
தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்ணாடி அணிவது அதிகரித்துக் காணப்படுகிறது. அதிலும் ஆறு வயது குழந்தைகள் கூட அதிகமாகக் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கிறோம். குழந்தைகள் அதிகமாகக் கண்ணாடி அணிவதன் காரணம் குறித்தும் அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் பெற்றோர்கள் செய்ய வேண்டியது குறித்தும் இப்பதிவில் காண்போம்.
அதிகரிக்கும் கண் பாதிப்பு: முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் கண் கண்ணாடி அணிபவர்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், இப்போது நம்மைச் சுற்றி இருப்போரில் பெரும்பாலானோர் கண்ணாடி அணிந்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த பத்து வருடங்களில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அருகே இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கும் கிட்டப்பார்வை பாதிப்பு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு தொலைவில் இருக்கும் பொருட்கள் தெளிவாகத் தெரியாது.
ஆறு வயது குழந்தைக்கு ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதுவதைத் தெளிவாக பார்க்க முடிவதில்லை. ‘தெளிவாகத் தெரியவில்லை‘ என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். கண் தொடர்பான இந்தப் பிரச்னை சமீப காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதான் காரணம்: மருத்துவ வல்லுநர்கள் சில வாழ்க்கை முறை பழக்கங்கள் கிட்டப் பார்வை பாதிப்பை அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர். அதாவது, குழந்தைகள் நீண்ட நேரம் ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்கள் பயன்படுத்துவது அல்லது சிறிய டிஜிட்டல் திரைகளில் நீண்ட நேரம் படிப்பது ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார்கள்.
மேலும், உடலில் இயற்கையாக சூரிய ஒளி படாமல் இருப்பதும் இந்த நிலைக்குக் காரணமாகக் கூறுகிறார்கள். தினமும் குறைந்தது 45 நிமிடங்களாவது வெளியில் விளையாடுவது கிட்டப்பார்வை அதிகரிப்பை குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தற்போது கிட்டப்பார்வை பாதிப்பு ஓரளவு அதிகரித்தது உண்மைதான். ஏனெனில், முன்பு கிட்டப்பார்வை குறித்த விழிப்புணர்வு போதிய அளவுக்கு இல்லாததால் சீக்கிரம் டெஸ்ட் செய்ய மாட்டார்கள். ஆனால், இப்போது விழிப்புணர்வின் காரணமாகத் தொடக்கத்திலேயே டெஸ்ட் செய்து கிட்டப்பார்வையை கண்டுபிடித்து விடுவதால் அதை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வழி தேடுகிறார்கள்.
முன்கூட்டியே கண்டறிவது நல்லது: கிட்டப்பார்வை பாதிப்பை சீக்கிரமே கண்டுபிடித்து விட்டால் அதை திறமையாக நிர்வகிக்க முடியும். வீட்டில் உள்ள யாராவது கண்ணாடி அணிந்து வருபவர்களாக இருந்தால் அங்குள்ள குழந்தைகள் வழக்கமான பரிசோதனைகளை கட்டாயம் அடிக்கடி செய்துகொள்ள வேண்டும்.
கண் தொடர்பான பிரச்னைகளுக்கு தொடக்கத்திலேயே சிகிச்சை அளிக்கவில்லை என்றால் அது பார்வை குறைபாடு ஏற்படுத்தி சிக்கல்களை உருவாக்கும். தற்போது கிட்டப்பார்வையை கட்டுப்படுத்தவும் நிர்வாகிக்கவும் கண்ணாடிகள் வந்து விட்டதால் இந்த பாதிப்பை திறம்பட நிர்வகிக்க முடியும்.
பெற்றோர் செய்ய வேண்டியது: சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட குழந்தைகளின் பார்வையை பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் பெற்றோர்களுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது. குழந்தைகள் ஸ்கிரீன்களை பார்க்கும் நேரத்தை கட்டுப்படுத்துவதோடு ஸ்மார்ட் ஃபோன்களுக்கு பதிலாக டெஸ்க்டாப் அல்லது டிவிகளில் வீடியோ பார்க்க வைக்கலாம். இதனால் கண்களில் ஏற்படும் அழுத்தம் குறைந்து சீரான உடற்பயிற்சி மற்றும் வழக்கமான கண் பரிசோதனைகளும் கண் ஆரோக்கியத்தை உறுதி செய்யும் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.