
நின்றுகொண்டே வேலை செய்வதில் பல நன்மைகள் உள்ளன. நாற்காலியில் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் குனிந்து வேலை செய்வது முதுகு வலி, தோள் வலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பொழுதெல்லாம் நின்றுகொண்டே வேலை செய்ய மேசைகள் மற்றும் ட்ரெட்மில் மேசைகள் பிரபலமடைந்து வருகின்றன. இவை வசதியாகவும், பாதுகாப்பாகவும் வேலை செய்ய உதவுகின்றன. கணினி வேலையால் ஏற்படும் முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்னைகள் இதனால் பெருமளவில் குறைகிறது.
நின்றுகொண்டு வேலை பார்ப்பதைக் காட்டிலும் உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பது சௌகரியமாகவும் நிம்மதியாகவும் இருக்கும் என்று நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்வது நல்லது. நின்றுகொண்டே அலுவலக வேலை பார்ப்பது, பல மணி நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளைக் குறைக்கவும், உடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை விட, நிற்பது இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிற்கும்பொழுது உடல் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும், நின்றுகொண்டு வேலை பார்ப்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். சரியான பணிச்சூழலை அமைப்பதன் மூலம் கழுத்து மற்றும் முதுகு வலிகளையும் தடுக்கலாம்.
நின்றுகொண்டே வேலை செய்வதன் நன்மைகள்: நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பதை விட, நின்று வேலை செய்வது அதிக உடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இது தசை விறைப்பு மற்றும் மீண்டும் மீண்டும் ஏற்படும் வலிகளையும், தசைக் காயங்களையும் தடுக்க உதவுகிறது. மொத்தத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது.
இதற்கு நிற்கும் மேசை (Standing Desk) கொண்டு நின்றுகொண்டே வேலை செய்ய உதவும் வகையில் நம்முடைய மேஜையின் உயரத்தை சரி செய்யக்கூடிய 'நிற்கும் மேஜை'யைப் பயன்படுத்தலாம். நீண்ட நேரம் ஒரே நிலையில் நாள் முழுவதும் நிற்பதும் நல்லதல்ல. எனவே உட்கார்ந்திருக்கும் மற்றும் நிற்கும் நிலைகளுக்கு இடையில் மாறி மாறி செயல்படுவது நல்லது.
நாள் முழுவதும் ஒரே நிலையில் வேலை செய்வதைத் தவிர்க்க, சிறிது நேரம் உட்கார்ந்தும், பிறகு சிறிது நேரம் நின்றும் வேலை செய்யலாம். இப்படி மாறி மாறி அமர்ந்து - நின்று பணிபுரிவது பல உடல்நலப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும். கண்களுக்கும் ஓய்வு தேவை. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 வினாடிகள் தொலைவில் உள்ள ஒன்றைப் பார்க்க வேண்டும் (20 – 20 - 20 விதி). ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை எழுந்து காலாற சிறிது நடந்து வரலாம்; தண்ணீர் குடிக்கச் செல்லலாம் அல்லது மற்ற வேலைகளுக்காக எழுந்து செல்லலாம்.
நின்றுகொண்டு வேலை செய்வது, உட்கார்ந்து வேலை செய்வதை விட அதிக கலோரிகளில் எரித்து, உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதால், உடலில் ஆற்றல் அதிகரித்து மனநிலையை மேம்படுத்துகிறது.