன் உறவாக இருக்க வேண்டும் என நினைத்தால் எல்லை கோடுகளை நிர்ணயிப்பது கண்டிப்பாக அவசியம்.
3. நடுநிலையான பதில்கள்: உங்களைப் பற்றி ஒருவர் உங்களிடமே வஞ்சப் புகழ்ச்சி அணியை பரிமாறுகிறார் என்றால் ஒன்று அதற்கு பதில் கூறுங்கள் அல்லது நடுநிலையுடன் பதில் கூற முற்படுங்கள், இல்லையென்றால் அவர் கூறிய முறையையே திரும்ப நீங்கள் பின்பற்றினால் அவருடைய நடவடிக்கையை திருத்திக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
4. தனிமையில் கூறவும்: அவர்கள் எப்போதோ சொன்ன ஒரு ஜோக் அல்லது உங்களைப் பற்றி பேசிய கருத்து உங்கள் மனதில் பல நாட்களாக நெருடலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தால், அது குறித்து நீங்கள் அவரிடம் நேரடியாக பேசலாம். பலர் முன்னணியில், இது குறித்து பேசும்போது அவருக்கு அவமானமாக இருக்கலாம். அந்தப் பேச்சு சண்டையாகக் கூட முடியலாம். எனவே, அந்த உறவை ஹெல்தியாக வைத்துக்கொள்ள வேண்டும் என நீங்கள் நினைத்தால் இது குறித்து தனிமையாகப் பேச வேண்டும்.
‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.’ பெரும்பாலும் நம் மனதுக்கு நெருடல்கள் ஏற்படுத்தும் விஷயங்களை குறிப்பிட்ட நபரிடம் கேட்பதாலேயே பிரச்னைகள் முடிவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அதற்கான முறையைப் பின்பற்றி உறவைப் பேணுவதோடு மேற்கூறிய முறைகளையும் கையாளுங்கள்.