
உலகிலேயே லண்டன் மாநகரத்திற்கு பிறகு மாநகராட்சியாகிய நகரம் தமிழகத்தின் சென்னைதான். அது 1688ம் ஆண்டு முனிசிபல் கார்பரேஷனாக மாறியது. இந்தியாவின் முதல் நகராட்சி இதுதான். மெட்ராஸ் எனப்பட்ட சென்னை தோன்றிய அதே நாளில்தான் செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் உருவானது. 1639ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டைதான், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டையாகும். இதனால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இங்குதான் இதன் நிர்வாகமும் நடைபெற்றது. இதேபோல், தமிழ்நாடு அரசின் நிர்வாகமும் வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் கோட்டையில்தான் செயல்பட்டு வருகிறது.
உலகிலேயே இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம், தமிழகத்தின் சென்னை உயர் நீதிமன்ற வளாகம்தான். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதிமன்றம்.
தொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், 1862ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என பெயர் மாற்றம் பெற்றது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர்நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர்நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.
ஆசியாவிலேயே முதல் ஏரோ பிளேன் கூவம் நதியின் நடுவே உள்ள தீவில்தான் பறக்க விடப்பட்டது. 1910ம் ஆண்டு இந்த சாதனையை செய்தவர் டி. ஏஞ்சல்ஸ் என்பவர். ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்த ஏழு ஆண்டுகளில் இவர் விமானத்தைப் பறக்க விட்டு சாதனை படைத்தார். இந்தியாவில் முதல் ரயில்வே டிராக், முதல் பேருந்து எல்லாமே சென்னையில் இருந்தது. மெட்ராஸின் ஆளுநராக இருந்த ‘யேல்' பிரபு என்பவர் உருவாக்கியதுதான் அமெரிக்காவில் முக்கிய பல்கலைக்கழகமாக இருக்கும் யேல் பல்கலைக்கழகம்.
நான்காம் ஆங்கிலேய - மைசூர் போரில் திப்பு சுல்தானை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதன் நினைவாக கட்டப்பட்டதுதான் ராஜாஜி மண்டபம். இம்மண்டபமானது கிரேக்கத்தின் பார்த்தினன் கோயிலின் சாயலில் அமைக்கப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்பு ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் சென்னை மாகாண சட்டமன்றக் கூட்டங்கள் இந்த அரங்கிலேயே நடத்தப்பட்டன. அதன் நினைவாக ராஜாஜி காலத்துக்குப் பின்பு, இந்த இடத்துக்கு ராஜாஜி அரங்கம் என்று பெயர் மாற்றப்பட்டது.
கொரோனா வைரஸ் போன்ற நோய் தொற்றுகளை இரத்த மாதிரிகளை கொண்டு அடையாளம் தெரிவிக்கும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் சென்னை கிண்டியில்தான் உள்ளது. இது சென்னை மாகாண சுகாதார கமிஷனராக இருந்த W.G கிங் நினைவாக 1897ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் நிறுவப்பட்டது. பெரிய அம்மை, போலியோ, காலரா மற்றும் இன்புளுவென்சியா நோய்களுக்கு தடுப்பூசி தயாரித்தது இந்நிறுவனம்தான். பென்சிலின் மருந்தை கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளெமிங் 1953ம் ஆண்டு இங்கு வந்து பென்சிலின் மருந்து வேலை செய்வதை டெமன்ஸ்டிரேஷன் செய்து காட்டி உள்ளார்.
இந்தியாவில் மாநிலங்களின் தலைநகரில் இரண்டு சர்வதேச துறைமுகங்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழகத்தின் சென்னை தலைநகரம்தான். இங்கு சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம் என இரண்டு சர்வதேச துறைமுகங்கள் உள்ளன. இந்தியாவில் சென்னை நகரில்தான் அதிக மேம்பாலங்கள் உள்ளன. உலகிலேயே நகரப்பகுதிக்குள் அமைந்திருக்கும் ஒரே தேசிய பூங்கா சென்னை கிண்டி தேசிய பூங்காதான். இது 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டது.
உலகிலேயே அனைத்துத் தரைவழி போக்குவரத்து வாகனங்கள் மற்றும் தரை வழியாக செல்லும் தளவாடங்கள் தயாரிக்கப்படுவது சென்னையில்தான். சைக்கிள் (TI சைக்கிள்) முதல் இரு சக்கர வாகனங்கள், கார், டிரக், ராணுவ பீரங்கிகள், ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் வரை இங்கு தயாராகிறது.
உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘லிப்ட்‘ வசதி கொண்ட கலங்கரை விளக்கங்களில் ஒன்று சென்னை கலங்கரை விளக்கம். இங்கு லிப்ட் மூலம் 9வது தளம் வரை செல்ல முடியும். இந்தியாவில் நகர எல்லைக்குள் அமைந்துள்ள ஒரே கலங்கரை விளக்கம் சென்னை கலங்கரை விளக்கம்தான். இந்த கலங்கரை விளக்கத்திற்கு தேவையான மின்சாரம் சூரிய மின் தகடுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படுவது மற்றொரு சிறப்பு.