
செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) விரைவான வளர்ச்சியைக் கண்டுவரும் இந்த யுகம், எதிர்காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வேலை வாய்ப்புச் சந்தைகளின் முகத்தையே மாற்றிவிடும் சக்தி கொண்டது. இன்று கற்பிக்கும் பாடங்கள், வேலைகள் தானியங்கி (Automated) மயமாக்கப்பட வாய்ப்புள்ளதால் நம் குழந்தைகளை எதிர்காலத்திற்கு ஏற்பத் தயார் செய்வது பெற்றோரின் கடமையாக உள்ளது. அந்த வகையில் நம் குழந்தைகளை AI உலகில் வெற்றியாளர்களாக மாற்றுவதற்கு பெற்றோர்களுக்குத் தேவையான 5 வழிகாட்டல்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
1. சிந்தனை திறனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: முழுமையான படைப்பாற்றலையும் (Creativity) ஆழமான பகுப்பாய்வு சிந்தனையையும் (Analytical Thinking) எந்த ஒரு இயந்திரமும் சிந்திப்பதில்லை. ஆகவே, இன்றைய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் சரியான விடை என்ன? என்று கேட்பதைவிட, ‘ஏன் இந்த விடையை தேர்ந்தெடுத்தாய்?’ என்று கேட்டுப் பழக வேண்டும். இதுதான் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான பல வழிகளை குழந்தைகள் கண்டறிய ஊக்குவிக்கும் முறையாக இருப்பதோடு, AI யால் மாற்ற முடியாத மனிதனின் அடிப்படை திறனாகும்.
2. தொழில்நுட்பத்தை ஒரு கருவியாகக் கற்றுக்கொடுங்கள்: கணிதத்தைப் போல கணினி மொழி (Coding) அல்லது நிரலாக்கம் (Programming) போன்றவை ஒரு மொழியாகும். ஆகவே, தரவு அறிவியல் (Data science) மற்றும் அடிப்படைத் தொழில்நுட்ப கருத்துக்களை இளம் வயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து, தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதனைப் புரிய வைக்க வேண்டும். AI கருவிகளை பொழுதுபோக்கு அம்சமாக கருதாமல், கற்றலுக்கு சக்தி வாய்ந்த கருவியாக மாற்ற வேண்டும்.
3. மனிதப் பண்புகளுக்கு அதிக மதிப்பளித்தல்: மனித உணர்ச்சிகள், பரிவு, தலைமைப் பண்பு, கூட்டுறவு (Collaboration) போன்ற பண்புகள் AI க்கு வராது. அதிக சம்பளத்துடன் கூடிய வேலைகள் அனைத்தும், எதிர்காலத்தில் மனிதப் பண்புகள் தேவைப்படும் துறைகளில்தான், அதாவது குழுவாகப் பணியாற்றுவது, மற்றவர்களுடன் தொடர்புகொள்வது, உணர்ச்சிகளைச் சரியாக வெளிப்படுத்துவது மற்றும் தார்மீக மதிப்புகளுடன் (Ethics and Values) முடிவெடுப்பது போன்றவற்றை சார்ந்து இருக்கும் என்பதால் நம் குழந்தைகளை ஒரு தலைவராக நிலைநிறுத்த இத்தகைய திறன்களை வளர்க்க வேண்டும்.
4. வாழ்நாள் முழுவதும் கற்கும் மனப்பான்மை: இன்று பெற்ற ஒரு பட்டம் அடுத்த ஐந்தாண்டுகளில் காலாவதி ஆகிவிடும் என்பதால் குழந்தைகளிடம் பெற்றோர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற மனப்பான்மையை விதைக்க வேண்டும். தொழில்நுட்பம் வேகமாக மாறி வருவதால் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கும் மாறிவரும் உலகிற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதற்கும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும்.
5. பாதுகாப்பான இணையப் பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு: AI யின் அசுர வளர்ச்சி போல இணையத்தில் தவறான தகவல்களும், ஆள் மாறாட்டங்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன. இணையத்தில் ஒரு தகவலைப் பார்த்தால் அது உண்மையா? பொய்யா? என குழந்தைகளுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்க பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது குறித்து எச்சரிக்கையாக இருப்பதையும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
புதிய வாய்ப்புகள் நிறைந்த AI யுகத்தில் நம் குழந்தைகளுக்கு மேற்கூறிய திறன்களை அளிப்பதன் மூலம் அவர்களை தலைமை ஏற்கும் பதவிக்கு அழைத்துச் செல்லலாம்.