நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் உணவுகளில் கொட்டைகளும் விதைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. அவற்றுள் முதன்மையான வால்நட் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம் மூளை வடிவிலான வால்நட் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்தது. இதில் டோக்கோஃபெரால்ஸ் (tocopherols), பாலிபினால்ஸ் (polyphenols) உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆல்ஃபா லினோலெனிக் (alpha-linolenic) ஆசிட் உள்ளிட்ட ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உடலில் வீக்கங்களைக் குறைக்கவும் உதவும்.
இதிலுள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகளின் அளவையும் ட்ரைகிளிசெரைட்களின் அளவையும் குறைக்க வல்லவை. இதனால் இதய இரத்த நாளங்களில் நோய் உண்டாகும் அபாயம் தடுக்கப்படுகிறது. வால்நட்டில் உள்ள வைட்டமின் E, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாலிபினால்ஸ் ஆகியவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அறிவாற்றல் அதிகரிக்க உதவும். மேலும் இவை அல்ஸிமெர் எனும் மறதி நோய் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட (neurodegenerative) வியாதிகள் வரும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
வால்நட்டை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உட்கொண்டால் பக்கவிளைவுகளாக ஒருசில உடல் நலக் கோளாறுகள் உண்டாகவும் வாய்ப்புண்டு. ஒரு நாளைக்கு ஒரு அவுன்ஸ் வால்நட் மட்டுமே உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அளவுக்கு மேல் தொடர்ந்து உட்கொள்ளும்போது உண்டாகும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
1. செரிமானக் கோளாறு: வால்நட்டை குறிப்பிட்ட அளவில் உட்கொண்டால் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, வயிறு வீக்கம், வாய்வு, வயிற்றுப்போக்கு போன்ற அசௌகரியங்கள் உண்டாகக் கூடும்.
2. ஒவ்வாமை: சிலருக்கு மரத்திலிருந்து பெறப்படும் கொட்டைகளை உண்ணும்போது அலர்ஜி உண்டாகி எரிச்சல், வீக்கம் போன்ற அறிகுறிகளுடன் அனாஃபிலாக்ஸிஸ் (Anaphylaxis) எனப்படும் தீவிரமான ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைக்குக் கூட கொண்டு செல்லக் கூடும். எனவே, ஒவ்வாமை உள்ளவர்கள் வால்நட் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நலம்.
3. உடல் எடை அதிகரிக்கும்: ஒரு அவுன்ஸ் வால்நட்டில் 185 கலோரிகள் உள்ளன. இதிலேயே உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைத்துவிடும். இதற்கு அதிகமாக உட்கொள்ளும்போது அதிலுள்ள அதிகளவு கொழுப்புகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யவே பயன்படும்.
4. சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும்: கிட்னியில் கற்கள் உண்டாகச் செய்யும் ஆக்ஸலேட் (Axalate) என்ற கூட்டுப்பொருள் வால்நட்டில் உள்ளது. இதை கால்சியம் குறைவான உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம். கிட்னி ஸ்டோன் உண்டாக வாய்ப்புள்ள நபர்கள் குறைந்த அளவு வால்நட் எடுத்துக் கொண்டு அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.
5. ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் சிரமம்: அளவுக்கு அதிகமான வால்நட் சாப்பிட்டால் அதில் உள்ள ஃபைடிக் (Phytic) ஆசிட் என்ற இயற்கைக் கூட்டுப்பொருளின் அளவு உடலில் அதிகரிக்கும். இது இரும்புச் சத்து, சிங்க் மற்றும் கால்சியம் போன்ற கனிமச் சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படுவதற்கு தடை உண்டாக்கும். உடலில் கனிமச்சத்துக் குறைபாடு ஏற்படும்போது அது சம்பந்தமான உடற்கோளாறுகள் உண்டாக வாய்ப்பு உருவாகும்.
எனவே, எந்த உணவானாலும் 'போர்ஷன் கண்ட்ரோல்' (Portion control) முறையை பின்பற்றுவதே ஆரோக்கியம்.