
வீட்டில் புகைப்படங்களை மாட்டுவது நாகரிக கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அறையின் எந்த இடத்தில், எந்த மாதிரியான புகைப்படங்களை மாட்டலாம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். வீட்டில் புகைப்படங்கள் வைத்துக் கொள்வது என்பது ஒன்றரை நூற்றாண்டு கால பழக்கமாக நம்மில் இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்களை பிரேம் போட்டு வீட்டில் மாட்டும் வழக்கமும் இருந்தது.
அதற்கும் முன்பு அரண்மனைகள் மற்றும் செல்வந்தர் வீட்டு பங்களாக்களின் சுவற்றில் ஓவியம் தீட்டும் வழக்கம் இருந்தது. அந்த ஓவியங்கள் காண்பவரைக் கவரும் வண்ணம் இருந்தன. ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அதுபோலவே வீட்டில் மாட்டும் புகைப்படங்களுக்கும் ஒரு பொருள் உண்டு. அந்த பொருள் அந்த அறைக்குத் தகுந்தாற் போல இருக்க வேண்டும். வீட்டின் எந்த அறையில் எந்த மாதிரி புகைப்படங்களை வைத்திருக்கலாம் என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.
வாசல்: வீட்டு வாசல் என்பது ஒருசிலருக்கு காம்பவுண்ட் சுவருக்குள் இருக்கும், சிலருக்கு சாலையை பார்த்தவாறு திறந்தவெளியில் இருக்கும். திறந்தவெளியில் இருக்கும் வாசல்கள் வீட்டின் முகப்பையும் வீட்டின் கம்பீரத்தையும் பறைசாற்றும் வகையில் இருக்கிறது. இந்திய கலாசாரப்படி வீட்டு வாசலில் திருஷ்டி இல்லாமல் இருப்பது அவசியம். அதனால் இந்து மதத்தவர்கள் வீட்டு வாசலில் கண் திருஷ்டி கணபதி, யானையின் கண், திருஷ்டி பொம்மை படங்கள் போன்றவற்றை மாட்டலாம். வீட்டு வாசல் பெரியதாக இருக்கும் பட்சத்தில் பெரிய யானைப் படங்களை மாட்டலாம். விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள், அறிஞர்களின் படங்களை வாசலில் மாட்டி, உங்கள் வீட்டு மனநிலையை மற்றவர்க்கு பிரதிபலிக்க வைக்கலாம்.
வரவேற்பறை: வீட்டு வரவேற்பறை என்பது வீட்டிற்கு வரும் பலரும் முதலில் அமர வைக்கப்படும் இடமாக இருக்கிறது. புதிதாக வீட்டுக்கு வரும் நபர்களை வரவேற்பறையில்தான் அமர வைப்போம். அப்போது அவர்கள் அந்த வீட்டின் பாரம்பரியம் பற்றி அறிய வசதியாக வீட்டுப் பெரியோர்களின் படங்களை அங்கு மாட்டலாம். வீட்டுக்கு வருவோரை வரவேற்கும் வகையில் உள்ள பெண்கள் கை கூப்பி வரவேற்கும் படங்களை மாட்டலாம். வீட்டில் உள்ளவர்கள் பரிசு மற்றும் விருது பெறும் புகைப்படங்களையும் வரவேற்பறையில் மாட்டலாம். இதனால் வீட்டில் உள்ளவர்களைப் பற்றி மற்றவர் அறிய உதவும்.
கூடம்: கூடத்தில், வீட்டில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள், திருமணம், காது குத்து, குடி புகுதல் போன்ற விசேஷங்களுக்கு எடுத்த புகைப் படங்களை வைத்திருக்கலாம். அழகிய மயில், புலி, ஓடும் குதிரைகள் போன்ற படங்களையும் பெரிதாக வீட்டு சுவர்களில் அலங்காரமாக வைக்கலாம்.
படிக்கட்டு: மாடிப் படிக்கட்டுகளில் முன்னேற்றம் மிக்க தத்துவங்கள் அடங்கிய படங்களையும், அழகிய இயற்கைக் காட்சிகளை சுமக்கும் படங்களையும் மாட்டுவது சிறப்பானதாக இருக்கும். படிகளில் ஏறும்போது முன்னேற்றம் மிகுந்த தத்துவங்களை படிப்பது மனதிற்கு உறுதி தரும்.
பூஜையறை: இங்கு கடவுளர்களின் புகைப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அல்லது உயிருடன் இல்லாத அந்த வீட்டை சேர்ந்தவர்களின் படங்களையும் பூஜை அறையில் வைக்கலாம். ஆனால், கடவுள் படங்களோடு சேர்த்து அல்ல.
படுக்கையறை: இங்கு மகிழ்ச்சிகரமான சூழலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மாட்டலாம். இந்தப் புகைப்படங்களை அடிக்கடி பார்ப்பதன் மூலம் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். சொந்த புகைப்படங்கள் மட்டும் இல்லாமல் பிடித்த நடிகர், நடிகைகள், பிடித்த விலங்குகள் ஆகிய படங்களையும் மாட்டலாம். சில வேளைகளில் நீங்கள் விரும்பும் எந்தப் படத்தையும், மனதிற்கு மகிழ்ச்சி தரும் படங்களையும் அறைகளில் வைக்கலாம்.