
மாணவர்களுக்கு சிறு வயது முதலே எவர்கிரீன் படிப்புகளான டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மேலும், பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக மாற்றும் வித்தைகளை பெற்றோர்கள் சிறு வயது முதலே அவர்கள் மனதில் விதைக்கிறார்கள். அந்த வகையில் 2025ல் அதிக சம்பளம் கொடுக்கும் 5 தொழில் துறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அனிமேட்டர் மற்றும் கேம் டிசைனர்: அனிமேட்டர் மற்றும் கேம் டிசைனர்களுக்கான தேவை ஓடிடி மொபைல் கேம்கள் மற்றும் விஆர் போன்ற துறைகளின் வளர்ச்சியினால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. B.Des, BFA அல்லது டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரினா அனிமேஷன் அல்லது MAAC நிறுவனங்கள் வருடத்திற்கு ரூபாய் 4 லட்சத்திலிருந்து 8 லட்சம் வரை சம்பளம் கொடுக்கிறது. அனுபவம் அதிகமாக இருந்தால் சம்பளம் அதிகரிப்பதோடு பிற சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
2. நெறிமுறை ஹேக்கர்கள்: நெறிமுறை ஹேக்கர்கள் கணினி பாதுகாப்பை சட்டப்பூர்வமாக சரிபார்ப்பதால் ஆன்லைன் தரவு மற்றும் கணினி பாதுகாப்பிற்கு ஒவ்வொரு நிறுவனமும் முன்னுரிமை அளிக்கிறது. இதற்கு உதவும் CEH/OSCP சான்றிதழ்களுடன் கூடிய BCA / MCA படிப்பை முடித்தவர்களுக்கு ஆரம்ப சம்பளமாக ரூபாய் 8 லட்சத்தில் இருந்து ரூபாய் 10 லட்சம் வரை வருடத்திற்கு வழங்கப்படுகிறது. அனுபவத்திற்கேற்ப வருட சம்பளமாக ரூபாய் 20 லட்சத்தில் இருந்து ரூபாய் 30 லட்சம் வரையில் பிற சலுகைகளுடன் வழங்கப்படுகிறது.
3. டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்: சமூக ஊடகங்கள் மற்றும் மின் வணிக யுகத்தில், டிஜிட்டல் சந்தைப்படுத்துபவர்களின் தேவை எல்லா இடங்களிலும் அதிகரித்து இருப்பதால் எந்தவொரு பட்டதாரியும் கூகிள், மெட்டா அல்லது கோர்செராவிலிருந்து சான்றிதழ்களுடன் படிப்பைத் தொடங்கலாம். தொடக்க சம்பளமாக ரூபாய் 5 லட்சத்தில் இருந்து ரூபாய் 8 லட்சம் வரையிலும், அனுபவத்திற்கேற்ப ரூபாய் 15 லட்சத்தில் இருந்து ரூபாய் 20 லட்சம் வரையில் கூடுதல் சலுகைகளுடன் வருட சம்பளமாக வழங்க வாய்ப்பு உள்ளது.
4. தயாரிப்பு மேலாளர்கள்: வாடிக்கையாளர் தேவைகளையும் வணிக இலக்குகளையும் தயாரிப்பு மேலாளர்கள் இணைப்பதால் அதற்குப் பொருத்தமான MBA, BBA அல்லது பொறியியல் பின்னணி கொண்ட படிப்புகளைப் படித்தவர்கள் ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு ரூபாய் 10 லட்சம் முதல் 12 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு Google அல்லது தயாரிப்புப் பள்ளியின் சான்றிதழ்கள் உதவிபுரிகின்றன. திறமைக்கேற்ப ரூபாய் 25 லட்சத்தில் துவங்கி ரூபாய் 30 லட்சம் வரையிலும் சம்பளம் பெற வாய்ப்புகள் உள்ளன.
5. ஊட்டச்சத்து நிபுணர்: வளர்ந்து வரும் சுகாதார விழிப்புணர்வு துறையால் உணவு தொழில்நுட்பம் / ஊட்டச்சத்து / உணவு முறைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஊட்டச்சத்து நிபுணர், உணவியல் நிபுணர் அல்லது தரக்கட்டுப்பாட்டு நிபுணரின் தேவை அதிகமாக இருப்பதால் இந்தப் படிப்புகள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆரம்ப சம்பளம் வருடத்திற்கு ரூபாய் 4 லட்சம் முதல் ரூபாய் 6 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது. திறமைக்கேற்ப ரூபாய் 15 லட்சம் வரையிலும் பெற வாய்ப்புகள் உள்ளன.
எந்தத் துறையில் வேலை செய்தாலும் அந்தத் துறையில் படைப்பாற்றல், தனித்திறமை மற்றும் கற்றல் மனப்பான்மை இருப்பவர்களுக்கு எப்பொழுதுமே அதிக சம்பளம், புகழ் மற்றும் அங்கீகாரம் கிடைப்பதில் எள்ளளவும் ஐயமில்லை.