இன்றைய உலகில் வீட்டிலிருப்பவர்கள் (Family members) காலையில் வெளியே சென்றால், இரவுதான் வீடு திரும்புகிறார்கள். இதற்கிடையில் உறவுகளுக்குள் பேசிக்கொள்வது என்பதே இயலாத காரியமாகிவிடுகிறது. ஆனால், அனைவரும் கூடி பேசிக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பார்ப்போமா?
இன்றைய வேகமான உலகில், பெரியவர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் என்றால், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிடுகிறார்கள். இதனால், ஒரே வீட்டிலிருந்தாலும், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே தகவல்தொடர்பு குறைகிறது. ஆனால், உறவுகளின் அடித்தளமே மனம் திறந்து பேசுவதுதான். தினமும் சிறிய அளவில் நேரத்தை ஒதுக்கிப் பேசுவதன் மூலம் குடும்ப உறவுகள் எப்படி வலுவடைகின்றன, மேலும் சண்டைகள் இல்லாத நிம்மதியான குடும்ப வாழ்க்கை எப்படிச் சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்.
தகவல்தொடர்பு என்பது வெறுமனே பேசுவது மட்டும் அல்ல; அது அனைவரின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் பரிமாறிக் கொள்வது ஆகும்.
சண்டைகள் அல்லது தவறான புரிதல்கள் எழும்போது, மனம் விட்டு பேசுவது மூலமே அவற்றைத் தீர்க்க முடியும். பேசாமல் இருப்பது பிரச்னையை மேலும் வளர்க்கும்.
நீங்கள் ஒருவர்மீது அக்கறை கொள்கிறீர்கள் என்பதற்கு உரையாடலே சிறந்த வழி. அன்பு என்பது ஒரு செயல். அதைச் சொல்வதும் ஒரு செயல்பாடுதான்.
குறிப்பாகப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பேசும்போது, அவர்கள் தைரியமாகத் தங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளும் நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் வளர்கிறது.
தினமும் அந்த 'அவசியமான 5 நிமிடங்கள்'
வேலைப்பளு, படிப்பு, வீட்டு வேலைகள் என ஆயிரம் கடமைகளுக்கு நடுவில், ஒரு குடும்பம் முழுவதுமாகக் கூடிப் பேச குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களை ஒதுக்குவது மிக முக்கியம்.
நீங்கள் மணிக்கணக்கில் பேச வேண்டியதில்லை. நீங்கள் பேசும் அந்தச் சில நிமிடங்கள் தரமானதாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் ஃபோன், டிவி அல்லது வேறு கவனச்சிதறல்கள் இருக்கக் கூடாது.
இரவு உணவு சாப்பிடும்போது, அல்லது அனைவரும் படுக்கைக்குச் செல்லும் முன் என ஒரு குறிப்பிட்ட நேரத்தை இதற்கு ஒதுக்கலாம்.
பேசும் நேரத்தைவிட, மற்றவர்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பது மிக முக்கியம். உங்கள் துணையை அல்லது பிள்ளைகளை குறுக்கிடாமல், அவர்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
"ஆமாம், பிறகு என்ன நடந்தது?" போன்ற கேள்விகளைக் கேட்பது, அவர்கள் தொடர்ந்து பேச ஊக்கமளிக்கும்.
சண்டைகள் வரும்போது, "நீதான் தவறு செய்தாய்" என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, "உன்னுடைய இந்தச் செயலால் நான் இப்படி உணர்ந்தேன்." என்று உங்கள் உணர்வுகளை 'நான்' வார்த்தையில் பேசினால், எதிரே உள்ளவர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள அவதிப்படுவது குறையும்.
உறவுகள் வலுப்பெறுவதன் ரகசியம்
தொடர்ச்சியான இந்தச் சிறிய உரையாடல்கள் குடும்ப உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள்:
நாள் முழுவதும் வெளியில் அல்லது பணியிடத்தில் ஏற்பட்ட மன அழுத்தத்தை, வீட்டில் உள்ளவர்களுடன் சில நிமிடங்கள் பேசும்போது அது குறைகிறது. துணைக்கு ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு கிடைக்கிறது.
நீங்கள் எதிர்பார்ப்பது என்ன, உங்கள் துணையின் எதிர்பார்ப்பு என்ன என்பதில் தெளிவு பிறக்கும். இதனால், எதிர்பார்ப்பு பூர்த்தியாகாததால் வரும் சண்டைகள் குறையும்.
தினமும் பேசுவது, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஒருவலுவான இணைப்பை உருவாக்குகிறது. இந்த இணைப்பே, எந்த ஒரு சூழ்நிலைகளிலும் குடும்பம் உடையாமல் பாதுகாக்கும்.
தினமும் 5 நிமிடங்கள் ஒதுக்கி, உங்கள் கவலைகள், மகிழ்ச்சி மற்றும் அன்றைய நாளில் நடந்த சிறிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் அன்பும் நிம்மதியும் நிறைந்து உங்கள் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.