
இன்றைய காலகட்டத்தில் இணையம் இல்லாமல் எதுவும் இல்லை. பள்ளி, கல்லூரிகளே இன்று இணையம் மூலம்தான் நடக்கிறது. தொழில்நுட்ப விதத்தில் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் போன்ற சாதனங்கன் தவிர்க்க முடியாததுதான். ஆனால், நம் பிள்ளைகள் அவற்றுக்கு அடிமையாக வாழலாமா? நிறைய பயன்பாடு என்பது நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேவையைக் குறித்து அறிவு வளர்ச்சிக்கு பள்ளி, கல்லூரி அசைன்மென்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தவிர இணையத்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை.
வெவ்வேறு இடங்களில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பில் இருக்க சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம். அளவோடு இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதிக நேரத்தை இணையத்தில் செலவிடுவது ஆபத்து.
இணையம் என்பது, குறிப்பாக சமூக வலைத்தளங்கள் நேரத்தை மிக அதிக அளவில் தின்னக்கூடியது. பொழுதுபோக்காக ஆரம்பித்து பின்னர் பொழுதே போகாத அளவுக்கு அதிலேயே மூழ்கடித்து விடும் தன்மை அதற்கு உண்டு. குழந்தைகள் இந்த விளைவை உணராத பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த முறையில் அறிவுறுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. தலையீடு இல்லாத பட்சத்தில் குழந்தைகள் இணையத்தில் விளையாடுவதை, இணைய அடிமையாவதைத் தவிர்க்க முடியாது.
குழந்தைகளை தண்டிப்பது, திட்டுவது, அடிப்பது இதனால் கண்டிப்பாக நல்லபடியாக வளர்வார்கள் என்பது பல பெற்றோருடைய எண்ணம். இதுவே பல குடும்பங்களில் காலங்காலமாக பின்பற்றும் நடைமுறையும் கூட. குழந்தைகளை மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ பெற்றோருக்கு இருப்பதாகவே பலரும் கருதுகிறார்கள்.
இப்பொழுது குழந்தைகளுக்குக் கிடைக்கிற அனுபவங்கள் காரணமாக பெற்றோரை எதிர்க்கும் குணம் கூட வந்துவிட்டது. குழந்தைகளை நமக்குச் சமமான மனிதர்களாகவே பார்க்க வேண்டும். அடி உதை எல்லாம் அந்தக் கால வழக்கம் என்று தூக்கி போட்டுவிட்டு குழந்தைகளுக்கான உரையாடலில், பேச்சில், செயலில் கவனம் செலுத்த வேண்டும்.
பல அம்மாக்களுக்கு ஓர் அச்சம் உண்டு. அப்பாவிடம் இருக்கும் தவறான பழக்கங்கள் அனைத்தும் பிள்ளைகளுக்கும் தொற்றிக்கொள்ளுமோ? இது மிகவும் நியாயமான பயம்தான். பெற்றோரோ தன்னைச் சுற்றி இருக்கிற பெரியவர்களோ என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கும் குழந்தைகள், அவற்றை தாங்களும் செய்ய நினைக்கிறார்கள்.
பெற்றோர் அல்லது உறவினர்களிடம் இருக்கும் பழக்கங்கள், குழந்தைகளை மன ரீதியாக பாதிக்கும். இந்தப் பழக்கங்கைளைத் தேடி அவர்கள் செல்லவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்காக என்றாவது இதுபோன்ற பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும். ஆகவே, குழந்தைகளுக்கு பெற்றோர்கள் நல்ல ரோல் மாடல்களாக இருக்க வேண்டும்.
சமீபத்தில் நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது, அவரது பையன், எங்களிடமிருந்து செல்போன் கேட்டு விளையாடிவிட்டுத் தருவதாகக் கூறினான். அப்போது நண்பர், அவர் மகனிடம் ‘செல்போனில் விளையாடினால் கண்கள் பாதிக்கும் என உங்கள் மிஸ் சொன்னார்களே? அவர்களிடம் சொல்லவா?’ என்று கேட்டார்.
உடனே மகன், ‘ஆமாம் அப்பா. எனது கிளாஸில் எனது நண்பர்கள் இணையத்தில் விளையாடியதால் கண்கள் பாதித்து இப்போது கண்ணாடி போட்டுள்ளனர்’ என்று என்னிடம் கூறி போன் வேண்டாம் எனக் கூறிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு விளையாடச் சென்றான். மேலும், நண்பர் தற்போது செல்போன் பார்ப்பதை மிகவும் குறைத்து விட்டதாகவும், வாட்ஸ் அப்பில் நிறைய வேண்டாத பெயர்களை நீக்கி விட்டதாகவும் கூறினார்.
இது மாதிரி குழந்தைகளிடம் பெற்றோர்கள் அன்பாகப் பேசியும், தாங்களும் இணையத்தில் செலவிடாமல் குழந்தைகளிடம் பேசி, சிரித்து, வெளியிடங்கள், உறவினர்களுடன் பேசி மகிழ்ந்தால் இணையத்தில் செலவிடும் நேரத்தை மறக்கச் செய்யலாம். பெற்றோர்களே இதற்கு முன் உதாரணமாக இருந்தால் குழந்தைகள் இணைய அடிமையிலிருந்து மீட்டு விடலாம். செல்போன் பார்ப்பதை பெற்றோர்கள் குழந்தைகள் முன் செல்வதை நிறுத்தினால் அவர்களும் இதனைச் செய்ய மாட்டார்கள்.