
தற்போது பல குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் சென்று வருகின்றனர். அதனால் வார நாட்களில் இருவரும் மனம் விட்டுப் பேசவோ அன்பைப் பரிமாறிக் கொள்ளவோ முடிவதில்லை. வார இறுதி நாட்களில், கீழ்கண்ட ஐந்து முக்கியமான விஷயங்களைக் கடைப்பிடித்தால் அவர்கள் மகிழ்ச்சியாக, திருப்தியான வாழ்க்கை வாழலாம் என உளவியல் கூறுகிறது. அவை என்ன என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. மொபைல் ஃபோன்களை தூர வைத்தல்: மொபைல் ஃபோன் கையில் இருந்தால் அதில் வரும் குறுஞ்செய்தி, ஈமெயில், சமூக வலைதளச் செய்திகள் என நிறைய கவனச் சிதறல்கள் ஏற்படும். நாள் முழுவதும் மொபைல் போனை தவிர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரமாவது தம்பதியர் இருவரும் மொபைல் போன்கள் கையில் இல்லாமல் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே காபி அருந்துதல் அல்லது மாலை நேரத்தில் வாக்கிங் போய் வருதல் என நேரம் செலவிட வேண்டும்.
2. மனம் விட்டுப் பேசுதல்: வார நாட்களில் இருவரும் தத்தம் பணிகளில் மூழ்கி இருப்பார்கள். வார இறுதி நாட்களில், தம் உணர்வுகள், எண்ணங்கள், கவலைகள், யோசனைகள் போன்றவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் பேசும்போது மற்றவர் பொறுமையாக ஆர்வமாகக் கேட்க வேண்டும். முழு கவனத்துடன் குறுக்கிடாமல் கேட்கும்போதே துணையின் கவலையோ அல்லது சிக்கலோ பாதி தீர்ந்துவிடும். உள்ளார்ந்த உரையாடல்கள் இருவருக்கிடையேயான பாசத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கும்.
3. என் நேரம் / நமது நேரம்: கடுமையான அலுவலகப் பணிகளுக்கு இடையே வாரம் முழுக்க மூழ்கி விட்டு வார இறுதியில் தனக்கான (me time) நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ அதேபோல நமக்கான நேரமும் (We time) முக்கியம். உளவியலாளரின் கருத்துப்படி இந்த இரண்டு விஷயங்களையும் ஒரே நேரத்தில் செய்யலாம். எப்படித் தெரியுமா? கணவர் டி.வியில் படம் பார்த்துக் கொண்டு இருந்தால் மனைவி அதே சோபாவில் அருகில் அமர்ந்து கொண்டு புத்தகம் படிக்கலாம். இருவரும் வேறு வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் இருவரின் அருகாமையும் ஒருவிதமான புரிதலையும் அன்பையும் ஏற்படுத்தும்.
4. விளையாட்டுத்தனமான கொண்டாட்டங்கள்: இருவரும் ஒன்றாக ஏதாவது விளையாட்டுகளில் ஈடுபடலாம். செஸ் விளையாடுவது, கேரம் விளையாடுவது அல்லது ஒன்றாக நடனமாடுவது போன்ற மகிழ்ச்சிகரமான விளையாட்டுத்தனமான கொண்டாட்டங்கள் தம்பதியருக்கிடையேயான காதலை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அடுத்து வரப்போகும் வாரம் முழுவதும் அது ஒரு சிறந்த எனர்ஜி பூஸ்ட்டராக இருக்கும். இருவரும் சேர்ந்து இருப்பதும் வாய்விட்டு சிரிப்பதும் ஒற்றுமையாக இருப்பதற்கு மிக முக்கியமான அடிப்படை விஷயம்.
5. எதிர்காலத்தைத் திட்டமிடுதல்: ஒன்றாக சேர்ந்து ஒரு திரைப்படம் பார்ப்பது, சீரியல் பார்ப்பது, ஒன்றாக சமைப்பது, இருவரும் மார்கெட் அல்லது மளிகை வாங்கி வருவது போன்ற வாராந்திர இறுதிச் செயல் ஒன்றை கட்டாயமாக உருவாக்க வேண்டும். பின்பு, அடுத்த வாரம் அல்லது அடுத்த மாதத்திற்கான நிதி நிலைமை, வீட்டு வேலைகள், எதிர்கால இலக்குகள் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ளலாம்.
வார இறுதி நாட்களில் தம்பதியர் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மற்ற நாட்களில் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவழிக்க முடியாததை ஈடுகட்டவும் அவர்களுக்கிடையேயான பிரியத்தையும், அன்பையும் வளர்க்க உதவும்.