
கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகளும், சின்னச் சின்ன சண்டைகளும் வருவது சகஜம்தான். ஆனால், அவை பெரிதாகி உறவில் விரிசலை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்வது அவசியம். சில சமயங்களில் சிறிய புரிதல் இன்மைகள் கூட பெரிய பிரச்சனைகளாக வெடித்துவிடும்.
ஜப்பானியர்கள் தங்கள் இல்லற வாழ்க்கையில் சண்டைகளைக் குறைக்கவும், மகிழ்ச்சியை அதிகரிக்கவும் சில வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். அவற்றில் முக்கியமான 5 விஷயங்களைப் பார்ப்போம்.
1. 'ஐமை' (Aimai) எனப்படும் நுட்பமான அணுகுமுறை. கணவன்-மனைவி இடையே ஏதேனும் ஒரு சிறு மனக்கசப்போ அல்லது புரிதல் இன்மையோ ஏற்பட்டால், அது பெரிதாகும் முன் உடனடியாக அதைப் பற்றிப் பேசுவதை இவர்கள் பழக்கமாக்கிக் கொள்கிறார்கள். சில விஷயங்களை நேரடியாகச் சொல்ல முடியாதபோது, துணையின் மனதை நோகடிக்காமல் மறைமுகமாகவோ அல்லது மென்மையாகவும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க முயற்சி செய்கிறார்கள். இது சின்னச் சின்ன ஊடல்களைப் பெரிய சண்டைகளாக மாறுவதைத் தவிர்க்கிறது.
2. 'காமன்' (Kaman) என்ற பண்பு. இதன் பொருள் பொறுமை மற்றும் நிதானம். கருத்து வேறுபாடுகள் எழும்போது, உடனடியாக எதிர்வினையாற்றுவதைத் தவிர்த்து, பொறுமையுடனும், அமைதியுடனும் நிலைமையைக் கையாள்வது முக்கியம். எழுந்த கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்களைத் தெளிவாகப் பேசிப் புரிந்துகொள்வது, தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கும்.
3. 'இததாகிமாசு' (Itadakimasu) என்பது நன்றி உணர்வைக் குறிக்கும் சொல். நமக்கு யாராவது உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகளை வழங்கினால் நன்றி சொல்வோம். அதேபோல, நம்மை விரும்பித் திருமணம் செய்துகொண்டு, வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும் துணைக்கு எந்த அளவுக்கு நாம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள இந்தப் பழக்கம் உதவுகிறது. துணையின் சிறிய செயல்களுக்கும் கூட நன்றி பாராட்டுவது உறவை வலுப்படுத்தும்.
4. திருமண வாழ்வில் பிரச்சனைகள் எழும்போது, ஒருவருக்கொருவர் 'நேரமும் இடமும்' (Time and Space) கொடுப்பது முக்கியம். இருவரும் தனித்தனியே தங்களுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுவதன் மூலமோ அல்லது புதிய திறமைகளைக் கற்றுக்கொள்வதன் மூலமோ மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். இது பிரச்சனைகளை வேறு கோணத்தில் இருந்து அணுகவும், உறவின் முக்கியத்துவத்தை உணரவும் உதவியாக இருக்கும்.
5. 'வா' (Wa) என்ற மிக முக்கியமான கருத்து. இது உறவுகளுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் குறிக்கிறது. கணவன்-மனைவி உறவில் பரஸ்பர புரிதல், விட்டுக்கொடுத்தல், மற்றும் ஈகோவைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் துணை நிற்பது ஆகியவற்றை 'வா' வலியுறுத்துகிறது. உறவில் அமைதி நிலவுவதை ஒரு முக்கிய இலக்காகக் கருதிச் செயல்படுவது வாழ்வை மகிழ்ச்சியாக மாற்றும்.