
எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கடவுளை வேண்டி உபவாசம் இருப்பது இயல்பு. இந்து மதத்தை சேர்ந்தவர்கள் ஏகாதசி, கிருத்திகை, நவராத்திரி, ராம நவமி, சிராவண மாதம் என அவரவர் சௌகரியத்திற்கேற்றவாறு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளிக்கு முன்னால் 40 நாட்கள் உபவாசம் இருப்பது வழக்கம். அதைப்போல முஸ்லிம் மதத்தினரும் ரம்ஜான் நோன்பிருப்பது வழக்கம். பல விதங்களில் உபவாசத்தை மக்கள் கையாளுகிறார்கள். அதாவது, ஒரு வேளை மட்டும் உண்பது,வெங்காயம், பூண்டு மற்றும் மாமிசத்தை சேர்க்காமல் மூன்று வேளையும் சாப்பிடுவது, ஒரு வாரத்திற்கு வெறும் நீராகாரம் மற்றும் பழம் எடுத்துக் கொள்வது என அவரவர் தன்னுடைய சூழ்நிலைக்கேற்றவாறு உபவாசத்தை மேற்கொள்கிறார்கள். உபவாசம் என்பது வெறும் உண்பதில் மட்டும்தான் கட்டுபாடா? மனதளவில் இல்லையா? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உபவாசம் என்றால் என்ன?
சமஸ்கிருதத்தில் ’உப’ என்றால் அருகில் என்று பொருள். ’வாசம்’ என்றால் வசித்தல் அல்லது இருத்தல் என்று பொருள். ஆகவே, உபவாசம் என்ற சொல்லிற்கு இறைவனுக்கு அருகில் இருத்தல் என்பதாகும். சிலர் கடவுளின் அருளைப் பெறவும் தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உபவாசம் இருக்கிறார்கள். சிலர் மன வலிமையை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் உபவாசத்தைக் கடைபிடிப்பார்கள்.
உண்மையில் சொல்லப்போனால், நாம் நம்முடைய அதிகபட்ச நேரத்தையும், சக்தியையும் உணவைத் தயாரிப்பதிலும், உண்பதிலும் மற்றும் அதை செரிப்பதிலுமே செலவழித்து விடுகிறோம். ஆகவே, சில நேரங்களில் நம் நேரத்தையும், சக்தியையும் அதிகம் வீணாக்காமல் எளிதில் செரிக்கக்கூடிய உணவை உட்கொண்டோ அல்லது பழங்களை உட்கொண்டோ அல்லது முழுவதும் உண்ணாவிரதமோ இருந்தால் மிகவும் நல்லது. இதனால் நேரமும் சக்தியும் சேமிக்கப்பட்டு மனமும் தூய்மையாகி ஒருமுகப்படுகிறது. மேலும், உபவாசத்தினால் நம்முடைய உடலுக்கும் ஓய்வு கிடைக்கும். தினம் தினம் சாப்பிட்டு சாப்பிட்டு அதை செரிக்க வைப்பதற்கு நம் உடல் ஓயாமல் உழைக்கிறது. ஆகவே, இடையிடையே இதைப்போல உபவாசம் இருக்கும்போது உடலுக்கும் சிறிதளவு ஓய்வு கிடைக்கும். மேலும், உடலிலுள்ள நச்சுகளும் வெளியேறி விடும். நம் உடலும் புத்துணர்ச்சி பெறும்.
உபவாசம் இருக்கும்போது வெறும் வாயை மட்டும் கட்டுப்படுத்தினால் போதாது. உபவாசமிருக்கும் நாட்களில் மனதையும் கட்டுப்படுத்தி இறைவனை வழிபட வேண்டும். உபவாசம் என்று சொல்லிவிட்டு, உட்கார்ந்து கொண்டு மொபைலையும் டிவியையும் பார்த்து கொண்டிருந்தால் ஒரு பயனுமில்லை. முடிந்த வரை தியானம் செய்து கொண்டு கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.
உபவாச தினத்தில் கடைபிடிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் எது தெரியுமா? அடுத்தவர்களை கடிந்து கொள்ளாமலும் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்காமலும், மற்றவரை அவ மரியாதை செய்யாமலும் இருக்க வேண்டும். கடவுளை வேண்டி உபவாசம் இருந்து விட்டு, மரியாதை இல்லாமல் வாய்க்கு வந்தபடி அடுத்தவர்களை கடிந்து கொண்டு பூஜை செய்வதால் என்ன லாபம்? உபவாசத்தின்போது எப்படி உணவில் கட்டுப்பாடோடு இருக்கிறோமோ அப்படியே நம்முடைய நடத்தையிலும் இருக்க வேண்டும்.
சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், இருதய பாதிப்பு போன்ற நோய் உள்ளவர்களும் உபவாசம் இருக்கலாம். ஆனால், அவர்கள் முற்றிலும் உணவை தவிர்ப்பது நல்லதல்ல. மாமிசம், வெங்காயம், பூண்டு போன்றவற்றை தவிர்த்து விட்டு முழு சைவ உணவை மேற்கொண்டும் விரதமிருக்கலாம். அவரவர்களுடைய உடல் நிலைக்கேற்றவாறு உபவாசமிருத்தல் நல்லது. எந்தவிதமான உபவாசம் கடைபிடித்தாலும் பரவாயில்லை. அந்த நேரத்தில் மனதை கெட்ட வழியிலோ அல்லது கெட்ட எண்ணத்திலோ அலைபாய விடாமல் கடவுளை தியானம் செய்வதில்தான் உபவாசத்தின் முழுபலன் அடங்கி இருக்கிறது. உபவாசம் என்றால் வாய் மற்றும் மனம் இரண்டையுமே கட்டுக்குள் வைத்து இறைவனை நாடி வழிபடும் முறையாகும்.